தேசப்பற்றோடு சரிசமமாய் பாசப்பற்று கலந்து செய்த ‘சமாரா.’
வருடம் முழுக்க பனிபொழியும் இமாச்சல் பிரதேசத்தில், உறைந்து கிடக்கும் பனிக் கட்டிகளுக்கிடையில் சில சடலங்கள் விரைத்துக் கிடக்கின்றன. அதிலிருந்து இளம்பெண் ஒருவர் உயிரோடு கிடைக்கிறார். அவர் அந்த பகுதியை சேர்ந்தவரின் மகள் என்பது தெரியவருகிறது. அந்த பெண்ணின் தந்தை அந்த பெண்ணை மீட்டுக் கொண்டு போகிறார். அந்த பெண் மூலம் ஒட்டு மொத்த இந்தியாவுக்கே ஆபத்து என்பது கண்டறியப்பட அந்த பெண்ணின் தந்தை என்ன முடிவெடுத்தார் என்பது கிளைமாக்ஸ்.
ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்கும் தொடர்பில்லாமல் நகரும் படத்தின் முன்பாதி ஏகத்துக்கும் எதிர்பார்ப்பைத் தூண்ட, இறந்து கிடந்தவர்கள் யார்? அவர்களின் இறப்புக்கு காரணம் என்ன? உயிருடன் மீட்கப்பட்ட பெண்ணால் நேரவிருந்த ஆபத்து என்ன? என மனதைக் குடையும் கேள்விகளுக்கு பதில் சொல்கிறது படத்தின் பின்பாதி!
காவல்துறை உயரதிகாரியாக ரகுமான். மெல்லிய போதையேற்றிக் கொண்டு துப்பறிவது அவரது கதாபாத்திரத்துக்கு கம்பீரம் கூட்டியிருக்கிறது.
உடல் முழுக்க எரிந்ததால் உருவான தழும்புகளோடு, சற்றே விகாரமான தோற்றத்தில் ‘பிராஸ்தடிக்’ மேக்கப்போடு பினோஜ் வில்லியா. சிங்கிள் பாதராக மகள் மீது காட்டும் அளவுகடந்த பாசம் நெகிழ வைக்கிறது. நிறைவுக் காட்சியில் தேசத்தின் மீது காட்டும் நேசம் எழுந்து நின்று வணக்கம் செலுத்தத் தோன்றுகிறது.
அவரது மகளாக நடித்திருக்கும் சஞ்சனா தீபுக்கு அப்பா மீது ஆழமான பிரியம் காட்டுகிற, தனக்குள் செலுத்தப்பட்ட மருந்தின் வீரியத்தால் வெறித்தனத்தை வெளிப்படுத்துகிற கனமான கதாபாத்திரம். தனக்கு கொடுக்கப்பட்டிருப்பது படத்தின் மையக்கருவை தூக்கிச் சுமக்கும் வேலை என்பதை உணர்ந்து அதற்கு நேர்த்தியான நடிப்பால் உயிர் தந்திருக்கிறார்.
படத்தின் பின்பாதியில் மட்டுமே வந்தாலும் அனுபவ நடிப்பைக் கொடுத்து கிளைமாக்ஸில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தருகிறார் பரத்.
தேர்ந்த பாலிவுட் நடிகர் தினேஷ் லம்பாவுக்கு இன்னும் கொஞ்சம் கவனிக்கும்படியான பாத்திரத்தைக் கொடுத்திருக்கலாம்.
நாட்டையே அழிக்க நடக்கும் விபரீதங்களின் அஸ்திவாரமாக, சூனியக்காரியைப் போல் வெளிப்படுகிற அந்த பாட்டி மிரள வைக்கிறார்.
மற்ற கதாபாத்திரங்களைச் சுமந்திருப்பவர்கள் பங்களிப்பில் குறைவைக்கவில்லை.
இயற்கை குத்தகைக்கு எடுத்து கொஞ்சிக் குழாவும் இமாச்சல் பிரதேசத்தின் அழகை அதன் தன்மை மாறாமல் கண்களுக்கு விருந்தாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சினு சித்தார்த்.
கோபி சுந்தரின் பின்னணி இசை காட்சிகளுக்கு தெம்பூட்டியிருக்கிறது.
ஹிட்லர் தன் ஆட்சிக் காலத்தில் எதிராளிகளை வீழ்த்துவதற்காக பரிசோசித்து மிரண்டுபோன ஒருவித வைரஸை வைத்து நாட்டை சுடுகாடாக்க ஒரு தரப்பினர் செய்யும் சதியையும், அதிலிருந்து நாடு எப்படி மீள்கிறது என்பதுமே கதையோட்டம். அதை நான் லீனியர் பாணியில் பரபரப்பும் விறுவிறுப்புமான திரைக்கதை அமைத்து காட்சித் தொகுப்பாக்கியிருக்கிற படத்தின் இயக்குநர் சார்லஸ் ஜோசப்பின் முயற்சியை தயங்காது பாராட்டலாம்!