சமூகத்திலிருக்கும் மனிதாபிமானமற்ற கொடியவர்கள் மீது, சாமானியன் ஒருவனுக்கு கோபம் வந்தால் அதன் விளைவுகள் எப்படியிருக்கும் என்பதை பல படங்களில் பார்த்தாயிற்று. அதையே மக்கள் நாயகன் ராமராஜன் நடிப்பில் பார்க்க இயக்குநர் ராகேஷ் உருவாக்கியிருக்கும் வாய்ப்பே இந்த ‘சாமானியன்.’
பரபரப்பாக இயங்கும் அந்த வங்கியை கொள்ளையடிக்க ஒரு தரப்பு திட்டமிட்டிருக்கும் சூழலில், சாமானிய மனிதன் ஒருவன் அந்த வங்கிக்குள் நுழைந்து டைம் பாம், துப்பாக்கி உள்ளிட்ட சங்கதிகளைக் காட்டி மேனேஜரை மிரட்டி, வங்கியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறான். காவல்துறை பரபரப்படைகிறது. மீடியாக்கள் சுறுசுறுப்படைகிறது. அவனிடமிருந்து வங்கியில் பணிபுரியும் ஊழியர்களையும் பொது மக்களையும் உயிருடன் மீட்க வேண்டுமானால் அவனது கோரிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டிய கட்டாயம்… இந்த சூழலில் காவல்துறை எடுத்த நடவடிக்கை என்ன? அந்த சாமானியன் யார்? அவன் வங்கியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த காரணம் என்ன? அவன் வைத்த கோரிக்கைகள் என்ன? இப்படி வரிசைகட்டும் கேள்விகளுக்கான பதில்களே படத்தின் மீதிக் கதை.
தன் வயதுக்கும், ஓடியாடி களமாட முடியாத கனத்த தேகத்துக்கும் ஏற்ற பாத்திரத்தில் ராமராஜன். உட்கார்ந்த இடத்திலிருந்தே பிதுங்கும் விழிகளால் எதிரிகளை மிரட்டுவதாகட்டும், ராணுவ அதிகாரியாக சில நிமிடம் காட்டும் கம்பீரமாகட்டும், மகளுடனான சென்டிமென்ட் காட்சிகளில் மனம் உருகுவதாகட்டும் தன்னால் முடிந்ததை பாராட்டும்படி செய்திருக்க, அவரை புகழ் வெளிச்சத்தின் உச்சத்துக்கு கொண்டுபோன ‘செண்பகமே செண்பகமே’ பாடலை அவரே பாடும்படியான சந்தர்ப்பத்தை உருவாக்கி உற்சாகமூட்டியிருக்கிறது திரைக்கதை. பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு திரையில் மக்கள் நாயகனைப் பார்க்கும்போது மனதுக்குள் ஒருவித பரவசம் பற்றிக் கொள்வதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
ராமராஜனுடன் சேர்ந்து சமூக விரோதிகளுக்கு பாடம் புகட்டும் பாத்திரத்தில் ராதாரவியும், எம் எஸ் பாஸ்கரும் தேவையான பங்களிப்பை தந்திருக்க, ராமராஜனின் மகளாக வருகிற நக்ஷா சரண் சொந்த வீடு கட்ட வங்கியில் கடன் வாங்குவதில் கணவருடன் இணைந்து பிரச்சனைகளை எதிர்கொள்வது, கடன் பெற்ற பின் கட்ட முடியாமல் அவமானங்களைச் சந்திப்பது, அதிலிருந்து விடுபட விபரீத முடிவெடுப்பது என உணர்வுகளின் கலவையாஉ உருவான கதாபாத்திரத்துக்கு கச்சிதமான நடிப்பால் உயிரூட்டியிருக்கிறார்.
கட்டுமான நிறுவன முதலாளியாக வருகிற மைம் கோபியின் வில்லத்தனத்தில் இதுவரை பார்க்காத அம்சம் ஏதும் தென்படவில்லை. பேங்க் மேனேஜராக கதையோட்டத்தின் இன்னொரு வருகிற வில்லனாக போஸ் வெங்கட்டிலிருந்து இன்னபிற பாத்தியங்களில் வருகிற கே.எஸ்.ரவிக்குமார், லியோ சிவகுமார், ஸ்ம்ருதி வெங்கட், வினோதினி, அபர்நதி, கஜராஜ், முல்லை தனசேகர் என அத்தனைப் பேரின் நடிப்பும் நேர்த்தி.
இசைஞானி இளையராஜா இந்த படத்துக்காக தந்திருக்கும் பாடல்களைவிட, அவரது இசையில் உலகை மயக்கிய அந்தக்கால பாடல்கள் சிலவற்றின் ஒன்றிரண்டு வரிகள் தகுந்த தருணங்களில் ஒலிக்கும்போது தியேட்டர் முழுக்க உற்சாகம். பின்னணி இசை காட்சிகளுக்கு ஓரளவு வீரியமூட்டியிருக்கிறது.
சொந்த வீட்டுக் கனவோடு லோனுக்காக அணுகுபவர்களை வங்கிகள் எப்படி நடத்துகின்றன என்பதை, கட்டுமான நிறுவனங்கள் எப்படியெல்லாம் சதி செய்கின்றன என்பதை எடுத்துக் காட்டியிருக்கும் சாமானியன், ‘உங்கள் தகுதிக்கு மீறி கடன் வாங்காதீர்கள்’ என்ற அட்வைஸையும் சமூகத்துக்கு தந்திருக்கிறான்.
சாமானியன் – கதையம்சத்தில் மாஸ் ஹீரோக்களுக்கு சளைத்தவனல்ல!