தாய்ப்பாசத்தை மையப்படுத்திய பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லராக ‘சபரி.;
சஞ்சனா கணவனைப் பிரிந்து மகளுடன் வசித்து வருகிறார். அவரது மகளை யாரோ ஒரு முரடன் தன் மகள் என்று சொல்லி, மகளை தன்னுடன் அழைத்துப் போகும் நோக்கத்துடன் அணுகுகிறான். அதற்கு சம்மதிக்காத சஞ்சனாவை தாக்குகிறான்; கொலை செய்யவும் முயற்சிக்கிறான்.
சஞ்சனா அவனிடமிருந்து தன்னையும் மகளையும் காப்பாற்றிக்கொள்ள போராடுகிறார். அந்த போராட்டத்தின் முடிவு என்ன? அந்த முரடன் யார்? அவனுக்கும் சஞ்சனாவின் மகளுக்கும் என்ன சம்பந்தம்? சஞ்சனா கணவனைப் பிரிந்த காரணம் என்ன? எல்லா கேள்விகளுக்கும் திரைக்கதையில் பதில் சொல்லியிருக்கிறார் அனில் கட்ஸ்.
சஞ்சனாவாக வரலெஷ்மி சரத்குமார். படம் முழுக்க பயம் சூழ்ந்து, பதற்றம் நிறைந்து வலம் வருகிற அவர், தொடர்ச்சியாக வில்லனிடம் அடிபட்டு ரத்தக்காயத்துடன் சரிவது, அங்குமிங்கும் ஓடி எதிலாவது மோதி கீழே விழுவது என நீள்கிற காட்சிகள் சற்றே சலிப்பு தந்தாலும் மகளைக் காப்பாற்றத் துடிக்கிற தாயின் பரிதவிப்பை கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிற நடிப்பு கவர்கிறது.
வரலெஷ்மியின் மகளை தன்னுடன் அழைத்துச் செல்ல முயற்சிப்பதில் மைம் கோபி காட்டும் வெறித்தனமும் நடத்தும் தாக்குதலும் சில காட்சிகளில் மட்டும் மிரட்டல். மற்றபடி வெறும் உருட்டல்.
வரலெஷ்மியின் கணவராக கணேஷ் வெங்கட்ராம். பெரும் பணக்காரரான அவர் கார்ப்பரேட் திமிரை நேர்த்தியாக வெளிப்படுத்த, மகளாக வருகிற பேபி நிவேக்ஷாவின் துறுதுறுப்பு கவர்கிறது. இன்னபிற பாத்திரங்களை ஏற்றிருப்போர் அவரவர் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
ராகுல் ஸ்ரீவத்சவ், நானி சமிடிஷெட்டி இருவரின் ஒளிப்பதிவில் நேர்த்தி தெரிகிறது. பாடல்கள் பெரிதாய் மனதில் பதியாவிட்டாலும் கதையின் ஓட்டத்திற்கேற்ற கோபி சுந்தரின் பின்னணி இசை கவனிக்க வைக்கிறது.
மிகச்சில திருப்பங்களுடன் கதையை யோசித்த இயக்குநர், திரைக்கதையை ஏனோதானோவென்று நகர்த்தியிருப்பது பலவீனம். சில காட்சிகள் பார்த்துக் கொண்டிருப்பது சஸ்பென்ஸ் திரில்லரா, ஹாரரா என குழப்பம் தந்து அடுத்தடுத்த காட்சிகள் மீதான எதிர்பார்ப்பைத் தூண்டுவது படத்தின் பலம்.