‘ஈரம்’ படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் அறிவழகன், நடிகர் ஆதி கூட்டணியில் உருவாகியுள்ள ‘சப்தம்’ திரைப்படம் வரும் பிப்ரவரி 28-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
நிகழ்வில் பேசிய இயக்குநர் அறிவழகன், ”நீண்ட இடைவேளைக்குப் பிறகு, என்னுடைய படம் தியேட்டருக்கு வருகிறது. ஈரம் படத்தில் தண்ணீரை வைத்து புதுமை செய்தது போல், இப்படத்தில் சவுண்ட் வைத்துச் செய்யலாம் என்ற போது, நிறைய சவால்கள் இருந்தது.
ஈரம் படம் இப்போது வரை டெக்னிகலாக பாராட்டப்படும் படம். தண்ணீரில் ஹாரர் எனும் போது, அந்த ஆவியின் உருவத்தைக் காட்டுவது, மிக எளிதாக இருந்தது. ஆனால் சவுண்டை வைத்து பேயை காட்டுவது எப்படி என, கதை எழுதும் போதே சவாலாக இருந்தது. சவுண்டில் தியேட்டரில் டால்ஃபி சவுண்ட் புரமோ வருமல்லவா, அந்த குவாலிட்டியை திரையில் கொண்டு வர திட்டமிட்டோம்.
7G ஃபிலிம்ஸ் சிவா இப்படத்திற்கு மிக உறுதுணையாக இருந்தார், இந்தப்படத்தின் பட்ஜெட் பெரிதான போது, இந்தப்படத்தின் டெக்னிகல்களை புரிந்து கொண்டு, இப்படத்திற்கு முழு ஆதரவாக நின்றார். அவர்கள் ஏற்கனவே டிஸ்டிரிபூசனில் இருந்ததால் படத்தினை பற்றிய முழு புரிதல் அவரிடம் இருந்தது. படம் கேட்கும் அனைத்து செலவுகளையும் செய்யுங்கள் என்றார். அவரால் தான் இந்தப்படம் இந்த அளவு தரத்துடன் வந்துள்ளது அவருக்கு என் நன்றி. மேலும் என் தொழில் நுட்ப கலைஞர்களும் மிக உதவியாக இருந்தார்கள். ஆடியோகிராஃபர் உதயகுமார் என்னுடன் பல காலமாக வேலை பார்த்து வருகிறார். எடிட்டர் சாபு, ஒளிப்பதிவாளர் அருண், இசையமைப்பாளர் தமன் எல்லோரும் இணைந்து இந்தப்படத்தை உருவாக்கி இருக்கிறோம்.
மற்ற ஹாரர் படத்திலிருந்து இந்தப்படத்தில் என்ன வித்தியாசம்? ஹாரரில் பல ஜானர்கள் இருக்கிறது எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். ஈரம் படம் உங்களை ஒரு அனுபவத்திற்குள் கொண்டு சென்றது போல, இந்தப்படம் மிக வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.
ஒளிப்பதிவாளர் இந்தப்படத்தில் புளூ டோன் வைக்கலாம் என்றார், அது மிக வித்தியாசமாக இருக்கும். சாபு ஜோசப் அவரும் இப்படத்தில் நிறைய புதுமைகள் செய்துள்ளார். படத்தில் என் வியூ தவிர அவரோட வியூ எப்படி இருக்கிறது எனப் பார்ப்பேன், அதில் அவர் கடினமாக உழைத்துள்ளார். அவருக்கு நன்றி.
விவேகா என் எல்லாப்படங்களிலும் வேலை பார்த்துள்ளார், இந்தப்படத்திலும் பாடல்கள் நன்றாக இருக்கும். ஆர்ட் டைரக்டர் மனோஜ் மிக வித்தியாசமான செட்டை அமைத்துத் தந்தார். சவுண்ட் உதயகுமார் சார், பல விசயங்கள் புதுமை செய்துள்ளார். அவர் நிறைய பெரிய படங்கள் செய்து வருகிறார். இந்தப்படத்தில் எங்கே சவுண்ட் வேண்டும், எங்கு வேண்டாம் என நிறைய விவாதித்தோம். அதை மிகக் கச்சிதமாக செய்துள்ளார்.
ரொம்ப நாட்களாக ஆதி சாரும் நானும் வேலை செய்ய, பேசி வந்தோம், இந்தப்படத்தை கதை சொன்னவுடன் செய்யலாம் என்றார், அவர் தயாரிப்பில் ஃபர்ஸ்ட் காப்பியில் இப்படத்தைச் செய்துள்ளேன், தமனை நிறையத் தொந்தரவு செய்துள்ளேன், ஆனால் அதை எல்லாம் கடந்து, அவர் பின்னணி இசை வரும் போது பிரமிப்பாக இருந்தது. நாம் நினைத்த கதையை ஒருவர் நம்பி உள்ளே வர வேண்டும், அது தான் எனக்கு கம்ஃபடபிள், ஆதி என்னை நம்பி உள்ளே வந்தார். இந்தப்படம் மிகவும் வித்தியாசமான ஹாரர் அனுபவமாக இருக்கும். என் நேர்மை தான் என்னை இங்கு கொண்டு வந்துள்ளது என நம்புகிறேன், இந்தப்படம் எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும்” என்றார்.
நடிகர் ஆதி, ”இந்த மேடை மிக முக்கியமானது. ‘சப்தம்’ என் நண்பர்களிடம் இந்தப்படம் பற்றி சொல்லும் போது ஏன் ஹாரர் எனக் கேட்பார்கள், ஹாரர் என்றாலே கொஞ்சம் கீழாக பார்க்கும் பார்வை இருக்கிறது, அப்போ ஈரமும் ஹாரர் தானே என்பேன், ஈரம் சூப்பராக இருக்கும் என்று பாராட்டுவார்கள். அது ஹாரரில் வித்தியாசமாக இருக்கும் என்று பாராட்டுவார்கள், அது தான் அறிவழகன் சார், அவர் இயக்கத்தில் ஈரம் மாதிரி இன்னொரு படம் கிடைக்குமா? என நினைத்துள்ளேன், அதை மீண்டும் அறிவழகன் எனக்குத் தந்துள்ளார்.
இந்தப்படத்தில் பாராநார்மல் இன்வஸ்டிகேட்டராக நடித்துள்ளேன், இது முழுக்க முழுக்க இந்த டீமின் படம், அவர்கள் உழைப்பு தான் முழுப்படமும். ஹாலிவுட் படம் மாதிரி என அடிக்கடி சொல்வோம் ஆனால் இங்கு நம்ம சினிமாவை ஹாலிவுட்டை தாண்டிய தரத்தில் உருவாக்கியிருக்கும் படம் தான் சப்தம். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.