‘சிங்கப்பூர் சலூன்’ சினிமா விமர்சனம்

மனதுக்குப் பிடித்த வேலையில் காலூன்றி, வேரூன்றி, ஊர் உலகம் உற்றுப் பார்க்கிற உயரத்துக்கு போக விரும்பும் ஒருவன் சந்திக்கிற சங்கடங்கள், சவால்களைக் கதைக்களமாக கொண்ட படம்.

‘முன்னேற்றப் பாதையில் எத்தனை முட்டுக்கட்டைகள் வந்து விழுந்தாலும், முயற்சியில் உறுதியாய் இருந்தால் சிங்கநடை போடும் காலம் வந்தே தீரும்’ என்ற சிந்தனைக்கு சிறகு பொருத்தியிருக்கும் ‘சிங்கப்பூர் சலூன்.’

அந்த சிறுவனுக்கு, சிறு கத்திரியையும் சிங்கிள் சீப்பையும் வைத்துக் கொண்டு தன்னைச் சுற்றியுள்ளவர்களை அழகாக்கி விடுகிற அந்த முடி திருத்துநர் மீதும் அவர் தொழில் மீதும் பிரியம் தொற்றிக் கொள்கிறது. அந்த பிரியம், அவன் பெரியவனானதும் பெரியளவில் பார்பர் ஷாப் துவங்க வேண்டும் என்ற லட்சியத்தையும் விதைத்து விடுகிறது.

அதற்கேற்ப வாலிபப் பருவத்துக்கு வந்தபின் அக்கறையாய் தொழில் கற்கிறான். சிரமங்கள் சில கடந்து, கோடிக்கணக்கில் பணம் புரட்டி, சிட்டியே சிலிர்க்கிற பிரமாண்டத்தில் சிகையலங்கார நிலையம் உருவாக்குகிறான்.

முடி வெட்டுவதற்குத் துவக்கமாக, ரிப்பன் வெட்ட ஏற்பாடாகிறது. அந்த நல்லது நடந்துவிடக் கூடாது என்பதை குறிக்கோளாக கொண்டு, அந்த துறையில் கரைகண்ட கார்ப்பரேட் முதலாளி குறுக்கே வருகிறான். இயற்கையும் தன் பங்கிற்கு இடைஞ்சல் தர… சோதனைகளால் சூழப்பட்ட அவன் நினைத்த சாதனையை செய்ய முடிந்ததா, இல்லையா என்பதே நிறைவுக் காட்சி. இயக்கம் கோகுல்

கலகலப்புக்குப் பேர்போன ஆர்.ஜே.பாலாஜி, அதற்கு கதையில் வாய்ப்பிருந்தும் வீட்டாரின் ஒத்துழைப்பு கிடைக்தாதது, காதலியால் கைவிடப்படுவது, காயடிக்க நினைக்கும் கார்ப்பரேட் வில்லனின் எதிர்ப்பை சமாளிப்பது என சீரியஸான கதாபாத்திரத்தில் சின்சியராய் மூழ்கியிருக்கிறார். நடிப்புப் பங்களிப்பில் குறையில்லை!

பல கோடி செலவில் தொழில் துவங்க நினைக்கும் மருமகனுக்கு, தன்னிடம் கோடிக்கணக்கில் பணமிருந்தும் 300 ரூபாய்க்கு செக் கொடுக்கிற சிக்கனவாதியாய் வந்து ஆடியன்ஸுக்கு அடிவயிறு வலிக்கும்படி சிரிப்பு மூட்டுகிறார் சத்யராஜ். ஓசி பீருக்கு ஆசைப்பட்டு அக்கவுண்ட்க்கு ஆப்பு வைத்துக் கொள்வது, பத்துக்குப் பத்து இடத்தில் மகளின் கல்யாணத்தை பந்தாவாக நடத்துவது, தன் வீட்டை காலி செய்து மருமகன் வீட்டில் ஒரு அறையைக் கைப்பற்றுவது என அலப்பரைக்குப் பஞ்சமில்லை!

கவனம் ஈர்க்கும்படி நடிக்க கதை இடம்தராவிட்டாலும், கதாநாயகனின் மனைவியாய் கனிவான பார்வையாலும் கள்ளமில்லாச் சிரிப்பாலும் மனதில் நிறைகிறார் மீனாட்சி செளத்ரி!

போகிறபோக்கில் ஆங்காங்கே கிச்சுக்கிச்சு மூட்ட உதவியிருக்கிறார் ரோபோ சங்கர்!

ஐந்து நிமிடம் வந்துபோகிறார் அரவிந்த்சாமி. கெஸ்ட் ரோலில் பெஸ்ட் ஃபெர்பாமென்ஸ்!

கதாநாயகனின் திறமைக்கு வேட்டுவைக்கிற வேலைதான் என்றாலும் கத்தி, ரத்தம், வன்முறை என்றில்லாமல் ஜாலியாக வலம் வருகிறார் ஜான் விஜய்!

எளிமையான சலூன் கடைக்காரராக வந்து ஹீரோவுக்கு வலிமையான முன்னுதாரணமாகிற லால், ஹீரோவின் நண்பனாக கிஷன் தாஸ், அப்பாவாக தலைவாசல்’ விஜய் என மற்ற கதாபாத்திரங்களில் வருகிறவர்களின் நடிப்பு கச்சிதம்!

ஒப்புக்குச் சப்பாணி போல் பயன்படுத்தப்பட்டிருக்கிறார் ஒய்.ஜி. மகேந்திரன்!

இயக்குநர் லோகேஷ் கனகராஜும் ‘நட்புக்காக’ அட்டனன்ஸ் போட்டிருக்கிறார்.

‘முதல் அரைமணி நேரம் ஏனோதானோவென பயணிக்கும் காட்சிகளை அந்த முடிவெட்டும் கத்திரியைக் கொண்டு நறுக்கி வீசியிருக்கலாம்’ என்ற எண்ணம் தோன்றினாலும், அடுத்த முக்கால் மணி நேர காட்சிகளில் கலகலப்புக்கு கேரண்டி வாரண்டி எல்லாமும் இருப்பது ஆறுதல்!

படத்தின் பின்பாதி கதாநாயகன் அனுபவிக்கும் துன்பங்கள், வெள்ளத்தில் சிதையும் சதுப்பு நிலக் குடியிருப்பு, மரங்களை அழிப்பதால் பரிதாபத்துக்குள்ளாகும் பறவைகள், எளிய மனிதன் தன் அன்பால் குடிசைவாசிகளின் மனதில் கோபுரமாய் உயர்வது என பெரிதாய் எந்த அதிர்வையும் தராமல் கடந்தோடுகின்றன!

அடுத்து இதுதான் நடக்கும் என யூகிக்கும் காட்சிகள் படத்தின் பலவீனம்!

விவேக் மெர்வின் இசையில் ‘வந்தா மல’ பாடலில் கொஞ்சமாய் உற்சாகம் தெறிக்கிறது. பின்னணி இசை பரவாயில்லை ரகம்!

ஒளிப்பதிவு, எடிட்டிங், சிஜி குழுவின் உழைப்பு காட்சிகளைப் பலப்படுத்தியிருக்கின்றன!

முயன்றால் முடியும்; அதற்கு ‘முடி’யும் உதவும் என்ற கருத்தாக்கத்தில் கவரும் ‘சிங்கப்பூர் சலூன்’, கதையம்சத்தில் வீக்கான பலூன்!

By சு. கணேஷ்குமார், startcutactionn@gmail.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here