ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, ஆர். ஜே. விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘எல் ஜி எம்.’
இந்த படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கி, இசையமைத்திருக்கிறார்.
முழு நீள குடும்ப பொழுதுபோக்கு நகைச்சுவை படைப்பாக சித்திரமாக தயாராகி இருக்கும் இந்த படத்தை தோனி என்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனம் சார்பில் சாக்ஷி சிங் தோனி மற்றும் விகாஸ் ஹசிஜா ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள்.
வரும் ஜூலை 28-ம் தேதி வெளியாகவிருக்கும் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. சாக்ஷி சிங் தோனி, ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, ஆர். ஜே. விஜய், இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி, விநியோகஸ்தர் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி பேசுகையில், ”இது ஒரு ஜாலியான படம். இந்த படத்தில் சினிமாத்தனமான வசனங்கள் இல்லாமல், தினசரி வாழ்க்கையில் பேசும் வசனங்கள் தான் இடம் பிடித்திருக்கிறது. கன்டென்ட்டாக பார்க்கும் போது இது ஒரு சர்வதேச அளவிற்கானது. இதற்கு நாங்கள் தீர்வு என்று எதையும் சொல்லவில்லை. அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதைத்தான் வலியுறுத்தி இருக்கிறோம். இது ஒரு ஃபேண்டஸி சப்ஜெக்ட். குடும்பத்தில் இருக்கும் மாமியார், மருமகள் என ஒவ்வொருக்கும் அவர்களுடைய விசயங்களை அப்படியே ஏற்றுக் கொள்வது தான் பொருத்தமானது என்பதை சொல்லியிருக்கிறோம். இதை அறிவுரையாக சொல்லாமல் அற்புதமான தருணங்களாக உணர்த்தியிருக்கிறோம். படத்தை கண்டு ரசித்து ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
ஹரிஷ் கல்யாண் பேசுகையில், ”தோனியின் கோடிக்கணக்கான ரசிகர்களின் நானும் ஒருவன். அவர் தமிழில் தயாரித்திருக்கும் முதல் படத்தில் நானும் நடித்திருக்கிறேன் என்பது எனக்கு கிடைத்த ஜாக்பாட். நதியா, இவானா, ஆர். ஜே. விஜய், யோகி பாபு என அனைவருடனும் பணிபுரிந்தது மறக்க இயலாத அனுபவம். படப்பிடிப்பு தளத்தில் எங்களிடம் இருந்த உற்சாகம் திரையிலும் இடம் பிடித்திருக்கிறது” என்றார்.
நடிகை இவானா பேசுகையில், ”டிரெய்லரில் நான் பேசும் ஒரு டயலாக், ‘எனக்கு ஒரு ஐடியா.’ அது பிரபலமாகிவிட்டது. அந்த வசனத்தை நான் பேசியிருப்பது பெருமிதமாக இருக்கிறது. படத்தில் வசனங்கள் இயல்பாக பேசுவது போல் இருக்கும்” என்றார்.
நடிகை நதியா பேசுகையில், ”இந்தப் படத்தின் கதை மிகவும் சுவாரசியமானது. படத்தில் மெசேஜ் என்று எதுவும் இல்லை. படத்தில் சொல்லியிருக்கும் ஐடியா சாக்க்ஷி தோனியுடையது. அது அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். ஜூலை 28-ம் தேதி தியேட்டருக்கு வாங்க. ஃபேமிலியோட வாங்க. சிரிச்சுக்கிட்டே இருப்பீங்க. சிரிச்சுக்கிட்டே போவீங்க” என்றார்.
சாக்ஷி தோனி பேசுகையில், ”எங்களுக்கும், தமிழ் மக்களுக்கும் இடையே மொழி ஒரு தடையாக இல்லை. தோனிக்கு இங்கு கிடைத்த வரவேற்பு முக்கியமானது. உணர்வுபர்வமானது. இப்படத்தின் கதையை இயக்குநர் ரமேஷ் தமிழ் மணியிடம் சொன்னபோது அவர் அதை திரைப்படமாக உருவாக்கலாம் என்றார். இந்தக் கதையின் கான்செப்ட் என்னுடைய தோழிகளின் வாழ்க்கையிலும், நான் கேட்ட விசயங்களிலும் இருந்தும் உருவானது. மேலும் மாமியார் – மருமகள் பிரச்சனை என்பது உலக அளவிலானது. இந்த படத்தில் அந்த உறவுகள் குறித்த நேர் நிலையான அதிர்வுகளை பற்றி பேசி இருக்கிறோம். உண்மையில் இது ஒரு பாசிட்டிவான படம். பொழுது போக்கு அம்சங்களுடன் தயாராகியிருக்கிறது” என்றார்.
விநியோகஸ்தர் சக்திவேலன் பேசுகையில், ” தோனி உலகம் முழுதும் அறிந்த சர்வதேச கிரிக்கெட் வீரர். அவர் மீது தமிழ் ரசிகர்கள் வைத்திருக்கும் அபிமானத்தின் காரணமாக, அவர் நம் மண்ணை அவருடைய சொந்த மண்ணாக கருதி, தமிழில் தன்னுடைய முதல் திரைப்படத்தை தயாரித்திருக்கிறார். இதனை வெளியிடுவதற்கு கிடைத்த வாய்ப்பை பெருமிதமாக கருதுகிறேன். இந்த திரைப்படம் – குடும்பத்துடன் பார்க்கக்கூடிய கம்ப்ளீட் என்டர்டெய்னர் படமாக இருக்கும். படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து பணியாற்றும் முதல் படம். என்னுடைய 20 ஆண்டுகால நண்பர் ரமேஷ். அவர் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாவது எனக்கு பெருமையான விசயம்.
திரையரங்கத்தில் பணியாற்றும் 60 வயதுள்ள தொழிலாளி ஒருவர், நதியா மீதுள்ள பற்றின் காரணமாக அவரை ஓவியமாக வரைந்து அவரிடம் நேரில் சமர்ப்பிக்க வாய்ப்பு தருமாறு என்னிடம் கேட்டார். அவரைப்போல் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஏராளமான ரசிகர்களை சம்பாதித்து வைத்திருப்பவர் நடிகை நதியா. அவர் இந்த படத்தில் நடித்திருப்பது மிக்க மகிழ்ச்சி.
தல தோனி சாதாரண மனிதர் அல்ல, சாதனையாளர். கிரேட் மேன். அவர் தமிழில் தயாரிக்கும் முதல் படத்திற்கு அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
ஆர். ஜே. விஜய் பேசுகையில், ”இந்தப் படத்தைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால்… படத்தின் தொடக்க விழாவில் திருமதி சாக்ஷி தோனி வருகை தந்தார்கள். அப்போது அவருடைய பாதுகாவலர்கள் அனைவரையும் ‘விலகு விலகு’ என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள். அவர்களிடத்தில் சாக்ஷி தோனி, ‘அதன் யாரும் இல்லையே.. பின் எதற்கு வழி விடு வழி விடு என்று சொல்கிறீர்கள்’ என இயல்பாக கேட்டார்கள். அது முதல் தற்போது வரை அவர்களை பார்க்கிறேன். அவர்கள் மிகவும் இயல்பாக.. கூலாக.. இருக்கிறார்கள்.
அடுத்தது ‘தல’ தோனி. அவர் படப்பிடிப்பு நடக்கும்போது வருவார் என்று எதிர்பார்த்திருந்தோம். வரவில்லை. ஆனால் படத்தின் பணிகள் நிறைவடைந்து இசை வெளியீட்டு விழாவில் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் என் அருகே வந்து, ‘ஹலோ விஜய்’ என்று அவர் என்னை பெயர் சொல்லி அழைத்தவுடன்.. மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அவரை சந்தித்த அந்த தருணம் மறக்க முடியாது.
இயக்குநர் ரமேஷ் நிறைய கதைகளை என்னிடம் சொல்லி இருக்கிறார். இந்தப் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்ததற்காக அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து நடிக்கும் போது மீண்டும் கல்லூரி காலகட்டம் ஞாபகம் வந்தது. படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் இணைந்து உற்சாகமாக பணியாற்றினோம். சுற்றுலாவின் போது பிரின்ஸ்பால் திடீரென்று நட்பாகி விடுவார். அதைப் போல் இப்படத்தின் படப்பிடிப்பின் போது நதியா மேடம் ஏழு மொழிகளுக்கு மேல் தெரிந்திருப்பதால் எங்கள் அனைவருக்கும் அவர் நட்பாகி விட்டார்” என்றார்.