‘சரக்குப் பழக்கம் சமூகச் சீர்கேட்டுக்குத் தொடக்கம்‘ என எடுத்துச் சொல்லும் படம்.
கணக்கு வழக்கு இல்லாமல் குடிப்பவர் வழக்கறிஞர் மன்சூர் அலிகான். தன்னுடன் குடித்தனம் நடத்தும் மனைவியை அடித்துத் துவைத்து அழவைப்பவர், குடிகாரர்களுக்காக சங்கம் துவங்கி கோடிக்கணக்கில் உறுப்பினர்களைச் சேர்க்கிறார். அந்த குஷியில் கேளிக்கை, கொண்டாட்டம் என்றிருப்பவர் சங்கத்தின் சார்பில் சில கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு போகிறார். அது மதுவிலக்குத் துறை அமைச்சருக்கும் முதலமைச்சருக்கும் பெரும் தலைவலியாக மாற, மன்சூரை தீர்த்துக் கட்டும் அளவுக்கு திட்டம் வகுக்கிறார்கள். அந்த திட்டத்திலிருந்து தப்பிப்பவர், கொலைப் பழி சுமந்து சிறைக்குச் செல்கிறார். அவரை மீட்கத் துடிக்கும் அவரது மனைவி, பூரண மதுவிலக்கு கேட்டு போராட்டம் துவங்க, அவரை சிறையிலடைத்து சித்திரவதை செய்கிறார்கள்.
அப்படியான அராஜக நடவடிக்கைகளிலிருந்து அவர்களால் தப்பிக்க முடிந்ததா? மதுவிலக்கு கோரிக்கை அரசால் ஏற்கப்பட்டதா? என்பதெல்லாம் மிச்ச சொச்ச கதை. இயக்கம் ஜெயக்குமார்.ஜெ
மிதமிஞ்சிய குடி, மனைவிக்கு தாறுமாறாய் அடி என ஆரம்பக் காட்சிகளிலேயே அதிரடி காட்டுகிற மன்சூர் அலிகான், வாதாடுவதற்கு கேஸ் கிடைக்குமா என தெருத்தெருவாக அலைவது, குடிப்பிரியர்கள் சங்கம் துவங்கி ரகளையில் ஈடுபடுவது என காமெடியிலும் குறைவைக்கவில்லை.
மன்சூருக்கு மனைவியாக வருகிற, களையான முகம்கொண்ட வலினாவின் வளைவு நெளிவுகள் வளமாக இருக்கிறது. குத்துவிளக்காய் ஜொலிக்கிற அவரது மதுவிலக்கு போராட்டம் வலிமையாக இருக்கிறது.
அட்வகேட்டாக வருகிற கே. பாக்யராஜ் அனுபவ நடிப்பால் அட்டனன்ஸ் போடுகிறார். அமைச்சராக வருகிற நாஞ்சில் சம்பத் வசன உச்சரிப்பின் ஏற்ற இறக்கத்திலேயே வில்லத்தனம் செய்கிறார்.
முதலமைச்சராக ஆடுகளம் நரேன், நீதிபதிகளாக கே எஸ் ரவிக்குமார், பழ கருப்பையா, அயோக்கிய போலீஸாக சாய் தீனா என பழக்கப்பட்ட முகங்கள் பக்குவமான நடிப்பைத் தர, காமெடிக்கு மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, தேனடை மதுமிதா கூடவே சரவண சுப்பையா, கோதண்டம், சேஷ, சசிலயா என வரிசை கட்டுகிறது நட்சத்திரப் பட்டாளம்.
இன்ஸ்டாவில் இடுப்பையும் தொப்புளையும் தாராளமாய்க் காட்டி சூடேற்றுகிற சூரியபிரபா, கொஞ்சம் அடக்கி வாசித்து ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார் என்பது ‘ஹாட்’டான செய்தி.
கொஞ்ச நேரமே வருகிற யோகிபாபு, மக்களுக்கெதிரான ஆட்சியாளர்களின் செயல்பாடுகளை எடுத்துச் சொல்லும் கருத்துள்ள பாடலில் மன்சூருடன் கைகோர்த்திருப்பது கவனம் ஈர்க்கிறது.
‘குடியாட்சின்னா மக்களுக்கான ஆட்சி, இப்படி குடிய வித்து மக்களை அழிக்கிறதுக்கான ஆட்சி கிடையாது’ என வசனங்கள் ஆளுங்கட்சியை வெளுத்துவாங்குவதோடு, பாடல் வரிகளிலும் சீற்றத்தை ஏற்றி விட்டிருக்கிறார்கள்.
‘ஆயி மகமாயி’ பாடலின் இசையில் உற்சாகத்தை நிரப்பியிருக்கிறார் சித்தார்த் விபின்.
படத்தில் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு குறைவில்லாமல் பார்த்துக் கொண்ட படக்குழு, ‘குடி நாட்டுக்கு கேடு’ என்பதை அழுத்தந்திருத்தமாக சொல்லியிருப்பதில் தனித்து தெரிகிறது.
படத்தின் நிறைவுக் காட்சியில் நடப்பது நிஜத்திலும் நடந்தால் நன்றாகத்தான் இருக்கும். ஹூம்…