காட்டு விலங்குகளை வேட்டையாடும் குற்றவாளிக்கும், காட்டையும் காட்டு விலங்குகளையும் நேசிக்கிற ஒருவனுக்கும் இடையில் நடக்கும் மோதலை மையப்படுத்திய கதையில், சபரி மலை ஐயப்பனை தூக்கி வைத்துக் கொண்டாடியிருக்கும் படம்.
பருவம் மாறி பெய்கிற மழைபோல், ஐயப்ப பக்தர்கள் மாலையிட்டு வழிபடும் கார்த்திகை, மார்கழி மாதத்தில் வந்திருக்க வேண்டிய படைப்பு அழகர் ஆற்றில் இறங்கும் காலகட்டத்தில் திரையரங்கேறியிருக்கிறது.
கதையின் நாயகனாக, காட்டு விலங்குகளை நேசிக்கிறவராக, காட்டில் தேனெடுத்து பிழைப்பு நடத்துபவராக விஜய் பிரசாத். மணமாகி பல வருடங்கள் கடந்தபின்னும் குழந்தையில்லாத வேதனையில் துடிப்பது, காட்டில் கிடக்கும் ஆதரவற்ற குழந்தையை தூக்கி வந்து சொந்த குழந்தையாக வளர்ப்பது, வில்லனுடன் ஆக்ரோஷமாக மோதுவது, ஊராருக்கும் ஐய்யப்ப பக்தர்களுக்கும் விரோதியாகி மன உளைச்சலுக்கு ஆளாவது, மாலையிட்டபின் ஐயப்பனை போற்றும் பாடலில் பரவசத்தில் மிதப்பது என பாராட்டும்படியான நடிப்புப் பங்களிப்பை தந்திருக்கிறார்.
வீடு கட்ட வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் கட்டிய வீட்டையும், தன் உடலிலிருக்கும் உயிரையும் பறிகொடுக்கும் பரிதாபமான கேரக்டரில் வருகிற சார்லியின் நடிப்பில் வழக்கம்போல் நல்ல உயிரோட்டமிருக்கிறது.
நாயகனுக்கு மனைவியாக வருகிற காயத்ரி ரெமா, வில்லன் என இன்னபிற பாத்திரத்தை ஏற்றிருப்போரின் பங்களிப்பில் குறையில்லை.
அடிமையாக நடத்தும் மனைவியிடம் மாட்டிக்கொண்டு அவதிப்படுவது, குப்பைத் தொட்டி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவது என காமெடி டிராக்கில் கிச்சுக்கிச்சு மூட்டுகிறார் விஜய் டிவி ராமர்.
அரவிந்த் பாபுவின் இசையில் ‘இவனே இவனே வீரனின் சூரன் பாடல் உற்சாகத்தை தூண்டிவிட்டு சிலிர்ப்பூட்டுகிறது. அதே சிலிர்ப்பை ‘பறவைகள் மோதி பாறைகள் உடைவதில்லை; அதேபோல் என் மீது வைக்கும் உங்கள் நம்பிக்கையும் உடையப் போவதில்லை’ என்ற ஐயப்பனின் அருள்வாக்காக ஒலிக்கும் வசனமும் தருகிறது.
‘அன்பில்லா உலகிலே அன்பாக வந்தவனே’ பாடல் தாலாட்டுகிறது.
ராஜீவ் ராஜேந்திரனின் ஒளிப்பதிவில் இருக்கும் தரத்துக்கு தனி பாராட்டு!
கமர்சியல் அம்சங்களோடு கதையை நகர்த்தியிருக்கிற இயக்குநர் ஐயப்பன், ‘காட்டு விலங்குகளை நேசிக்க வேண்டும்’, ‘தன் தகுதிக்கு மீறி கடன் வாங்கக் கூடாது’ என சமூகத்துக்கு அள்ளிக் கொடுத்திருக்கும் அறிவுரைகள் மதிக்கத்தக்கது. அவரது சமூக அக்கறை பாராட்டத்தக்கது!
அந்த இயக்குநர் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால், ரூபன் வசூலில் விஸ்வரூபனாகியிருப்பான்!