சமீபமாக பெரிய நடிகர்கள் நடிகைகள், பிரபல இயக்குநர்கள் இயக்காவிட்டாலும், பிரமாண்டமாக தயாரிக்கப்படாவிட்டாலும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவான படங்கள் கவனிக்க வைக்கின்றன; வெற்றியும் பெறுகின்றன. அந்த வரிசையில் இணைந்து ‘சான்றிதழ்’ பெற முயற்சிக்கிற படம்.
மக்களின் கேடுகெட்ட செயல்களால் ‘தறுதலை’ கிராமமாக இருந்து ஒரு நல்ல மனிதனின் வழிகாட்டுதலால் கடவுள் குடியிருக்கும் ‘கருவறை’ போல் மாறிய ஊர் என்பது படத்தின் கதைக்களம்.
ஊரைச் சுற்றி சுவரெழுப்பி நுழைவு வாசல்களில் செக்யூரிட்டிகளை வேலைக்கு அமர்த்தி, தகாத செயல்களில் ஈடுபடுகிறவர்களை நுழைய விடாமல் தடுக்கிற, மீறி நுழைந்துவிட்டால் ஊரைவிட்டு வெளியே போகமுடியாதபடி சிறை வைக்கிற,
சீரியல் பார்ப்பதில் கட்டுப்பாடு விதிக்கிற, குடிகாரர்களுக்கு ஒரு நாளுக்கு ஒரு கட்டிங் மட்டுமே அனுமதி தருகிற படு வித்தியாசமான கிராமம் அது.
அப்படியெல்லாம் ஒரு ஊர் இருக்க முடியுமா? முடியுமென்றால் அதற்கொரு வலுவான முன் கதை இருக்க வேண்டுமே. இருக்கிறது… அதை கதையாக சொல்வதை விட திரையில் பார்ப்பதே சுவாரஸ்யம்.
நாயகன் ஹரிகுமார், தோற்றத்தில் சற்றே முரட்டுத்தனம் தென்பட்டாலும் மனதளவில் நல்லவராக, ஊருக்கு நல்லது நடக்க வேண்டுமென்ற அக்கறை கொண்டவராக வரும்போது அதிரடி காட்டவும் அவரது முடிவால் நெகிழவும் வைத்திருக்கிறார்.
கிராமத்திற்குள் தப்புத் தண்டா நடந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிற ரோஷன் பஷீர், அவரது மனதுக்கு நெருக்கமானவராக ஆஷிகா அசோகன், அமைச்சராக ராதாரவி, கிடைக்கிற கேப்பில் சிரிப்பு மூட்டுகிற மனோபாலா – ஆதித்யா கதிர், செக்யூரிட்டிகளாக காஜல் பசுபதி – உமா ஸ்ரீ, மற்ற கதாபாத்திரங்களில் ரவி மரியா, தனிஷா குப்பண்டா என அத்தனைப் பேரும் அவரவர் நடிப்பால் ஏற்ற பாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
பிஜு ஜேக்கப்பின் இசையில் பாடல்கள் பரவாயில்லை என்ற உணர்வைத் தந்து கடந்துபோக பின்னணி இசை கதைக்கேற்ற பங்களிப்பை சரியாய் நிறைவேற்றியிருக்கிறது.
கமர்ஷியல் அம்சங்கள் அவ்வளவாக இல்லாவிட்டாலும் எடுத்துக் கொண்டிருக்கும் கதைக்கருவை முடிந்தவரை சுவாரஸ்யப்படுத்த முயற்சித்து, படத்தின் முதல் பாதியில் மட்டுமே அதை நிறைவேற்றியிருக்கிறார் படத்தின் இயக்குநர் ஜெ வி ஆர்.
படத்தின் கதையோட்டம் இதெல்லாம் சாத்தியமா என யோசிக்க வைத்து, அதெல்லாம் சாத்தியமானால் நன்றாக இருக்குமே என நினைக்க வைத்திருப்பது இயக்குநரின் சமூக அக்கறை சிந்தனைக்கு கிடைத்த வெற்றி!