‘சத்தமின்றி முத்தம் தா’ சினிமா விமர்சனம்

பரபரவென அடித்து ஆட முடிகிற ஆள் மாறாட்டக் கதை; சரசரவென வேகமெடுக்கும் சஸ்பென்ஸ் திரில்லராய் ‘சத்தமின்றி முத்தம் தா.’

கையில் ஆயுதத்துடன் முகக்கவசம் அணிந்த நபர் ஒருவர், அந்த இளம்பெண்ணை கொலைவெறியோடு துரத்த, அவள் அவளுடைய வீட்டுக்குள்ளிருந்து அலறியடித்து வெளியே ஓடிவருகிறாள். அந்த நேரமாகப் பார்த்து கார் ஒன்று சீறிவந்து மோதுகிறது.

அடிபட்டு ரத்தம் சொட்டச் சொட்ட துடிக்கிற அவளை, இளைஞன் ஒருவன் தூக்கிச் சென்று, அவளை தன் மனைவி என்று சொல்லி மருத்துவமனையில் சேர்க்கிறான். அன்பாக கவனித்துக் கொள்கிறான். சில நாட்கள் கடந்துபோக காயங்கள் ஆறி குணமாகிறாள்; தலையில் அடிபட்டதால் பழைய நினைவுகளை இழக்கிறாள். அப்படியே டிசார்ஜ் ஆகி வீட்டுக்குத் திரும்பி, கணவன் அரவணைப்பில் அவளது நாட்கள் நகர்கிறது.

இது ஒரு பக்கமிருக்க, காரில் அடிபட்டு கடந்த காலத்தை மறந்துவிட்ட அந்த பெண்ணை தன் மனைவி என்றும், அவளை காணவில்லை என்றும் சொல்லி இன்னொரு இளைஞன் போலீஸில் புகார் தருகிறான். விசாரணை துவங்குகிறது.

அந்த பெண்ணுக்கு, தன்னுடன் இருப்பவன் தன் கணவன் இல்லையென்பது தெரியவருகிறது.

அப்படியெனில் கணவனாக உடனிருப்பது யார்? அவனது நோக்கம் என்ன? அவளுடைய கடந்த காலத்தில் நடந்தது என்ன? அவளை கொலை செய்ய முயற்சித்தது யார்?

இத்தனை கேள்விகளுக்கும் திரைக்கதையில் பதில் தருகிறார் இயக்குநர் ராஜ் தேவ். ‘தி வாவ்’ ஹாலிவுட் படத்தின் சிலபல காட்சிகள் நினைவுக்கு வந்து போகின்றன…

பணத்துக்காக கொலை செய்வதுதான் முழு நேரத் தொழில் என்றாலும், நல்லவர்கள் மீது கனிவு காட்டும் விதத்தில் அமைந்த கதாபாத்திரத்தில் ஸ்ரீகாந்த். தான் கொலை செய்ய வேண்டிய பெண் காரில் அடிபட உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து உயிரைக் காப்பாற்ற முயற்சிப்பது, கணவனாக உடனிருந்து ஆபத்திலிருந்து அவளை பாதுகாப்பது என நீளும் காட்சிகளில் மனிதாபிமான முகம் காட்டுபவர்,

சண்டைக் காட்சிகளிலும், சரமாரியாய் கொலை செய்வதிலும் ஆக்ரோஷ அவதாரமெடுத்திருக்கிறார்.

தான் யார், தனக்கு என்ன நடந்தது, தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என எதுவும் தெரியாமல், உண்மையிலேயே தன் கணவன் யார் என புரியாமல் தவிப்பவராக பிரியங்கா திம்மேஷ். தமிழுக்கு புதுவரவு; நல்வரவு. அம்மணி பயம், பதட்டம், கோபம், ரொமான்ஸ் என அத்தனை உணர்வையும் அட்டகாசமாக டெலிவரி செய்கிறார். அவரது இளமைக்கும் அதன் செழுமைக்கும் போனஸ் மார்க் போடலாம்.

இரு பெண்களைத் தேர்ந்தெடுத்து ஆசைக்கு ஒருத்தி, ஆஸ்திக்கு ஒருத்தி என கட்டம் கட்டி வாழ்கிற வியான், வில்லத்தனத்தை கொஞ்சமாகவும் உடற்கட்டை முழுமையாகவும் காட்டியிருக்கிறார்.

கவர்ச்சிக்கு உகந்த தனது கச்சிதமான வளைவு நெளிவுகளை, ஆண்ட்ரியாவின் கிக்கான குரலில் ஒலிக்கிற ‘செம்பரம்பாக்கம் ஏரியளவு’ பாடலில் முடிந்தளவு பந்தி வைத்திருக்கிறார் நிஹாரிகா.

சென்னை அபிராமபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக இருந்துகொண்டு, இ.சி.ஆர். சாலை வரை பறந்து சென்று கடமையாற்றுகிறவராக ஹரீஷ் பெராடி. கொலை செய்துவிட்டு நடந்துபோகிறவன் தன்னைப் பார்த்து கையசைத்து ‘பை’ சொல்ல, ‘பாத்து பத்திரமா போ ராசா’ என்று சொல்வதுபோல் அவனை பார்ப்பதெல்லாம் அநியாயம் அக்கிரமம். வசன உச்சரிப்பு நேற்று ஸ்போக்கன் இங்கிலீஷ் கற்கத் தொடங்கியவன் இன்று பேசிப் பழகுவதுபோலிருக்கிறது. நல்ல நடிகரை இப்படியெல்லாம் பயன்படுத்தியிருக்க வேண்டாம்.

காட்சிகளின் விறுவிறுப்பை உணர்ந்து பின்னணி இசை தந்திருக்கிறார் ஜுபின்.

எளிமையான கதைக்களத்தின் நீள அகலங்களை குறையின்றி தன் கேமராவில் சுருட்டியிருக்கிறார் யுவராஜ்.

சஸ்பென்ஸ் திரில்லருக்கேற்ற நல்லதொரு கதையை கையிலெடுத்த இயக்குநர், காட்சிகளில் நாடகத்தனத்தை அள்ளித் தெளித்ததால் சத்தமின்றி முத்தம் தா – பனியில் விழுந்த பட்டாசாகியிருக்கிறது!

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here