நிஷாந்த் ரூஷோ நடிப்பில் ‘சொட்ட சொட்ட நனையுது’ என்ற திரைப்படம் இன்றைய தலைமுறையின் முக்கிய சிக்கலை மையப்படுத்தி கலக்கலான கமர்ஷியல் படைப்பாக, ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் விதத்தில் உருவாகியுள்ளது.
இளம் வயதில் தலையில் சொட்டை விழும் நாயகனுக்கு வீட்டில் திருமணம் செய்யத் திட்டமிடுகிறார்கள். அதைத்தொடர்ந்து நடக்கும் கலகலப்பான சம்பவங்களும், அதிரடி திருப்பங்களும்தான் படத்தின் கதைக்களம்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் & டைட்டில் ப்ரொமோவை இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர்கள் காளிதாஸ் ஜெயராம், ரியோ ராஜ், ரோபோ சங்கர், ரக்ஷன், நிதின் சத்யா, மா க ப ஆனந்த், கே பி ஒய் புகழ், கே பி ஒய் தீனா, கே பி ஒய் பாலா, பிக் பாஸ் பிரபலம் முத்துக்குமரன், இசையமைப்பாளர் ஜிப்ரான், தீபக், தயாரிப்பாளர் சி வி குமார், லிப்ரா ரவிச்சந்திரன், மற்றும் நடிகை செளந்தர்யா ஆகியோர் தங்கள் சமூக வலைத்தள பக்கம் வழியே வெளியிட்டுள்ளனர்.
மும்பையில் நடிப்பு மற்றும் திரைக்கதை படித்த, நவீன் எஸ் ஃபரீத் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ‘கலக்கப்போவது யாரு’ ராஜா கதை வசனம் எழுதியுள்ளார்.
படத்தில் ஹீரோவுக்கு ஜோடியாக பிக்பாஸ் வர்ஷிணியும், அறிமுக நடிகை ஷாலினியும் நடிக்கின்றனர். முக்கிய பாத்திரங்களில் தேர்ந்த நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர்.
முழுப்படப்பிடிப்பும் சென்னையில் நடத்தி முடிக்கப்பட்டு, படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் டீசர், டிரெய்லர் வெளியாகவுள்ளது.