இந்த படம் பள்ளிப் பருவத்தின் மலரும் நினைவுகளாய் இருக்கும்! -அசோக் செல்வன் மூன்று கதாநாயகிகளுடன் நடிக்கும் ‘சபாநாயகன்’ படத்தின் பிரி ரிலீஸ் நிகழ்ச்சியில் இயக்குநர் சி எஸ் கார்த்திகேயன் பேச்சு

அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்க, மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன்,சாந்தினி செளத்ரி என மூன்று ஹீரோயின்கள் நடித்திருக்கும் படம் ‘சபாநாயகன்.’

அறிமுக இயக்குநர் சி எஸ் கார்த்திகேயன் இயக்கும் இந்த படத்தில் ‘நக்கலைட்ஸ்’ யூ டியூப் அருண், ‘எருமைசாணி’ யூ டியூப் ஜெய்சீலன், ‘சர்டிஃபைட் ராஸ்கல்ஸ்’ ஸ்ரீராம், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். அவர்களுடன் மயில்சாமி, துளசி, மைக்கேல் தங்கதுரை, ஸெர்லின் சேத், விவியா சந்த் நடித்திருக்கிறார்கள்.

வரும் டிசம்பர் 15-ம் தேதி வெளியாகவிருக்கும் இந்த படத்தின் பிரி ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.

நிகழ்வில் படத்தின் இயக்குநர் சி எஸ் கார்த்திகேயன் பேசியபோது, ‘‘நம் எல்லோருக்கும் பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் ஏதோவொரு பெண்ணின் மீது ஒருவித க்ரஸ் இருந்திருக்கும். இப்படி பள்ளி கால வாழ்க்கை, கல்லூரி கால வாழ்க்கை, திருமண வாழ்க்கை என்று வாழ்க்கையின் மூன்றுவித காலகட்டங்களைப் பற்றி இப்படத்தில் பேசி இருக்கிறோம். அந்த வகையில் இது நம் பள்ளிகால மற்றும் கல்லூரி கால மலரும் நினைவுகளை மீள் உருவாக்கம் செய்யும் ஒருவித நாஸ்டால்ஜியா வகை திரைப்படமாக, அனைத்து ரசிகர்களும் குடும்பத்தோடு வந்து பார்த்து ரசிக்கும்படியான திரைப்படமாக இருக்கும்” என்றார்.

நாயகன் அசோக் செல்வன் பேசியபோது, ‘‘சபாநாயகன் ஜாலியான க்ளீனான என்டர்டெயினர். முதல் காதல், பள்ளிகால வாழ்க்கை, போன்ற மறக்கமுடியாத நினைவுகள் நம் மனங்களில் அழியாமல் எப்போதும் இருக்கிறது. அவைகளை கிளறிவிடும் திரைப்படமாக சபாநாயகன் இருக்கும். மேலும் உங்களின் மனச்சோர்வுகளுக்கும் மன அழுத்தத்திற்கும் அரும் மருந்தாக சபாநாயகன் திரைப்படம் இருப்பதோடு, ஏற்கனவே சொன்னது போல் ஒரு நாஸ்டால்ஜியா பயணம் சென்றுவந்த உணர்வைக் கொடுக்கும். நடனம் மற்றும் நகைச்சுவைக்காக இப்படத்தில் நான் நிறையவே மெனக்கெட்டிருக்கிறேன். இந்த இரண்டுமே எனக்கு இப்படத்தில் புதியதாக இருந்தது. நான் இவ்வளவு ஹியூமர் செய்வேனா என்று மதன் சார் என்னிடம் ஆச்சரியப்பட்டார்.

இந்த படத்தில் மூன்று நாயகிகளுடன் நெருக்கமாக நடித்திருக்கிறேன். அதையெல்லாம் என் மனைவி கீர்த்தி தவறாக நினைக்கமாட்டார்.

முன்பே எனக்கு நக்கலைட்ஸ் சேனல் மிகவும் பிடிக்கும். ஸ்ரீராம் ஜெய்சீலன், அருண் போன்றோர் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். படப்பிடிப்பு தளத்தில் அவர்களிடம் பல ரசிக ரசிகைகள் மொய்த்துக் கொண்டு ஆட்டோகிராஃப் வாங்கினார்கள். அப்பொழுது தான் அவர்களைப் பற்றி தெரிந்து கொண்டு அவர்களின் வீடியோக்களை அதிகமாக பார்த்தேன். அவர்கள் அனைவருக்கும் சிறந்த எதிர்காலம் இருக்கிறது. இசையமைப்பாளர் லியோன் ஓ மை கடவுளே படத்தில் மிகச்சிறப்பான பாடல்களை கொடுத்திருந்தார். இப்படத்திலும் கேட்டதும் பிடிக்கும்படியான பாடல்கள் உள்ளன” என்றார்.

படத்தின் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ், படத்தின் ஒளிப்பதிவாளர்கள் பாலசுப்ரமணியம், தினேஷ் புருஷோத்தமன், நக்சலைட்ஸ் அருண், நடிகை விவியா, எருமைசாணி ஜெய்சீலன், படத்தின் நாயகிகளில் ஒருவரான கார்த்திகா முரளிதரன், படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அய்யப்பன் ஞானவேல் உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.

படக்குழு: அசோக் செல்வனின் ஓ மை கடவுளே திரைப்படத்தில் ஹிட் பாடல்களைக் கொடுத்த லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியத்துடன் இணைந்து அவரின் உதவியாளர் தினேஷ் புருஷோத்தமன் மற்றும் பிரபு ராகவ் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கின்றனர். கிளியர் வாட்டர் பிக்சர்ஸ் சார்பாக அரவிந்த் ஜெயபாலன், ஐ சினிமா சார்பாக அய்யப்பன் ஞானவேல் மற்றும் கேப்டன் மெகா எண்டர்டெயின்மெண்ட் சார்பாக கேப்டன் மேகவாணன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here