சிறகன் சினிமா விமர்சனம்

11 கோணங்களில் திரைக்கதை அமைக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையோடு வருகிற படைப்பு. விறுவிறுப்பான கிரைம் திரில்லர் சப்ஜெக்டில் நான் லீனியர் திரைக்கதையில் வேகமெடுக்கும் ‘சிறகன்.’

ணபலமும் அரசியல் பலமும் கொண்ட ஒருவர் தன் மகனை காணவில்லை என தேடியலைகிறார். ஒரு கட்டத்தில் அவர் கொலை செய்யப்பட, அந்த விவகாரத்தில் பிரபலமான வழக்கறிஞர் ஒருவர் போலீஸ் விசாரணைக்கு ஆளாகிறார். அந்த வழக்கறிஞரின் மகள் கோமாவில் இருக்கிறார். காவல்துறை அதிகாரியொருவர் தன் தங்கையின் உயிரிழப்புக்கு காரணம் யார் என கண்டுபிடிக்கும் முயற்சியில் இருக்கிறார். இப்படி கிளை பிரிந்து நகரும் முன் பாதிக் கதை, என்ன நடக்கிறது ஏது நடக்கிறது என்பது புரியாமல் குழப்பியடிக்க, பின்பாதி குழப்பங்களை விடுவித்து நடந்தது இதுதான் என விளக்கும்போது திரைக்கதையில் பரபரப்பு பரவுகிறது. இயக்கம்: வெங்கடேஷ்வராஜ்

மகளைத் தாக்கி கோமாவுக்கு கொண்டுபோன கேடு கெட்டஇளைஞர்களை பழிதீர்க்க, திட்டம் தீட்டி செயல்படுத்தும் வழக்கறிஞராக கஜராஜ், தன்னுடன் பணிபுரிகிற ஆசிரியரை, மாணவன் ஒருவன் தவறாக படமெடுத்து மிரட்டும்போது கொதித்துக் கொந்தளிக்கிற நாயகி பொளஷி ஹிதாயா, மாணவனின் மிரட்டலுக்குப் பயந்து மிரள்கிற ஆசிரியராக ஹர்சிதா ராம், தங்கையை இழந்த சோகத்தை சுமந்தபடி வழக்கு விசாரணையில் சுறுசுறுப்பு காட்டும் வினோத் ஜி டி, அரசியல் பலமிக்கவராக ஜீவா ரவி, அன்பான மனைவியின் உயிர் பிரிய காரணமாக இருந்த இழிபிறவிகளை சாதுர்யமாக வேட்டையாடும் ஆனந்த் நாக், படிக்கிற வயதில் காமவெறி தலைக்கேறி குற்றச் செயல்களில் ஈடுபடுகிற மாணவர்கள் என அனைவரின் நடிப்பும் கதையோட்டத்துக்கு பொருத்தமாக அமைந்து படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது.

ராம் கணேஷ் இசையில் ‘எனை மறந்தேனே’ பாடல் இதம் தந்து நெகிழ வைக்கிறது. கிரைம் திரில்லர் கதைக்களத்துக்கு ஏற்ற சுறுசுறுப்பைத் தந்திருக்கிறது பின்னணி இசை.

சேட்டை சிக்கந்தரின் ஒளிப்பதிவு நேர்த்தியாக அமைந்திருக்க, முன்னும் பின்னுமாக, அப்படியும் இப்படியுமாக தாவிக்கொண்டேயிருக்கிற திரைக்கதையை குழப்பமில்லாமல் எடிட்டிங் செய்திருக்கிறார் இயக்குநர் வெங்கடேஷ்வராஜ்.

உருவாக்கத்தில் குறைகள் சில இருந்தாலும் கதையிலிருக்கும் திருப்பங்கள் ஈர்க்கின்றன.

‘சிறகன்’ கிரைம் திரில்லர் விரும்பிகளின் சிநேகிதன்!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here