செல்வராகவனின் ஆக்ரோஷம், நட்டியின் ஆங்காரம்… எதிர்பார்ப்பு நெருப்பை பற்றவைத்த ‘பகாசூரன்’ டிரைலர்!

‘பழைய வண்ணாரப்பேட்டை’, ‘திரௌபதி’, ‘ருத்ர தாண்டவம்’ படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் மோகன்.G இவர், ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் அடுத்ததாக தயாரித்து இயக்கும் படம் ‘பகாசூரன்’.

இந்தப் படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் நட்டி நடிக்கிறார். ‘ ‘கர்ணன்’ படத்திற்கு பிறகு நட்டி முக்கிய கேரக்டரில் நடிக்க, கதையை நகர்த்திச் செல்லும் முக்கிய கதாபாத்திரங்களில் ராதாரவி, கே.ராஜன் நடித்துள்ளனர். மற்றும் மன்சூர் அலிகான், தேவதர்சினி, கூல்ஜெயந்த், பி.எல்.தேனப்பன், சசி லையா, ரிச்சா ஜாக்கோப், அருணோதயன், குட்டி கோபி நடித்துள்ளனர்.

சாம்.சி.எஸ் இசையமைக்க, ஃபருக் ஜே பாட்ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்திற்கு எஸ்.தேவராஜ் எடிட்டிங் செய்ய, கலை இயக்குனராக எஸ்.கே பணியாற்றுகிறார். மிரட்டல் செல்வா சண்டை பயிற்சி செய்ய, ஜானி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார்.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்துவரும் நிலையில் சில தினங்களுக்கு முன் வெளியான படத்தின் டீசரும் ‘சிவ சிவாயம்…’ என்ற பாடலும் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியிடப்பட்டது. 2 நிமிடம் 56 விநாடிகள் ஓடும் அந்த டிரைலர்… படம் பார்க்கும் ஆவலை தூண்டுகிறது. சிவலிங்க பூஜையில் தொடங்கும் டிரைலரில் ஆங்காங்கே செல்வராகவன் காட்டும் ஆக்ரோஷமும், நட்டி வெளிப்படுத்தும் ஆங்காரமும் மிரட்டுகிறது. ஒருவனின் கழுத்தை திருகிப்போட்டுவிட்டு, கடலையை கொறித்தபடி செல்வராகவன் அசால்டாக நடந்துவரும் காட்சி அசத்தல்.

 

சமீபகாலமாக பள்ளி, கல்லூரிகளில் அதிகரித்து வரும் தற்கொலை சம்பவங்கள் அதன் பின்னணி பற்றி விசாரணை உட்பட நிகழ்கால நிஜத்தின் முகம் டிரைலரிலேயே பிரதிபலிப்பது ‘பகாசூரனை’ பார்க்கும் ஆவலை தூண்டுகிறது. விரைவில் படம் வெளியாகவுள்ள நிலையில் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை பற்றவைத்துள்ளது ‘பகாசூரன்’ டிரைலர். படம் இம்மாதம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here