சார் சினிமா விமர்சனம்

கல்வி சார்ந்த போராட்டங்களில் ஈடுபட்டோர் சந்தித்த வலிகளின் ஒரு துளியாக, வலுவான பதிவாக ‘சார்.’

1950 காலகட்டம்; தமிழகத்திலிருக்கும் ஒரு கிராமம். அதில், கீழ்சாதி மக்கள் படித்துவிட்டால் தங்களை மதிக்க மாட்டார்கள், தங்களிடம் அடிமையாக வேலை செய்ய மாட்டார்கள் என்பதை மனதில் வைத்து, அவர்களின் மூளைக்கு கல்வியின் ருசி தெரிந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது மேல்சாதிக் குடும்பம் ஒன்று.

அந்த ஊரில் பள்ளிக்கூடம் கட்டி, கீழ்சாதி மக்களின் பிள்ளைகள் படிப்பதற்கு வாய்ப்பை உருவாக்கித் தருகிறார் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர். மேல்சாதிக் குடும்பம் பார்த்துக் கொண்டு சும்மாயிருக்குமா? சாமி போகும் பாதை என்று சொல்லி அந்த பள்ளிக்கூடத்தை இடிக்க திட்டமிடுகிறது. ஆசிரியர் மக்களுக்கு விழிப்புணர்வூட்டி, அந்த திட்டத்தை முறியடிக்கிறார்.

ஒரு கட்டத்தில் அவர் மனநோயாளியாகிவிட, அவருடைய மகன் அதே பள்ளிக்கு ஆசியராகி, பள்ளியை நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி தலைமையாசிரியர் பொறுப்பிலும் அமர்கிறார். அப்போதும் அந்த குடும்பம் பள்ளிக்கூடத்தை இடிக்க திட்டமிடுகிறது. அந்த திட்டத்தை அவரும் முறியடிக்கிறார். ஒரு கட்டத்தில் அவரும் மனநோயாளியாகிறார்.

அவரைத் தொடர்ந்து அவரது மகன் ஞானம் அதே பள்ளியில் ஆசிரியர் பணியில் சேர்கிறார். அவரையும் அந்த குடும்பத்தின் வாரிசுகள் எதிர்க்கிறார்கள்; பள்ளிக்கூடத்தை இடிக்க முயற்சிக்கிறார்கள். அந்த முயற்சியை ஞானத்தால் தடுக்க முடிந்தா? அல்லது அவரும் மனநோயாளியானாரா? என்பதுதான் கதையின் தொடர்ச்சி… இயக்கம் போஸ் வெங்கட்

ஞானமாக விமல். சக ஆசிரியை மீதான காதலை வெளிப்படுத்தும் விதமாகட்டும், அதிகாலை நான்கு மணிக்கு குளத்தில் குளிக்கும் காதலியைச் சந்திக்க நினைத்து குளிரில் எழுந்துபோய் ஜுரம் வந்து படுப்பதாகட்டும் இனிமையான தருணங்களுக்கு அதற்கேற்ற ரசிக்கும்படியான நடிப்பைத் தந்திருப்பவர், எதிராளிகளை பந்தாடும்போதும், நம்பிக்கைத் துரோகிகள் யாரென தெரிந்தபின் அவர்களை வேட்டையாடும்போதும் தேவையான வெறித்தனத்தை துளியும் குறையாமல் வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஆசிரியர் பணியை உயிருக்கு உயிராக நேசிப்பதும், அதேபோல் நேசிக்கச் சொல்லி மகனை வலியுறுத்துவதும், ஓய்வு பெற்றதை மறந்து பள்ளிக்கூடம் சென்று பணியைத் தொடர்வதும், சூழ்ச்சியில் சிக்கி உயிர்பிழைத்து தன்னைத்தானே சங்கிலியால் கட்டிக்கொண்டு முடங்குவதுமாக நெகிழவைக்கும் நடிப்பால் மனதை நிறைக்கிறார் விமலின் அப்பாவாக வருகிற சித்தப்பு சரவணன்.

வாயால் சில வார்த்தைகளையும் கண்களால் பல வார்த்தைகளும் பேசுகிற அழகான ஆசிரியையாக சாயாதேவி. கதாநாயகனை காதலிக்கும் வழக்கமான காதலிதான் என்றாலும் நடிப்பிலிருக்கும் உயிரோட்டம் அவரது பாத்திரத்துக்கு எக்கச்சக்க எனர்ஜி தந்திருக்கிறது.

விமலுடன் நட்பாகப் பழகும்போது தென்றலைப் போலிருக்கும் (இந்த படத்தின் தயாரிப்பாளர்) சிராஜ், கிளைமாக்ஸில் சாமியாடியாய் வந்து நின்று சாதிவெறிச் சூறாவளியாய் சீற்றம் காட்டுவது கெத்து!

ஆடுகளம் ஜெயபாலனையும் ரமாவையும் இன்னும் எத்தனை படங்களில்தான் ஒரே மாதிரியான கேரக்டர்களில் பார்க்க வேண்டியிருக்குமோ தெரியவில்லை.

கஜராஜ் ஜஸ்ட் ஒரு நிமிடம் எட்டிப் பார்க்கிறார். சரவண சக்தி, விஜய் முருகன், பிரணா என மற்றவர்கள் அவரவர் வேலையைச் சரியாகச் செய்திருக்க, ஆத்தங்குடி இளையராஜா ஒரு பாடலில் அம்சமான அம்மணிகளுடன் அசத்தலாக ஆட்டம் போட்டிருக்கிறார்.

சித்துகுமார் இசையில் பாடல்களில் பெரிதாக வெரைட்டி இல்லாவிட்டாலும் ‘பனங்கருக்கா’ பாடலின் இதம் இதயத்தை வருடுகிறது. காட்சிகளின் வலிகளை, உற்சாகத்தை, வேகத்தை உள்வாங்கிப் பிரதிபலித்திருக்கிறது பின்னணி இசை.

இந்த நாட்டில் ஏழை எளியவர்கள், சாதியில் தாழ்ந்தவர்கள் படிப்பதற்கு எத்தனை தடைகள் இருந்திருக்கிறது என்பதை விதவிதமாக பார்த்துள்ள நமக்கு, அதையே 60, 70 வருடங்கள் பின்னோக்கிப் போய் பாடம் போதிக்கும் ஆசிரியரை மையப்படுத்திய கதைக்களத்தில் பார்ப்பது சற்றே வித்தியாசமான அனுபவம்!

சில காட்சிகளில் லாஜிக் மீறல்கள் செயற்கைத் தனங்கள் தென்பட்டாலும், கமர்ஷியல் அம்சங்களைக் இணைத்துப் பிணைத்து கதைக்களத்தின் வீரியத்தை குறைக்காமலிருந்த விதத்தில் சாருக்கு போடலாம் நெஞ்சை நிமிர்த்தி ஒரு சல்யூட்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here