சமீபத்தில் ஒற்றை வீடியோ மூலம் இணையம் முழுக்க ஃபேமஸானவர் குட்டி ஸ்டார் ஷோபா பாய். கண் இமைக்கும் வேகத்தில், கடகடவென பேசி, மயக்கும் குரலில் இவர் அசத்திய ஷோபா விற்பனை வீடியோ பெரும் வைரலாக, ஒரே நாளில் பெரியளவில் பிரபலமானார். பொது மக்கள் மட்டுமல்லாது திரைப் பிரபலங்களும் இவரது திறமையைப் பாராட்டி சினிமா வாய்ப்புகளை தந்தனர்.
தற்போது அதன் அடுத்த கட்டமாக சுயாதீன இசை ஆல்பங்கள் வெளியீட்டில் தொடர்ச்சியாக அசத்தி வரும் பி ரெடி மியூஸிக் (Bereadymusic) நிறுவனம், ஷோபா பாய் நடிப்பில் ‘ஸ்கூல் லீவு விட்டாச்சு’ குழந்தைகளுக்கான பிரத்தியேக ஆல்பம் ஒன்றைத் தயாரித்து வெளியிட்டுள்ளது.
தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள இந்த ஆல்பம் பாடல் ரசிகர்களின் வரவேற்பில், சார்ட்பஸ்டரில் இடம்பிடித்து வைரலாகி வருகிறது.
முதல்முறையாக தமிழில், குழந்தைகள் நடிப்பில், குழந்தைகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருப்பது இந்த பாடலின் சிறப்பு என்றாலும், பாடலானது அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படி அமைந்துள்ளது.
இசையமைப்பாளர் சுதர்ஷன் இந்த பாடலை எழுதி இசையமைத்துள்ளார். வெற்றிபெற்ற பல்வேறு ஆல்பம் பாடல்களை உருவாக்கிய டோங்லி ஜம்போ இந்த பாடலை வடிவமைத்து இயக்கியுள்ளார். பல்வேறு டிரெண்டிங் ஆல்பம் பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ள ரிச்சி ரிச்சர்ட்ஸன் நடனம் அமைத்துள்ளார்.