பழங்குடியினர் சமூகங்களின் நிலையான முன்னேற்றத்தையும் நலனையும் மேம்படுத்தும் நோக்கில், ‘சீக் பவுண்டேஷன்’ என்கிற நிறுவனம், அதன் நிறுவனர் டாக்டர் விமலா பிரிட்டோ அவர்களின் தலைமையில், ஒரு ஆம்புலன்ஸ், ஒரு சரக்கு வாகனம் மற்றும் பல தையல் இயந்திரங்களை கோத்தகிரி மற்றும் கூடலூர் பகுதிகளின் பழங்குடியினர் மக்களுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.
இந்த விழா சென்னை செயின்ட் பிரிட்டோஸ் அகாடமியில் நடைபெற்றது. இதில் நீலகிரி வாழ் பழங்குடியினர் நலச் சங்கத்தின் (NAWA) செயலாளர் திரு. ஆல்வாஸ் மற்றும் ‘Seek Foundation’ தலைமை நிர்வாக அதிகாரி, திரு. தாமஸ் பொன்ராஜ், செயிண்ட் பிரிட்டோஸ் அகாடமியின் முதல்வர் திருமதி மேரி வசந்தகுமாரி ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர்.
இந்த முயற்சி, தொலை தூரத்தில் உள்ள பழங்குடியினர் பகுதிகளில் மருத்துவம், வாழ்க்கைத் திறன்கள் மற்றும் சமூக நலனை மேம்படுத்தும் சீக் பவுண்டேஷனின் தொடர்ந்த அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்துகிறது.
இதற்கு முன்னர், சீக் பவுண்டேஷன் முழுமையாகச் சீரமைக்கப்பட்ட மருத்துவ ஆம்புலன்ஸை வழங்கியதுடன், கூடலூர் பகுதியில் 20 பழங்குடியினர் குடும்பங்களுக்கான வீடுகள் கட்டுவதற்கும் உதவியுள்ளது. இதன் மூலம் அவ்விடங்களில் அவசர மருத்துவ சேவைகளும், வாழ்விட வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன.
செயின்ட் பிரிட்டோஸ் அகாடமியின் மாணவர்களும்,
சீக் பவுண்டேஷன், செயின்ட் பிரிட்டோஸ் அகாடமி மற்றும் NAWA ஊழியர்களும் உற்சாகமாகக் கலந்து கொண்டு சமூகப் பொறுப்பு, கல்வி மற்றும் நலனுக்கான தங்களின் பங்களிப்பை வெளிப்படுத்தினர்.
நிகழ்வில் கலந்து கொண்டு டாக்டர் விமலா பிரிட்டோ பேசும்போது, “சமூக நலனுக்காக எடுக்கப்படும் ஒவ்வொரு சிறிய அடியும், இரக்கமும் கருணையும் நிறைந்த வலுவான சமுதாயத்தை உருவாக்கும். சேவை, திறன் மற்றும் மரியாதையை எல்லா சமூகங்களுக்கும் கொண்டு செல்வதே எங்கள் நோக்கம்”என்றார்.
நிகழ்ச்சியின் நிறைவில், நன்கொடையால் பயன் பெற்ற சில பழங்குடிப் பயனாளர்கள் மற்றும் NAWA செயலாளர் திரு. ஆல்வாஸ், சீக் பவுண்டேஷனின் தொடர்ந்த ஆதரவுக்காக நன்றி தெரிவித்தனர். சமூக நலனுக்கான அந் நிறுவனம் ஆற்றும் பங்களிப்பையும் அர்ப்பணிப்பையும் பாராட்டினர்.

