நடிகர் சௌந்தரராஜா சுந்தரபாண்டியன், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘தர்மதுரை’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘பிகில்’, ‘சங்கத் தமிழன்’, ‘ஜகமே தந்திரம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர். சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ‘பத்து தல’ படத்திலும் நடித்திருந்தார்.தற்போது அவர் அனில் தேவ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கட்டிஸ் கேங்’ என்ற மலையாள படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். ஓசியானிக் மூவிஸ் சார்பில் சுபாஸ் ரகுராம் தயாரிக்கும் இந்த படத்தில் கதாநாயகனாக உன்னி லால், கதாநாயகியாக விஷ்மயா நடிக்கின்றனர்.
ராஜ் கார்த்திக் எழுத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு நிகில் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுவாக இயற்கை மீது அதிக ஆர்வம் கொண்ட நடிகர் சௌந்தரராஜா மரங்கள் நடுவது பற்றியும் அதனை பாதுகாப்பது பற்றியும் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் உலக சுற்றுச்சூழல் தினமான இன்று ‘கட்டிஸ் கேங்’ படக்குழுவினரோடு சேர்ந்து மரக்கன்றுகள் நட்டு இயற்கை மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.