என்ன நடந்திருக்கும், அடுத்து என்ன நடக்கும் என சரியாக யூகிக்க முடியாதபடி, அப்படியே யூகித்தாலும் அது தவறாகவே இருக்கும்படியான கதைக்களத்தில் அமைந்த விறுவிறுப்பான கிரைம் திரில்லர். ‘காவல்துறை உங்கள் எதிரி‘ என்று எடுத்துக்காட்டும் படைப்பாக ‘சட்டம் என் கையில்.’
தான் ஓட்டிக் கொண்டிருந்த கார் மோதி உயிரிழந்த நபரை டிக்கியில் தூக்கிக் போட்டுக்கொண்டு பயணத்தை தொடர்கிற இளைஞன் கெளதம், வேறொரு பிரச்சனையில் போலீஸ் பிடியில் சிக்குகிறான். போலீஸ் அவனை அந்த வேறொரு விஷயத்துக்காக அடித்து உதைக்கிறது. அதையெல்லாம் சமாளித்தபடி, போலீஸ் ஸ்டேஷனில் நிற்கிற தன் காரிலிருக்கும் பிணம் போலீஸாரின் பார்வையில் சிக்காமலிருக்க சாமர்த்தியமாக சிலபல விஷயங்களைச் செய்கிறான்.
இன்னொரு பக்கம், ஒரு இளம்பெண் கொலை செய்யப்பட, அந்த கொலை அவள் அணிந்திருந்த செயினை அறுப்பதற்காக நடந்திருக்கும் என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை நடக்கிறது. விசாரணையின் முடிவில் கெளதம் போலீஸிடம் சிக்கியதற்கும் அந்த பெண்ணின் மரணத்துக்கும் தொடர்பு இருப்பது தெரியவருகிறது.
அது என்ன தொடர்பு? காரிலிருக்கும் சடலத்தை போலீஸார் கவனித்தார்களா, இல்லையா? அந்த பெண்ணின் மரணத்துக்கு உண்மையான காரணம் என்ன? இத்தனை கேள்விகளுக்கும் பதில் தருகிறது கதையின் தொடர்ச்சி… இயக்கம் சாச்சி
கெளதமாக சதீஷ். சடலத்துடன் காரை வழிமறித்த போலீஸிடம் பயந்து பணிவது, போலீஸ் ஸ்டேசனில் இருந்தபடியே, அதிகாரிகளுக்குள் இருக்கிற ஈகோவை சாதகமாகப் பயன்படுத்தி தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முயற்சிப்பது, நடக்கும் விசாரணையின் உண்மைக் குற்றவாளியை வெளியுலகத்துக்கு அடையாளம் காட்ட புத்திசாலித்தனமாக ஸ்கெட்ச் போடுவது என சதீஷ் தந்திருப்பது அலட்டலில்லாத அசத்தலான பங்களிப்பு. ஒரேயொரு காட்சி தவிர, துளியும் சிரிப்பூட்டாதபடி சீரியஸான கதையின் கவனமாக களமாடியிருக்கும் சதீஷ், தன் உடல் குறையை சுட்டிக் காட்டி பேசும் போலீஸை ஆவேசமாக அறையும்போது ‘அட’ என்றிருக்கிறது.
பணத்துக்காக எதையும் செய்ய துணிகிற அயோக்கிய காவல்துறை அதிகாரியாக பாவெல் நவகீதன். ‘நான் போலீஸ் இல்ல; பொறுக்கி’ எனும்படி படம் முழுக்க முரட்டுத்தனத்துடன் வலம்வருவதில் கதாபாத்திரத்துக்கேற்ற கம்பீரத்தை தன் உடல்மொழியில் கச்சிதமாக கடத்தியிருக்கிறார்.
சப் இன்ஸ்பெக்டராக இருந்துகொண்டு, இன்ஸ்பெக்டர் பதவியை அடைவதற்காக சந்தர்ப்பம் பார்த்து சதிவலை விரிக்கும் அஜய் ராஜின் மெல்லிய வில்லத்தனம் கதையோட்டத்தின் பலம்.
மைம் கோபியை பல படங்களில் காவல்துறை உயரதிகாரியாக பார்த்தாயிற்று. மீண்டும் அதேவிதமாக பார்க்கும் வாய்ப்பை உருவாக்கியிருக்கிறது இந்த படம்.
காவல்துறையில் தங்கள் பதவிகளின் அதிகார வரம்புக்குட்பட்ட அயோக்கியத் தனங்களை அரங்கேற்றுவதை ஈ ராம்தாஸ், பவா செல்லதுரை இருவரும் பங்கிட்டு பக்காவாகச் செய்திருக்கிறார்கள்.
சதீஷுக்கு தங்கையாக ரித்திகா. கதையின் மையப்புள்ளியாக இருந்தாலும் அம்மணிக்கு வழங்கப்பட்டிருப்பது ஒருசில காட்சிகள் மட்டுமே. அதில் போலீஸுடன் மோத துணிகிற தருணத்தில் கவனம் ஈர்க்கிறார்.
கே பி ஒய் சதீஷ், ஜீவா ரவி, வித்யா பிரதீப் என இன்னபிற நடிகர் நடிகைகளின் பங்களிப்பு நிறைவு.
சில காட்சிகளில் அதிரடியாகவும் சில காட்சிகளில் மிதமாகவும் என கதையின் போக்கிற்கேற்ப பின்னணி இசையைத் தந்து படத்தை பலப்படுத்தியிருக்கிறார் எம் எஸ் ஜோன்ஸ்.
கதையின் பெரும்பகுதி இரவிலேயே நடக்க, அந்த இருளிலும் ஏற்காட்டின் பசுமை குறையாதபடி சுருட்டியிருக்கிறது பி ஜி முத்தையாவின் கேமரா.
குற்றவாளிகளை நேர்வழியில் தண்டிக்க முடியாதபோது பாதிக்கப்பட்ட சாமானியன் சட்டத்தை கையிலெடுக்கும் வழக்கமான கதைதான் என்றாலும், ஆரம்பத்திலிருந்து இறுதிவரை சஸ்பென்ஸை தக்கவைத்த,
காவல்துறை அதிகாரிகளுக்குள் இருக்கும் ஈகோ கொலைகாரனை வெளிச்சத்துக்கு கொண்டுவருவதாய் அமைந்த திரைக்கதை படத்துக்கு தரமான கிரைம் திரில்லர் அந்தஸ்தை தந்திருக்கிறது.
ஒட்டுமொத்த போலீஸ் ஸ்டேஷனும் ஒரே வழக்கிலேயே கவனம் செலுத்துவது உள்ளிட்ட சில குறைகளை தவிர்த்திருக்கலாம்.
சட்டம் என் கையில், ரசிகனை தண்டிக்காது; டிக்கெட்டுக்கு செலவிடும் காசு தண்டமாகாது!