‘ஷூட் தி குருவி’ குறும்பட விமர்சனம்

டார்க் காமெடி, பிளாக் காமெடி என்றெல்லாம் சொல்லப்படுகிற சப்ஜெக்டில், சுவாரஸ்யமான கதைக்களத்தில் ஒருமணி நேரமே ஓடுகிற படமாக ‘ஷூட் தி குருவி.’

தன்னை கேங்ஸ்டர் என நினைப்பவர்களிடம் ‘நான் கேங்ஸ்டர் இல்லை; கில்லர்’ என சொல்கிற, சொல்வதற்கேற்ப தனக்கு எதிரியாக ஒருவரை நினைத்துவிட்டால் அவரை குருவியை சுடுவதுபோல் சுட்டு வீழ்த்துகிற கெத்தான ஆசாமி குருவி ராஜன்.

அவரைப் பற்றி அரைகுறையாக தெரிந்துவைத்துள்ள இரண்டு பேர், அவரை பற்றி கூடுதலாக தெரிந்துகொள்ள, அவரைப் பற்றி முழுமையாக தெரிந்து வைத்துள்ள பேராசிரியர் ஒருவரை அணுகுகிறார்கள். அவரிடமிருந்து குருவி ராஜன் பற்றியும் அவனை போட்டுத் தள்ளி அவனது தாதா சாம்ராஜ்யத்தை சரித்த இரண்டு சாதாரண மனிதர்கள் பற்றியும் அவர்களால் அவனை எப்படி அழிக்க முடிந்தது என்பது பற்றியும் தெரிய வருகிறது.

அந்த விவரங்கள் திரைக்கதையில் சம்பவங்களாக விரிய அத்தனையும் பரபரப்பு விறுவிறுப்பு; காமெடி மசாலா கலந்த கலகலப்பு. இயக்கம்: மதிவாணன்.

திரைப்படங்களில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிற அர்ஜை, இந்த படத்தில் கதையின் நாயகன். ஏற்றுள்ள கதாபாத்திரத்துக்கேற்ற தோற்றம் நடிப்பு இரண்டும் கச்சிதம்!

ஷாராவின் நடிப்பும், வசன உச்சரிப்பில் இருக்கிற வழக்கமான எள்ளலும் துள்ளலும் வழக்கம் போல் அசத்தல். அந்த அம்மா சென்டிமென்ட் காட்சியிலும் கவர்கிறார். ‘வீரராகவன் ஹெல்மெட் ஷாப்’, ‘அதஞ்சலி’ என்ற பெயர்களில் வருமானம் பார்க்கும் சீஸனல் பிசினஸ் மேனாக வருகிற அவர், சீஸனல் பிசினஸ் என்றால் என்ன என விவரிக்கிற காட்சி சிரிப்புக்கும் சிந்தனைக்கும் விருந்து!

குறிப்பிடும்படியான வேடத்தில் வருகிற ஆஷிக் ஹுசைன் இயல்பான நடிப்பாலும் முகபாவங்கள் மூலமே சிரிப்பூட்டுவதும் ரசிக்க வைக்கிறது.

குரல் நடுங்கும் வயதான தோற்றத்தில் பேராசிரியராக வருகிற ராஜ்குமார்.ஜி.யின் பங்களிப்பு பக்கா!

‘பிக் பாஸ்’ சுரேஷ் சக்ரவர்த்தி, மணி வைத்தி, சாய் பிரசன்னா, ஜிப்ஸி நவீன் என இன்னபிற பாத்திரத்தை சுமந்திருக்கிறவர்களின் நடிப்பில் தெரிகிறது கதைக்கேற்ற துடிப்பு!

‘மிடில் கிளாஸ் மக்கள்ல பலபேரு 27 வயசுலேயே செத்துப் போய்டறாங்க; சடலத்தை அடக்கம் பண்ணத்தான் 72 வயசாகுது’ என்பதுபோல் ஆங்காங்கே யதார்த்தத்தை அதன் வீரியம் குறையாமல் பந்தி வைக்கின்றன வசனங்கள்!

ஒன்றிரண்டு சிறிய அறைகளுக்குள்ளேயே படத்தின் பெரும்பாலான சம்பவங்கள் நடக்க, அதனை சலிப்பூட்டாத விதத்தில் படமாக்கிய ஒளிப்பதிவாளர் பிரண்டன் சுஷாந்துக்கு தனி பாராட்டு!

மூன்ராக்ஸின் பின்னணி இசை சில காட்சிகளில் நேர்த்தியாகவும், சில காட்சிகளில் கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கலாம் போலவும் இருக்கிறது!

முன்பின்னாக பயணிக்கக்கூடிய கதையோட்டத்தை கச்சிதமாக கத்தரித்து தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கமலக்கண்ணன்.

‘சூதுகவ்வும்’ பாணியிலான பிளாக் காமெடி படங்கள் உங்களுக்கு பிடிக்கும் என்றால் ‘ஷூட் தி குருவி’ உங்களுக்கான படைப்பு. ShortFlix தளத்தில் பார்க்கலாம்; ரசிக்கலாம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here