இது விளையாட்டு வீராங்கனைகள் பற்றிய உண்மையைப் பேசும் படம்! – ‘சிங்கப் பெண்ணே’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வில் கதையின் நாயகி டிரையத்லான் வீராங்கனை ஆர்த்தி பேச்சு

ஷில்பா மஞ்சுநாத், ஆர்த்தி நடிப்பில், நீச்சல் உள்ளிட்ட பெண்களுக்கான விளையாட்டுகளை மையப்படுத்தி, ஜெ எஸ் பி சதீஷ் இயக்கி, தயாரித்துள்ள படம் ‘சிங்கப் பெண்ணே.’

வரும் மார்ச் 8-ம் தேதி திரைக்கு வரவுள்ள இந்த படத்தின் டிரெய்லர் வெளியீடு சென்னையில் நடந்தது.

கதையின் நாயகி ஆர்த்தி பேசியபோது, ”இந்த இடத்தில் பலருக்கும் நன்றி சொல்ல வேண்டும். பொதுவாக எல்லா அப்பா அம்மாவும் படிக்க சொல்வார்கள், இல்லை கல்யாணம் செய்து வைப்பார்கள், ஆனால் என் பெற்றோர் என்னை விளையாட போகச் சொன்னார்கள். அவர்கள் தந்த ஆதரவால் தான் நான் இன்று வீராங்கனை ஆக இருக்கிறேன் நன்றி. இந்தப்படத்திற்கு சதீஷ் சார் என்னை எப்படித் தேர்ந்தெடுத்தார் என்று தெரியவில்லை. நான் முதலில் சின்ன ரோலாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அவர் படம் முழுக்க வரக்கூடிய ஒரு ரோல் பற்றி சொன்னார். எனக்கும் என் பெற்றோருக்கும் அது மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது.

 

என்னை வைத்து ஒவ்வொரு காட்சியை எடுக்கவும் மிகவும் கஷ்டப்பட்டார்கள். மிக அழகான ஒரு படத்தை எடுத்துள்ளார் இயக்குநர். எனக்கு இப்படி ஒரு வாய்ப்பை தந்ததற்கு இயக்குநருக்கு நன்றி. படத்தில் எனக்கு அனைவரும் மிகப்பெரிய ஒத்துழைப்பு தந்தார்கள். ஷில்பா மஞ்சுநாத் மேடம் எனக்கு ஒவ்வொன்றையும் சொல்லித் தந்தார். இப்படம் வீராங்கனைகள் பற்றிய உண்மையைப் பேசும் படம். படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்” என்றார்.

நடிகை ஷில்பா மஞ்சுநாத் பேசியபோது, ”உங்கள் முன்னால் மற்றும் ஒரு தமிழ்ப்படத்திற்காக மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சி. இயக்குநர் கதை சொன்னபோது யார் சிங்கப்பெண்? எனக் கேட்டேன். கதை கேளுங்கள் உங்களுக்கு தெரியும் என்றார். கதை கேட்டு முடித்தவுடன் கதை தான் சிங்கப்பெண் என்பது புரிந்தது. எல்லோர் வீட்டிலும் ஒரு சிங்கப்பெண் இருப்பார்கள். இது அந்த மாதிரியான ஒரு சிங்கப்பெண்ணை பற்றிய படம். முழுக்கதையும் சொல்லி ஆறு மாதம் வேண்டும் என்றார் இயக்குநர். படத்தின் கருத்து பிடித்திருந்ததால் உடனே ஒத்துக்கொண்டேன்.

படப்பிடிப்பில் செட் போட்டு, ஷூட் செய்வார்கள் என நினைத்தேன், ஆனால் உண்மையான போட்டிகளை நடத்தி அப்படியே எடுத்தார்கள். ஆர்த்தி எந்த ஒரு சிறு ஓய்வும் இல்லாமல், மிக உற்சாகமாக பணியாற்றினார். அவரைப் பார்த்து பிரமித்து விட்டேன். இந்தப்படத்தில் நிறையக் கற்றுக்கொண்டேன். பெண்களின் விளையாட்டைப் பற்றி நாம் நிறைய பேசுவதில்லை, அதற்கான இடம் இங்கு வேண்டும். எல்லோரும் ஆதரவைத் தர வேண்டும். அதைப்பற்றித்தான் இந்தப் படம் பேசுகிறது” என்றார்.

இயக்குநர் ஜெ எஸ் பி சதீஷ், ”மூன்று வருட போராட்டங்களுக்குப் பிறகு, இப்படத்தை எடுத்துள்ளோம். விளையாட்டை மையப்படுத்திய ஒரு அழகான படைப்பு. இப்படம் எடுக்க நிறைய சிரமங்கள் இருந்தது. படத்தில் உண்மையான நேஷனல் அளவிலான போட்டிகள் எல்லாம் வருகிறது. அதை எடுக்க அதிகாரிகளை தொடர்பு கொண்டு உண்மையான விளையாட்டு நடக்கும் வரை காத்திருந்து படம்பிடித்தோம். உண்மையான விளையாட்டு வீராங்கனை நடித்துள்ளார் அவருக்காக ஐந்து மாதம் காத்திருந்தேன். இப்படத்திற்காக அவரின் பெற்றோர்கள் முழு ஒத்துழைப்பு தந்தார்கள். படம் முழுக்க லைவ்வாக இருக்கும். ஆர்த்தி உண்மையாகவே அந்த நேஷனல் மேட்ச்சில் கோல்ட் மெடல் வென்றார். அது படத்திலும் வருகிறது” என்றார்.

படத்தில் நடித்துள்ள பிரேம், சென்ட்ராயன், படத்திற்கு இசையமைத்துள்ள குமரன் சிவமணி உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள். சிறப்பு விருந்தினராக இயக்குநர் பாக்யராஜ் கலந்துகொண்டார்.

படம் பற்றி…

ஸ்விம்மிங், சைக்கிளிங், ரன்னிங் என மூன்று போட்டிகள் இணைந்த டிரையத்லான் போட்டிகளில் கலந்துகொண்டு தேசியளவில் பலமுறை பதக்கங்கள் வென்ற ஆர்த்தி இந்த படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.

ஷில்பா மஞ்சுநாத் ஆர்த்தியின் கோச்சராக நடித்திருக்கிறார்.

சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, பழம்பெரும் நடிகர் எம் என் நம்பியாரின் பேரன் தீபக் நம்பியார் வில்லனாக அறிமுகமாகியுள்ளார்.

பசங்க சிவகுமார், ஏ வெங்கடேஷ், சென்ராயன், பிரேம், பாய்ஸ் ராஜன், ஜானகி, இந்துமதி என பலரும் நடித்துள்ளனர்.

படக்குழு:
ஒளிப்பதிவு: என் கே ஏகாம்பரம்
இசை: டிரம்ஸ் சிவமணியின் மகன் குமரன் சிவமணி
வசனம்: கபிலன் வைரமுத்து
படத்தொகுப்பு: கே எல் பிரவீன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here