செம்மரம் வெட்டப் போன அப்பாவித் தமிழர்களை ஆந்திர காவல்துறை, செம்மரக் கடத்தல்காரர்கள் என குற்றம் சாட்டி சுட்டுக் கொன்ற உண்மைச் சம்பவத்தை மையப்படுத்திய உணர்வுபூர்வமான படைப்பாக ‘ரெட் சாண்டல்.’
செம்மரக் கடத்தல் கும்பலிடம் சிக்கியிருக்கும் தான் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த இளைஞனை மீட்க ஆந்திராவுக்குப் போகும் நாயகன் வெற்றி சந்திக்கும் சவால்கள், தடைகள், அனுபவிக்கிற ரணங்களே கதைக்களம். அந்த கதைக்களத்தை மையமாக வைத்து செம்மரக் கடத்தல் விவகாரத்தில் தொடர்புடைய பெரும்புள்ளிகள், அரசியல் தலையீடு, ஏழை எளிய தமிழர்களை குற்றவாளிகளாக்குகிற சதித்திட்டம், சுட்டுக் கொல்கிற வெறியாட்டம் என பலவற்றை அதனதன் தன்மையோடு பதிவு செய்ய முயற்சித்திருக்கிறார் இயக்குநர் குரு ராமனுஜம்,
கதைநாயகனாக வெற்றி. ஆந்திர காவல்துறையிடம் செம்மரக் கடத்தல் பேர்வழிகளில் ஒருவராக சிக்கிச் சின்னாபின்னமாவது, செம்மர கடத்தல் வழக்கில் சிக்க வைக்கப்பட்ட அப்பாவித் தமிழர்களை மீட்கப் போராடுவது, தான் கற்ற பாக்ஸிங் தற்காப்புக் கலையை சந்தர்ப்பத்துக்கேற்ப பயன்படுத்துவது, செம்மரக் கடத்தல் மாபியாக்களுக்கு துணை போகும் காவல்துறை உயரதிகாரியை தண்டிக்கும் துணிச்சல் என தான் வரும் காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார். வெளி மாநிலங்களில் வேலைக்குப் போக தயாராகிறவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்குட்பட்ட காவல் நிலையத்தில் பதிவு செய்வதன் அவசியத்தை அவரது கதாபாத்திரம் மூலம் உணர்த்தியிருப்பது இயக்குநரின் புத்திசாலித்தனம்.
அப்பாவித் தமிழர்களாக, அதிக சம்பளத்துக்கு ஆசைப்பட்டு செம்மரம் வெட்டப் போய் ஆந்திர காவல்துறையிடம் சிக்கவைக்கபடுகிறவர்களில் ஒருவராக வருகிற எம் எஸ் பாஸ்கரின் சற்றே மாறுபட்ட தோற்றமும் தேர்ந்த நடிப்பும் கவர்கிறது.
ஆரம்பக் காட்சிகளில் லத்தியின் துணையோடு காவல்துறை அதிகாரியாக கொடூர முகம் காட்டும் கணேஷ் வெங்கட்ராமன் கிளைமாக்ஸில் எடுக்கும் வேறொரு அவதாரம் திரைக்கதையின் திருப்பத்துக்கு உதவியிருக்கிறது.
சில காட்சிகளில் மட்டுமே வந்து போகிற கதாநாயகி தியா மயூரி லட்சணமாக, இளமையாக இருக்கிறார். கொடுத்த வேலையை சரியாகச் செய்திருக்கிறார்.
வில்லனாக வருகிற ‘கே.ஜி.எஃப்’ ராமின் மிரட்டல் அவர் வரும் காட்சிகளுக்கு பலம் சேர்க்க, வினோத் சாகர், மாரிமுத்து, ரவி வெங்கட் ராமன் என இன்னபிற நடிகர்களின் பங்களிப்பு கதையோட்டத்தோடு நேர்த்தியாக கைகோர்த்திருக்கிறது.
மிக சாதாரணமாக நகரும் காட்சிகளுக்கு தன் பின்னணி இசையால் வேகமூட்டியிருக்கிறார் சாம் சி.எஸ்.
இருள் சூழ்ந்த வனப்பகுதியில் கடந்தோடும் காட்சிகளை உறுத்தலின்றி வளைத்துச் சுருட்டியிருக்கிறது சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவு.
ஏழை எளிய தமிழர்களிடம் அதிக சம்பளம் தருவதாக ஆசைகாட்டி, செம்மரம் வெட்டுவதற்காக அழைத்துச் சென்று, அவர்களின் உழைப்பை பயன்படுத்திக் கொண்டு, அவர்களை செம்மரக் கடத்தல்காரர்களாக்கி, உயிரைப் பறிப்பது வரை நடக்கும் கொடுமைகளை விரிவாக காட்சிப் படுத்தியிருப்பது சமூகத்திற்கான விழிப்புணர்வுப் பங்களிப்பு!