‘மனதில் சாதிவெறியையும் கையில் அரிவாளையும் தூக்கிக் கொண்டு, சாதி மாறிக் காதலிப்பவர்களின் ரத்தத்தை ருசி பார்ப்பதை தொழிலாக வைத்திருக்கிற, கேடு கெட்ட மனித மிருகங்களைப் பற்றிய படங்கள் வாராவாரம் மாதாமாதம் வந்து கொண்டேயிருக்கின்றன. இந்த வார வரவு ‘செம்பியன் மாதேவி.’
இளைஞன் வீரா தாழ்ந்த சாதிப் பெண்ணான மாதேவியை, அவள் வேண்டாம் வேண்டாம் என பலதடவை மறுத்த பின்னும் துரத்தித் துரத்திக் காதலித்து, அவள் மனதில் இடம் பிடிக்கிறான். மனதால் இணைந்தவர்கள் உடலாலும் இணைய, அதன் விளைவாக கர்ப்பம் தரிக்கும் மாதேவி, தன்னை திருமணம் செய்துகொள்ள வீராவை வலியுறுத்துகிறாள். வீரா மறுக்கிறான்.
இது ஒருபுறமிருக்க சாதி வெறியர்களுக்கு விவரம் தெரிந்து, அவர்கள் காதல் ஜோடியை காவு வாங்க களமிறங்குகிறார்கள். அதன்பின் நடப்பதெல்லாம் பல படங்களில் பார்த்த அதே ரணகளம்; அதே அரிவாள் வெட்டு, அதே ரத்தச் சகதி…
காதலர்கள் தப்பித்தார்களா? சாதி வெறியால் சடலமானார்களா என்பதே கதையின் மிச்ச சொச்சம்.
கதையின் நாயகன் வீராவாக லோக பத்மநாபன். அவரே படத்தை தயாரித்து, இயக்கியிருப்பதால் கதையின் தன்மையுணர்ந்து நடித்திருப்பது காட்சிகளில் தெரிகிறது. அவமானங்களைச் சகித்துக் கொண்டு காதலியின் மனதில் மனதைக் கவர்வதாகட்டும், சந்தர்ப்பம் அமைந்தபின் அவளோடு கலப்பதாகட்டும், தங்களை கொன்றழிக்கத் துடிப்பவர்களை ஆவேசத்துடன் எதிர்ப்பதாகட்டும் காட்சிகளுக்கேற்ற உணர்வை, உணர்ச்சியை சரிவிகிதத்தில் தன் நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார்.
மாநிறம், வெட்கச் சிரிப்பு என கிராமத்துப் பெண்ணுக்கான அத்தனை அம்சங்களோடும் இருக்கிற அம்சரேகாவுக்கு கதாநாயகி வாய்ப்பு தந்திருப்பது நல்ல பொருத்தம். ஆரம்பக் காட்சியில் தன்னை விடாமல் சுற்றி வரும் நாயகனை புறக்கணிக்கும்போது அதற்கான வெறுப்பை சரியாக காட்டுபவர், காதலனின் அணைப்பில் ஹார்மோன் சூடேறி தன்னை இழக்கும்போது மெல்லிய கவர்ச்சியால் கிறக்கம் தருகிறார்.
சீரியஸான இந்த கதையில், ‘ஜெய்பீம்’ மொசக்குட்டி ‘அந்த’ விஷயத்துக்காக வீடு வீடாக ஏறியிறங்கி கிளுகிளுப்பூட்ட முயற்சித்திருக்கிறார்.
நாயகனின் சித்தப்பாவாக சாதி வெறியராக வருகிற மணிமாறன், இரண்டாம் நாயகியாக வருகிற ரெஜினா என இன்னபிற நடிகர் நடிகைகளின் பங்களிப்பில் குறையில்லை.
இசைக் கல்லூரியில் நான்காண்டுகள் பயிற்சி பெற்றுள்ள நாயகன் லோக பத்மநாபன் இடைவேளைக்கு முன் மூன்று, பின்னர் இரண்டு என இடையிடையே மெல்லிசை ததும்பும் பாடல்களை நுழைத்து ரசிக்க வைத்திருக்கிறார். வேல்முருகன் குரலில் ‘பாக்குறா’ பாடல் கூடுதலாய் இனிக்கிறது. பின்னணி இசை பரவாயில்லை ரகம்.
ஒளிப்பதிவாளர் கே.ராஜசேகரின் ஈடுபாட்டை பாராட்டலாம்.
காதலர்களைப் பிரிக்கும் சாதிப் பாகுபாடு, ஆணவக் கொலை என பார்த்துப் பழகிய கதைக்களத்தை புதியவர்களின் நடிப்பில் பார்க்க விரும்பினால் ‘செம்பியன் மாதேவி’க்கு டிக்கெட் போடலாம். கணிசமான திருப்தி கண்டிப்பாய் கிடைக்கும்!
செம்பியன் மாதேவி, ரத்தத்தால் சிவந்த பூமி!
-சு.கணேஷ்குமார்