‘சில நொடிகளில்’ சினிமா விமர்சனம்

கிரைம் திரில்லர், சஸ்பென்ஸ் திரில்லர், மர்டர் மிஸ்ட்ரி என அத்தனை வகைப் படங்களின் அம்சங்களையும் கலந்துகட்டி, 94 நிமிடங்கள் பரபரப்பாக கடந்தோடும் படம்.

லண்டனில் மனைவியுடன் வசிக்கிற, சொந்தமாக மருத்துவனை வைத்துள்ள, பிளாஸ்டிக் சர்ஜரியில் எக்ஸ்பர்ட்டான அந்த இளைஞன் தன் கள்ளக் காதலியின் திடீர் மரணத்துக்கு காரணமாகிவிடுகிறான். யாருக்கும் தெரியாதபடி அவளது சடலத்தை அப்புறப்படுத்தி விடுகிறான். ஒரு கட்டத்தில் அவன் செய்த அந்த குற்றச் செயலை ஒரு பெண் கண்டுபிடித்து பணம் கேட்டு அவனை மிரட்டுகிறாள். இந்த விவகாரம் அவனுடைய மனைவிக்கும் தெரியவருகிறது.

அவன் கொலையாளி என்ற விவரம் அவனை மிரட்டும் பெண்ணுக்குத் தெரிந்தது எப்படி? கணவன் கொலையாளி என்பது தெரிந்த அவனது மனைவி என்ன செய்தாள்? தன்னைச் சூழ்ந்த சிக்கல்களிலிருந்து அவன் மீண்டு வர முடிந்ததா, இல்லையா? இந்த கேள்விகளுக்கு பதில் தருகிறது திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை. இயக்கம் வினய் பரத்வாஜ்

முன்பைவிட சுற்றளவில் சற்றே பெருகியிருக்கும் ரிச்சர்ட் ரிஷிக்கு கிட்டத்தட்ட படம் முழுக்க மன இறுக்கம், பயம், பதட்டம், குற்றவுணர்ச்சி, இயலாமை என உற்சாகத்துக்கு வழிவிடாத உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டிய கதாபாத்திரம். அதை மிகமிக சரியாய் செய்திருப்பவர், கிடைத்த கேப்பில் காதலி யாஷிகாவோடு உடலால் கலந்து மகிழும் காட்சிகளில் ஆண் சமூகம் பொறாமைப்படும்படி வாழ்ந்திருக்கிறார்! தலைமுடியை அடர்த்தியாய் வளர்த்து போட்டிருக்கும் அந்த குடுமி அழகு.

யாஷிகா ஆனந்த், ரிச்சர்ட் ரிஷியுடனான நெருக்கமான காட்சிகளில் உடலின் வளைவு நெளிவுகளை பரிமாறுவதில் காட்டியிருக்கும் தாராளம் இளைஞர்களின் ஹார்மோனை சூடேற்றாமல் விடாது!

ரிச்சர்ட்டின் மனைவியாக (இந்த படத்தின் தயாரிப்பாளர்) ‘புன்னகைப் பூ’ கீதா. கணவர் தன்னுடன் மகிழ்ச்சியாக இருப்பதில்லை என்ற குறையைச் சுமந்துகொண்டு, குழந்தையில்லாத ஏக்கத்தில் தவிப்பவராக தனது பாத்திரத்துக்கு முடிந்தவரை உயிரூட்டியிருக்கிறார். கிளைமாக்ஸில் வெளிப்படும் அவரது வேறொரு பரிமாணமும் அசத்துகிறது! மேக்கப்பில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் தோற்றத்தில் தென்படும் முதிர்ச்சியை தவிர்த்திருக்கலாம் என்று தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.

ஹீரோவை பணம் கேட்டு மிரட்டும் அந்த இளம்பெண்ணின் வில்லத்தனம் கதையோட்டத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது!

லண்டனிலுள்ள செம்ஸ்போர்டு நகரத்தின் ரசிக்க வைக்கும் அழகை, வியக்க வைக்கும் பிரமாண்டத்தை தன் கேமரா கண்களால் வளைத்துச் சுருட்டி பரிமாறியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அபிமன்யு சதானந்தன்!

ரீமேக்கில் பாரதியாரின் ஆசை முகம் ‘மறந்துபோச்சே’ பாடல் கிறங்கடிக்கிறது!

ஹாலிவுட் பட பாணியில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்திற்கான பின்னணி இசையை, கதையோட்டத்திற்கு பொருத்தமாக தந்துள்ளார் பாலிவுட் இசையமைப்பாளர் ரோஹித் குல்கர்னி!

கள்ளக் காதல், துரோகம் என கதை குறுகிய வட்டத்துக்குள் சுற்றிச் சுழன்றாலும் நிறைவுக் காட்சியில், அதுவரை நடந்த சம்பவங்களின் பின்னணியில் புதைந்திருந்து விடுபடும் மர்மங்கள் எதிர்பாராதது!

சில நொடிகளில்… திரைக்கதைக்காக இன்னும் சில மணி நேரம் செலவிட்டிருக்கலாம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here