‘சிங்கப்பெண்ணே’ சினிமா விமர்சனம்

தடைகளைத் தாண்டாமல், தகர்க்காமல் சாதனைகள் சாத்தியமில்லை‘ என்பதை வலியுறுத்தும் வலிமையான படைப்பு. ‘சிகரம் தொட்ட பலரும் சிக்கல்களை சந்தித்தவர்களே‘ என்பதை எடுத்துக் காட்டி, பெண்களின் தன்னம்பிக்கைக்கு சிறகு பொருத்துகிற முயற்சியாய் ‘சிங்கப்பெண்ணே.’

அந்த கிராமத்தில் வறுமைக் குடும்பத்து வாரிசான சிறுமி தேன்மொழி பூப்பெய்துகிறாள். அதற்கான விசேஷம் வைத்த நாளன்றே, அவளுடைய மொடாக்குடி முறைமாமன் அந்த பெண்ணை நான்தான் திருமணம் செய்துகொள்வேன் என்று சொல்லி அடாவடி அராஜகத்தில் இறங்குகிறான்.

அவனிடமிருந்து தேன்மொழியை மீட்டெடுத்து, அவளிடமிருக்கும் நீச்சல் திறமையைக் கண்டறிந்து ஊக்குவித்து, அவளை சாதனையாளராக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் நீச்சல் பயிற்சியாளர் ஷாலினி.

ஷாலினி அதே கிராமத்தைச் சேர்ந்த பெண். சிறுவயதில் முறையான நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அவரை அவரது அப்பாவே தடுத்ததும், அதையெல்லாம் தாண்டி அவர் நீச்சல் வீராங்கனையானதும், அரசாங்கத்தின் நீச்சல் பயிற்சியாளராக தகுதி உயர்ந்ததும் அவரது முன்கதை.

தேன்மொழியை சாதனையாளராக மாற்றிக்காட்ட ஷாலினி எடுத்துக் கொள்ளும் முயற்சிகளையும், அதில் அவர் சந்திக்கிற சங்கடங்களையும் சவால்களையும் இணைத்துப் பிணைத்திருக்கிறது இயக்குநர் ஜெ எஸ் பி சதீஷ் அமைத்திருக்கும் தரமான திரைக்கதை!

ஷாலினியாக ஷில்பா மஞ்சுநாத். நீச்சல் பயிற்சியாளர் பாத்திரத்துக்கு மிகமிக பொருத்தமாக இருக்கிறது அந்த இஸ்பேட் ராணியின் உடல்வாகு. நடையிலிருக்கும் கம்பீரம், விழிகளை உயர்த்தியபடி பேசுவதில் வெளிப்படும் ஆளுமை, இயலாமையை பிரதிபலிக்கும் தேர்ந்த முகபாவம் என காட்சிக்கு காட்சி கவனம் ஈர்க்கிறது அவரது துடிப்பான நடிப்பு!

வறுமைச் சூழலில் பிறந்து வாழ்ந்து, திறமையினால் அதற்கேற்ற உயரத்தை எட்டிப் பிடிக்கிற முன்னுதாரண கதாபாத்திரத்தில் தேன்மொழியாக ஆர்த்தி. தோற்றப் பொருத்தமும் முகத்தில் சூழ்ந்திருக்கும் அப்பாவித்தனமும் அவர் ஏற்றிருக்கும் பாத்திரத்திற்கு உயிரோட்டம் தந்திருக்கிறது. கிராமத்துக் கிணற்றில் நீச்சலடிப்பது, தன்னைச் சுற்றியிருக்கும் நண்டு சிண்டுகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுப்பது, முதல்முறையாக முறையான நீச்சலுடை அணிகிறபோது கூச்சப்பட்டு நெளிவது, நீச்சல் பயிற்சிக்குப் போகாமல் சாக்குப்போக்கு சொல்லி தப்பிப்பது, சதிகாரர்களின் கடுமையான கொடுமையான பயிற்சிகளால் வேதனைக்கு ஆளாவது, சாதிக்க வேண்டும் என்ற லட்சியவெறி சுமந்து டிரையத்லான்’ போட்டிகளில் பங்கேற்று சோர்ந்து சரிவது, தன்னம்பிக்கையோடு எழுந்து ஓடுவது என கதாபாத்திரத்தில் தன்னை முழுமையாக பொருத்திக் கொண்டு, உடலை வருத்திக் கொண்டு நடித்திருக்கிறார். அவர் நிஜத்திலும் நீச்சல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளில் சாதித்த சிங்கப்பெண் என்பது குறிப்பிடத்தக்க செய்தி.

சமுத்திரகனி ஒரேயொரு காட்சியில் வந்தாலும் விளையாட்டுப் போட்டிகளில் தடைகளைச் தாண்டி சாதித்தவர்கள் பற்றி எடுத்துச் சொல்லி, மாற்றுத்திறனாளி சாதனைப் பெண்மணி மாதவி லதாவை அறிமுகப்படுத்திப் பேசியிருப்பது பலருக்குள்ளும் தன்னம்பிக்கை நெருப்பை பற்றவைப்பது உறுதி!

ஐ ஏ ஏஸ் அதிகாரியாக வருகிற பிரேம், தன் மகள் நீச்சல் சாதனையில் முதலிடம் பெற வேண்டும் என்பதற்கான செய்யும் அரசியல் அராஜகத்தில் தேவையான வில்லத்தனம் காட்டியிருக்கிறார்!

சாவு வீட்டில் குடித்துவிட்டு கலவரம் செய்கிற சென்ராயன், ஊர்ப் பேச்சைக் கேட்டுகொண்டு மகளது நீச்சலுடையை எரிக்கிற கரியாக்கிற ஏ.வெங்கடேஷ் என இன்னபிற கதாபாத்திரங்களில் வருகிறவர்களின் நடிப்பு நேர்த்தி!

‘உண்மை ரப்பர் பந்து மாதிரி; அது ரொம்ப நாளைக்கு தண்ணிக்குள்ள இருக்காது’… இப்படியான நறுக் சுறுக் வசனங்களும் படத்தில் உண்டு.

டிரம்ஸ் சிவமணியின் வாரிசான குமரேசன் சிவமணியின் இசையில் பாடல்கள் கதையோட்டத்துக்கு சுறுசுறுப்பு தர பின்னணி இசை காட்சிகளின் தேவையை பூர்த்தி செய்திருக்கிறது.

‘திறமையாளர்களின் வளர்ச்சியைத் தடுக்கிற சுயநலவாதிகளை, செல்வாக்கு மிக்கவர்களை எதிர்த்துப் போராடுகிற எளியவர்கள்’ என்ற வழக்கமான கதைக்களம்தான் என்றாலும் காட்சிகள் உண்மைக்கு நெருக்கமாக இருப்பதும்,

படம் நெடுக நீள்கிற நீச்சல் போட்டிகளில், நிறைவுக் காட்சியின் டிரையத்லான் போட்டிகளில் பங்கேற்றிருப்பவர்கள் அந்தந்த துறைகளில் நிஜத்தில் சாதித்தவர்கள், சாதித்துக் கொண்டிருப்பவர்கள் என்பதும்,

இந்த நல்ல படைப்பு மார்ச் 8 மகளிர் தினத்தில் வெளியாவதும் தனித்துவம்.

சிங்கப்பெண்ணே – சீறிப் பாய்கிறாள் முன்னே…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here