‘சர்தார்’ சினிமா விமர்சனம்

பெட்ரோல் கிணற்றில் தீ பிடித்தது போன்ற பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்த திரைக்கதையில் சுறுசுறுப்பு காட்டும் ‘ஸ்பை திரில்லர்.’

இன்று நாடு முழுவதும் பெட் பாட்டில்களில் குடிநீர் விற்பனை படு ஜோராக நடப்பதன் பின்னணி என்ன என்பதை ஆராய முயற்சித்து, இதே நிலை தொடர்ந்தால் மக்களின் தண்ணீர் தேவை சார்ந்த எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதை சமூக அக்கறையோடு காட்சிப்படுத்தி அதிரச் செய்கிற ‘சர்தார்.’

துரோகத்தால் வீழ்த்தப்பட்ட சிங்கமாக, இதயத்தில் தேசப்பற்றை சுமக்கும் உளவாளியாக, எதிரியை வீழ்த்த உடல்பலத்தோடு மூளையையும் உபயோகிப்’பவராக‘ சர்தார் கார்த்தி. அந்த கதாபாத்திரத்தின் கனத்திற்கு கம்பீரம் சேர்க்கும்படி அவருக்கான சண்டைக் காட்சிகளில் சாகசம் சேர்த்திருப்பது, அந்த காட்சிகளில் அதிரடிப் பாய்ச்சலால் கார்த்’தீ பறப்பது மிரட்டல்! தோற்றமும் கவர்கிறது.

சர்தார் கார்த்தியின் மகனாக, காவல்துறை உயரதிகாரியாக இன்னொரு கார்த்தி. விளம்பர விரும்பியாக படத்தின் ஆரம்பக் காட்சியில் போராட்டக்காரர்களை கலைப்பதில் அவர் காட்டும் சாதுர்யம் கலகல. சிரிப்பு போலீஸாக என்ட்ரி போடும் அவர், கதைக்குள் பரபரப்புக்குள் தொற்றிக் கொண்டபின் தேர்ந்த நடிப்பால் ஈர்க்கிறார்.

அப்படி திரும்பும்போது ஒரு கெட்டப், இப்படி திரும்பும்போது இன்னொரு கெட்டப், விழும்போது மற்றொரு கெட்டப், எழும்போது வெறொரு கெட்டப் எனவும் கார்த்திக்கு ஓவர் டைம் வேலை கொடுத்திருக்கிறது திரைக்கதை. மின்னல் போல் வந்துபோனாலும் அவற்றிலும் ரசிக்க வைக்கிறது கார்த்தியின் நடிப்பும் துடிப்பும்!

கதாநாயகிகளில் ராஷி கண்ணாவை விட ரஷீஷா விஜயனுக்கே சொல்லிக் கொள்ளும்படியான பாத்திரம். பிளாஷ்பேக் காட்சிகளில் அவரது கண்களில் காதல் வழிவது அழகு!

சங்கி பாண்டேவுக்கு கார்ப்பரேட் வில்லன்களின் டெம்ப்ளேட் கேரக்டர். அதை முடிந்தவரை சரியாக செய்திருக்கிறார்.

ஏகப்பட்ட வருடங்கள் கழித்து திரும்ப வந்திருக்கும் லைலா, கதையின் திருப்பங்களுக்கு காரணமாக இருக்கிறார் என்பது தவிர சொல்லிக் கொள்ள ஏதுமில்லை.

யூ டியூப் வீடியோக்களில் தன் வயதுக்கு மீறிய வேடங்களில் நடித்துப் பழகியதாலோ என்னவோ குட்டிப் பையன் ரித்விக்குக்கு, கதைநாயகர்களுக்கே ஆலோசனை சொல்லும் மெச்சூரிட்டித்தனத்தை தூக்கிக் கொடுத்திருக்கிறார்கள்! ஐஸ் கட்டியின் தலையில் சூரியனை வைத்தது போலிருக்கிறது!

ஜி.வி. பிரகாஷின் பின்னணி இசை காட்சிகளின் விறுவிறுப்புக்கு பொருத்தம். ‘ஏறுமயிலேறி’ பாடலையும் ரசிக்கலாம்.

ஒளிப்பதிவாளரை அதிகம் வேலை வாங்கும்படி படத்தில் ஏகப்பட்ட காட்சிகள். தேவைக்கேற்ப மெனக்கெட்டிருக்கிறார் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ்.

லாஜிக் மீறல்கள், சற்றே சலிப்பு தரும் காட்சிகள் என சிலபல குறைகள் இருந்தாலும் மக்களின் ஆரோக்கியத்துக்கு ஆப்பு வைக்கும் பெட் பாட்டில் குடிநீரின் பதைக்க வைக்கும் பக்கங்களை துணிச்சலாக புரட்டிக் காட்டியதற்காக இயக்குநர் பி.எஸ். மித்ரனை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்!

படத்தைப் பார்ப்பவர்களில் சிலராவது ‘இனி கேன் வாட்டரை குடிக்க மாட்டேன்‘ என உறுதியெடுத்தால் அதுதான் சர்தாரின் நிஜமான சக்ஸஸ்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here