சிங்களவன் ஒற்றுமையாக இருக்கிறான்; நம் பகை வளர்த்து பிரிந்து கிடக்கிறது! -‘சல்லியர்கள்’ பட விழாவில் இயக்குநர் வ.கவுதமன் பேச்சு

மேதகு படத்தை இயக்கிய கிட்டு இயக்கியிருக்கும் இரண்டாவது படம் ‘சல்லியர்கள்.’

ஐ சி டபிள்யூ நிறுவனம் சார்பில் சேது கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில், சத்யா தேவி என்பவர் டாக்டர் நந்தினியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, அவரது தந்தையாக கருணாஸும், ஆர்மி வில்லனாக களவாணி’ திருமுருகனும், டாக்டர் செம்பியனாக மகேந்திரனும், இன்னும் பல புதுமுகங்களும் நடித்துள்ளனர்.

கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ள இந்த படத்திற்கு கருணாஸின் மகன் நடிகர் கென் மற்றும் அவரது நண்பர் ஈஸ்வர் இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.

இந்த படத்தின் சிறப்பு நிகழ்ச்சி 24.12.2023 அன்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, பி.எல்.தேனப்பன், சிவா கிலாரி, இயக்குநர்கள் வ.கவுதமன், பொன்ராம் மற்றும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பேசும்போது, “சல்லியர்கள் என்பதை ஒரு படம் என்று சொல்வது அவ்வளவு பொருத்தமாக இருக்காது. அது ஒரு ஆவணம்.. வேரை இழந்த மரமும் வரலாற்றை மறந்துவிட்ட இனமும் வாழாது.. தன் இன வரலாறு தெரியாத எந்த இனமும் எழுச்சி பெற முடியாது.. என் இனத்திற்கு என்று வரலாறே கிடையாது.. ஏனென்றால் வரலாற்றை படைப்பவனுக்கு வரலாற்றை எழுத நேரம் கிடைக்காது. தமிழர் இன வரலாறை நீங்கள் பார்த்துக் கொண்டே வந்தால் எதிரிகளால் வீழ்த்தப்பட்டதே கிடையாது. உடன்பிறந்த ரத்த சொந்தங்களின் துரோகங்களால் தான் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள் இறுதியாக எங்கள் தலைவர் உட்பட.

கற்றறிவை விட பட்டறிவு மேலானது. அதனால் தான் என் தலைவர் மேதகு பிரபாகரன் எல்லாவற்றையும் ஆவணப்படுத்தினார். ஆனால் இறுதிப் போரில் அவற்றில் பாதிக்கு மேல் சிதைந்து அழிந்து விட்டது. அவருக்கு ஒரு பேரார்வம் இருந்தது. சிண்ட்லர்ஸ் லிஸ்ட் ,போல பிரேவ் ஹார்ட் போல, டென் கமான்மெண்ட்ஸ் போல நம்முடைய விடுதலைப் போராட்ட வரலாறும் படமாக வர வேண்டும் என்று பெரிய அளவில் ஆர்வப்பட்டார். அதற்காகத்தான் அவர் ஆணிவேர் படத்தை தயாரித்தார். தலைவரின் படத்தை போஸ்டர்களில் அடித்து ஒட்டினாலே இங்குள்ள போலீசார் கிழித்தெறிகின்றனர். இங்குள்ள அரசியல் சூழல் அப்படி இருக்கிறது. இதை மாற்ற வேண்டும். அதன் பின்னர் தம்பி கவுதமன் சொன்னது போல அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க வேண்டும்.

விழித்துக்கொண்ட வீர மறவர்களின் வரலாறுதான் தமிழர்களுடைய வீர காவிய வரலாறு. அதில் ஒரு துளி தான் இந்த ‘சல்லியர்கள்’ படம். மருத்துவம் என்பதே மகத்துவம். தன் உயிரை எடுக்க வந்த ஒருவனுக்கும் உயிரைக் கொடுக்கின்ற அறம் சார்ந்த மறவர்கள் நம் தமிழர்கள் என்பதை இந்த படம் உணர்த்துகிறது. இந்த படம் இன்னும் பிரம்மாண்டமாக கூட எடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அந்த உணர்வை சிதைக்காமல் நமக்குள் கடத்தி விட்டார் கிட்டு. அதில் பிரமாண்டம் எதுவும் தேவைப்படவில்லை.

என் தம்பி இயக்குநர் கிட்டுவிடம் குறும்படம் எடுக்கும் காலத்தில் இருந்தே படைப்பாற்றல், எழுத்தாற்றல் நிறைய இருக்கிறது. படத்தில் வசனங்கள் நன்றாகவே இருக்கிறது. காட்சி அமைப்புகளில் எதுவும் பொய் சொல்லி விட முடியாது. இலக்கியம் பொய் பேசும்.. புராணம் பொய் பேசும்.. ஆனால் வரலாறு எப்போதும் பொய் பேசாது.. பேசக்கூடாது. பகைவனாக இருந்தாலும் அன்பு காட்டுங்கள் என்பதை தான் இந்த படம் பேசுகிறது. மருத்துவ பெண் நந்தினியாக நடித்துள்ளவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். புதிதாக வந்துள்ளவர் என்று சொல்லவே முடியாது. அந்த நாட்டில், அந்த காட்டில் என்ன முகத்தைப் பார்த்தேனோ, அதேபோன்ற ஒரு முகம்.. அதேபோன்ற ஒரு போராளியின் முகம்தான் மகேந்திரன்.. கருணாஸ் நடித்துள்ள அந்தப்பகுதி இந்த படத்தின் இதயம் போன்றது.

இதை ஒரு படம் என்று சொல்லாமல் ஒரு வரலாற்று பதிவு என்று தான் உலக தமிழ் சொந்தங்கள் வரவேற்க வேண்டும். நம் அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும். வரலாறு தான் எல்லா தேசிய இனங்களுக்கும் வழிகாட்டி இருக்கிறது. நம் குழந்தைகளுக்கு இரண்டு மணி நேரம் நாம் காட்டுகின்ற ஒரு பாடமாக இதை செய்ய வேண்டும்.

அயோத்தி போன்ற படங்களுக்கு நாங்கள் குரல் கொடுப்பது அதை மக்கள் சாதாரணமாக கடந்து போய் விடக்கூடாது என்பதற்காகத்தான். அதனால் இந்த படத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். சமீபத்தில் வெளியான சித்தா படம் சிறப்பாக இருந்தது. பார்க்கிங் படம் கூட நன்றாக இருந்தது என என்னிடம் கூறி பார்க்க சொன்னார்கள்.. வெள்ளத்தில் சிக்கிக் கிடந்த எங்களால் எப்படி படம் பார்க்க முடியும் ? எங்களது படமே பெரிய படமாக போய்விட்டது.

இந்த நாட்டை ஐந்து ஆறு முறை ஆண்ட நிர்வாக தலைவர்களைப் போல என் தலைவனுக்கு ஒரு ஐந்து ஆண்டுகள் மட்டும் இருந்திருந்தால் உலகத்தில் தலை சிறந்த வல்லாதிக்க நாடாக எங்கள் தமிழ் ஈழ நாட்டை கொண்டு போய் சேர்த்திருப்பார். ஆனால் கடைசி வரை அவர் போர்க்களத்தில் போராளி தலைவனாகவே நிற்க வேண்டியதாக போய்விட்டது. விடுதலைப் போராட்ட வீரர்களை பெருமைப்படுத்துவது போன்று, எங்களது மருத்துவ பிள்ளைகளை பெருமைப்படுத்துவது போன்று ஒரு தேன்கூட்டை தொடுவது போன்று கவனமாக இந்த பதிவை கையாண்டு இருக்கிறார்கள் கருணாஸும் இயக்குநர் கிட்டுவும்” என்றார்.

நடிகர் சேது கருணாஸ் பேசும்போது, “இந்த படத்தை எடுக்க வேண்டும் என கிட்டு முடிவு செய்தபோது என்னிடம் பரமக்குடியை சேர்ந்த இராவணனை அழைத்து வந்தார். பெரிய வசதி வாய்ப்புகள் எல்லாம் இல்லாதவர். ஆனால் இந்த படம் எடுப்பதற்கு முன்பணமாக 10 லட்சம் ரூபாய் கொடுத்து துவக்கி வைத்தவர் இவர்தான். இப்படி சாதாரண கிராமத்தில் இருக்கும் ஒருவருக்கே இந்த உணர்வு இருக்கும்போது, சினிமாவில் இருக்கும் எனக்கு இந்த மொழியால், இனத்தால் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் ஏதாவது செய்யக்கூடாதா என்கிற வெறி ஏற்பட்டது. தமிழர்களின் மறைக்கப்பட்ட வரலாறுகளை எடுத்துச் சொல்லுங்கள். அதற்கு நான் உங்களுடன் உறுதுணையாக நிற்கிறேன் என்று சொல்லி ஒரு உத்வேகத்தை கொடுத்து இந்த நிமிடம் வரை எனக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய தம்பி கரிகாலனுக்கு இந்த நேரத்தில் நான் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கிட்டு இயக்கிய ‘மேதகு’ படத்தை பார்த்து விட்டுத்தான் இந்த படம் பண்ணும் எண்ணம் எனக்கு ஏற்பட்டது. இதையும் சரியாக பண்ணியிருக்கிறார். அவர் என்ன கேட்டாரோ ஒரு தயாரிப்பாளராக அதை சிறப்பாக நான் செய்து கொடுத்திருக்கிறேன். அவரும் இந்த படத்திற்கு நேர்மையாக, உண்மையாக உழைத்திருக்கிறார், பிப்ரவரி மாதத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறோம். தமிழ் சினிமாவில் ஒரு பிரச்சனைக்குரிய, ஒரு இன அழிப்பை பற்றிய வரலாற்று பதிவாக பண்ண வேண்டும் என்று சொல்லி, அதை படமாக எடுத்து தணிக்கை அதிகாரிகளிடம் சான்றிதழ் பெற்ற முதல் படம் எனக்குத் தெரிந்து இதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.

இந்த படத்தை எடுத்ததற்கு இன்னொரு காரணம் என்னவென்றால், என்னுடைய மகன் கென் தான். இந்த படத்திற்கு அவன் தான் இசையமைத்திருக்கிறான். ஆனால் என் பையன் என்னிடம் கேட்ட கேள்வி என்னவென்றால் இவ்வளவு வறண்ட, இவ்வளவு சீரியஸான, இந்த மாதிரியான ஒரு படத்தை இப்போ கஷ்டப்படுகிற நேரத்தில் எதற்காக காசு செலவு பண்ணி எடுக்கிறீர்கள் என்று கேட்டான். காதலிக்கும்போது கூட மண், இனம், மொழி என்று தான் பேசுகிறார்கள், இதையெல்லாம் யார் இந்த காலத்தில் ஏற்றுக்கொள்வார்கள் என்றான்.

அவனிடம் இது நடந்த காலகட்டம் அப்போது.. போராளிகள் காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.. நானும் நிறைய பேரை பார்த்திருக்கிறேன்.. ஆனால் அந்த காதலில் கூட அவர்களிடம் ஒழுக்கமும் அறமும் இருந்தது. அது உங்களுக்கு புரியவில்லை. 21 வயது பையன் உனக்கே புரியவில்லை என்றால் அடுத்த தலைமுறைக்கு இது சுத்தமாக தெரியாமல் போய்விடுமே என்பதற்காகத்தான் இந்த படத்தை எடுத்தேன்.. அப்பா உனக்காக காசு பணம் நிறைய சேர்த்து வைக்கவில்லை என வருத்தப்படாதே.. எதிர்காலத்தில் நடிகராகவோ, ஏதோ ஒரு இடத்தை பிடித்து விடுவாய். அப்படியே ஆனாலும் கூட வரக்கூடிய காலங்களில் நடிகர் கருணாஸின் பையன், எம்எல்ஏ கருணாஸின் பையன் என்று சொல்வதை விட சல்லியர்கள் என ஒரு படத்தை எடுத்தானே அவனுடைய பிள்ளை என்கிற ஒரு அடையாளத்தை உனக்கு நான் உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்பதற்காத்தான் இந்த படத்தை எடுத்தேன். இதுதான் நான் உனக்கு கொடுக்கும் சொத்து என்றேன். உண்மையிலேயே அந்த உணர்வில் தான் இந்த படத்தை எடுத்திருக்கிறேன். எல்லோரும் நமக்கென்ன என்று போய்விட்டால் வேறு யார் தான் செய்வது? நம் தமிழகம், நம்ம ஊர்.. இந்த ஊரில் எல்லோரும் வாழலாம்.. ஆனால் நம்மை ஆள்பவன் தமிழனாக இருக்க வேண்டும்” என்றார்.

இயக்குநர் வ.கவுதமன் பேசும்போது, “சல்லியர்கள் திரைப்படமாவதற்கு முன்பே கிட்டு என்னிடம் இந்த கதையை கூறினார். ஒருவகையில் என்னுடைய மகன் தமிழ் கவுதமன் இந்த படத்தின் நாயகனாக நடிப்பதாக இருந்தது. ஆனால் இன்னொரு படத்தில் நடிப்பதற்கான வேறு தோற்றத்தில் இருந்ததால் உடனடியாக இதற்கு மாற முடியவில்லை. கதையாக கேட்கும் போது எனக்குள் ஒரு சிலிர்ப்பையும் படமாக பார்த்தபோது, குறிப்பாக இரண்டாம் பகுதியை பார்த்து முடித்தபோது எனக்கும் இயக்குநர் பொன்ராமுக்கும் ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தியது. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள பெண் ஒரு பேயை போல நடித்துள்ளளார். திரையில் இன்று இருக்கும் எந்த ஒரு பெரிய நடிகையும் அந்த நடிப்பை வழங்கியிருக்க முடியுமா என தெரியவில்லை. நடிப்பால் நம் மனதை உறைய வைத்து விட்டார்.

பகைவனுக்கும் அருள்வாய் நன்நெஞ்சே என பாரதியார் சொன்ன அந்த வார்த்தைகள் தமிழர்களுக்கு மட்டுமே பொருத்தம். அந்த கருத்தை தான் இந்த படம் சொல்லுகிறது. போராட்டத்தில் காயம்பட்டவர்களை காப்பாற்றும் மருத்துவர்களை கூட அழிக்க வேண்டும் என எதிரி நினைக்கிறான்.. அதுதான் இந்த படத்தின் கருப்பொருள்.. காப்பாற்றுபவன் கடவுளுக்கு சமமானவன். அந்த கடவுளையே அழிக்க நினைக்கிறான் எதிரியான சிங்களவன் ஆனால் அவனையும் காப்பாற்ற நினைக்கும் இனம் தான் நம் தமிழினம். மேதகு பிரபாகரனால் வளர்க்கப்பட்டவர்களுக்கு மட்டுமே அது சாத்தியம். இந்த படைப்பை தமிழினம் உச்சி முகர்ந்து கொண்டாட வேண்டும்

பேசாப்பொருளை பேசுவது தான் படைப்புக்கு பேரழகு. அதை இந்த படம் பேசுகிறது. 15 வருடங்களுக்கு முன்பே ‘சந்தனக்காடு’ தொடர் மூலமாக வீரப்பன் வாழ்க்கையை எந்த சமரசமும் இன்றி அரசுகளின் அச்சுறுத்தலை எல்லாம் எதிர்கொண்டு நிஜத்தை மட்டுமே துணிச்சலாக கூறியிருந்தேன். அது இன்றும் பேசப்படுகிறது. அதே சமயம் இன்று வீரப்பனை பற்றி பல பொய்யும் புனைக் கதைகளும் சொல்லப்பட்டு வருகின்றன. ஆனால் இன்றும் கூட அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு கொடுக்க இங்கு யாருக்கும் தோன்றவில்லை. வீரம் செறிந்த ஈழப் போராட்டத்தை ஒரு படமாக எடுப்பதற்கு முன்னோட்டமாகவே சந்தனக்காடு தொடரை எடுத்தேன். சந்தனக்காடு போலவே இந்த உலகத்தை முழுக்க அதிர வைக்க இன்னும் படைப்புகள் ஒரு நாள் வரும். அதை செய்யாமல் நான் ஓயமாட்டேன்.

இன்றைய சூழலில் ஒரு குறிப்பிட்ட சதவீத தமிழர்கள் முன்னிலையில் என்னை ஒரு குற்றவாளியாக நிறுத்தும் ஒரு முயற்சி நடந்து கொண்டிருக்கிறது எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை. சண்டை போட்டவன், கொன்று குவித்த சிங்களவன் இன்றும் ஒற்றுமையாக இருக்கிறான்.. ஆனால் சிதறி ஓடிய நம் கூட்டம் இன்னும் தங்களுக்குள் பகை வளர்த்து பிரிந்தே கிடக்கிறது. பொய்யை உண்மையாக்குகிற ஒரு சூழலை இனி தமிழினம் அனுமதிக்க கூடாது” என்றார்.

இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு,  தயாரிப்பாளர் சிவா கிலாரி, தயாரிப்பாளர் பி.எல் தேனப்பன், நார்வே நாட்டில் நார்வே திரைப்பட திருவிழாவை பல வருடங்களாக நடத்தி வரும் வசீகரன், நடிகர் திருமுருகன் உள்ளிட்டோரும் பேசினார்கள்.

படக்குழு:
தயாரிப்பு: சேது கருணாஸ் & கரிகாலன்
இணை தயாரிப்பு: சாத்தனூர் சிவா
இயக்கம்: கிட்டு
ஒளிப்பதிவு: சிபி சதாசிவம்
இசை: கென், ஈஸ்வர்
படத்தொகுப்பு: சி.எம் இளங்கோவன்
கலை இயக்குனர்: முஜிபூர் ரஹ்மான்
ஆக்சன்: எஸ்.ஆர்.சரவணன்
விஎப்எக்ஸ்: விக்னேஷ்
மக்கள் தொடர்பு: ஏ.ஜான்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here