மக்களைக் கவர்கிற வித்தியாசமான, புதுமையான கதையம்சமுள்ள படங்களை இயக்குவதற்கான திறமையை தன் வசம் வைத்திருக்கிறவர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கத்திலும், தரமான மற்றும் வித்தியாசமான படங்களைத் தயாரிக்கும் நோக்கத்திலும் தமிழ் சினிமாவில் நுழைகிறது‘எஸ்.கே.எம் சினிமாஸ்’ நிறுவனம். இந்த நிறுவனத்தின் மூலம் தொடர்ந்து பல படங்களை உருவாக்க நடிகரும் தயாரிப்பாளருமான அகில் திட்டமிட்டுள்ளார்.
அதன் முதல்படியாக கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப் திரையரங்கில் எஸ்.கே.எம் சினிமாஸ் நிறுவனம் மற்றும் அந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் படமான ‘புரொடக்ஷன்ஸ் 1’ துவக்க உற்சாகமாக நடந்தது. திரையுலகப் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு எஸ்.கே.ம் சினிமாஸ் நிறுவனத்தையும், படக்குழுவினரையும் வாழ்த்தினார்கள்.
எஸ்.கே.எம் சினிமாஸ்’ தயாரிக்கும் முதல் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் விஜய் ஆனந்தன் இயக்குகிறார். நாளைய இயக்குநர்கள் போட்டியில் கலந்து கொண்டு பாராட்டு பெற்ற விஜய் ஆனந்தன், பல குறும்படங்கள் இயக்கி தன் திறமையை நிரூபித்தவர். சினிமா மீதான ஆர்வத்தினால் யாரிடமும் உதவியாளராக பணியாற்றாமல் சினிமாவைக் கற்றுக்கொண்டவர்.
வட சென்னையை பின்னணியாக கொண்டு கேங்ஸ்டர் சப்ஜெக்டில் உருவாகவுள்ள இந்த படத்தில் ஐந்து இளைஞர்கள் பிரதான கதாபாத்திரங்களில் இடம்பெறுகிறார்கள். அவற்றில் தமிழ் சினிமாவின் கவனத்தை ஈர்த்திருக்கும் வளர்ந்து வரும் இளம் நடிகர்கள் நடிக்கவுள்ளார்கள். பிரபல நடிகையொருவர் கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார்.
’இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’, ‘போத்தனூர் தபால் நிலையம்’, ‘நட்சத்திரம் நகர்கிறது’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த தென்மா இசையமைக்கிறார். ஆரி ஒளிப்பதிவு செய்ய, ராம் படத்தொகுப்பு செய்கிறார். மக்கள் தொடர்பாளர்களாக தர்மதுரை & சுரேஷ் சுகு பணியாற்றுகிறார்கள்.
படம் குறித்த மற்ற விவரங்கள் அடுத்தடுத்த அறிவிப்புகள் மூலம் தெரியவரும்.