‘சைரன்’ சினிமா விமர்சனம்

சாதி வெறி போலீஸோடு சமர் செய்யும் சாமானியன்‘ என்ற ஒன்லைனில் அப்பா மகள் பாசப்பிணைப்பை சேர்த்துக்கொண்ட ‘சைரன்.’

ஆம்புலன்ஸ் டிரைவர் திலகனுக்கும் அராஜக போலீஸ் நாகலிங்கத்துக்கும் உருவாகும் மோதலில், திலகனுடைய மனைவியின் ஐம்புலன்களும் அடங்கிவிடுகிறது.

மனைவியைப் பறிகொடுத்ததோடு அந்த கொலைப்பழியும் திலகன் மீது விழ, ஆயுள் தண்டனைக் கைதியாகிறான். பல வருடங்களைக் சிறையில் கழித்துவிட்டு பரோலில் வீட்டுக்கு வருகிற திலகன் மீது மீண்டும் கொலைப்பழி சுமத்தப்படுகிறது.

அதிலிருந்து அவன் தப்பிக்க முடிந்ததா? கொலையானவர்கள் யார் யார்? கொலைகளைச் செய்தது யார்? அதற்கான காரணம் என்ன? திலகனுக்கும் போலீஸுக்குமான மோதல் எப்படி உருவானது? இப்படியான கேள்விகளுக்கு பதில் சொல்லும்படி, பரபரப்பான டிராபிக்கில் சுறுசுறுப்பாக பாய்ந்தோடும் ஆம்புலன்ஸாய் விறுவிறுப்பாய் கடந்தோடுகிறது இயக்குநர் அந்தோணி பாக்யராஜின் திரைக்கதை.

திலகனாய் ஜெயம் ரவி. சால்ட் & பெப்பர் ஹேர் ஸ்டைலில் படு அமர்க்களமான அறிமுக காட்சியே நிமிர்ந்து உட்கார வைக்கிறது. தன் ஆம்புலன்ஸில் எந்த உயிரிழப்பும் நேர்ந்துவிடக் கூடாது என்கிற துடிப்பு, அதே ஆம்புலன்ஸில் மனைவியின் உயிர் பிரிகிறபோது பரிதாபம், ஜென்ம எதிரியாய் நினைக்கிற மகளை தூரமிருந்து பார்ப்பதில் பரவசம், மகளை சீண்டுபவர்கள் மீது சீற்றம், எதிரிகளை பழி தீர்ப்பதில் சாமர்த்தியம், சண்டைக் காட்சிகளில் ஆக்ரோஷம் என சுழன்றடிப்பவர், அடப்பாவியாய் சம்பவம் செய்வது அடுத்த நிமிடமே அப்பாவியாய் மாறுவது எனவும் அசரடிக்கிறார்.

தான் விசாரித்த குற்றவாளியை அடித்துக் கொலை செய்ததாய் குற்றம் சாட்டப்பட்டு, பணியிடை நீக்கத்துக்கு ஆளாகி, மீண்டும் பணியில் இணைந்த காவல்துறை அதிகாரியாக கன்னம் ஒட்டிப்போன கீர்த்தி சுரேஷ். ‘நான் கொல செய்யல, நான் கொல செய்யல’ என தன் உயரதிகாரியிடம் சொல்லிக்கொண்டே, ‘நான் கொல செய்யல, நான் கொல செய்யல’ என தன்னிடம் சொல்லிக் கொண்டிருக்கும் ஹீரோவை அதட்டி மிரட்டுவதில் வெளிப்படும் கம்பீரம் கச்சிதம். கொலைகாரனை அடையாளம் கண்டபின்னும் அதை நிரூபிக்க முடியாமல் தவிக்கும்போது நடிப்பில் நல்ல உயிரோட்டம்!

யோகிபாபுவுக்கு காமெடி போலீஸ் வேடம். தன் கண்காணிப்பிலிருக்கும் குற்றவாளியோடு சேர்ந்து குடிப்பது, அவனுக்கு உதவி செய்து உயரதிகாரியிடம் வாங்கி கட்டிக் கொள்வது என தன்னால் முடிந்தவரை சிரிப்பூட்டுகிறார். அந்த கனத்த மனிதர் காஸ்ட்லி சுடிதார் அணிந்து செய்யும் அலப்பரை ரசிக்கத்தக்க ரகளை!

இதற்குமேல் ஒல்லியாக முடியாது என்கிற அளவுக்கு பரிதாபமாக இருக்கிற அனுபமா பரமேஸ்வரனுக்கு கொடுத்திருக்கும் பாத்திரமும் பரிதாபம். ஹீரோவுக்கு ஜோடியென்றாலும் ஒன்றிரண்டு காட்சிகளில் எட்டிப் பார்ப்பதோடு சரி. நடிப்பில் சொல்லிக்கொள்ள ஏதுமில்லை.

‘சதிகார போலீஸாக வருகிறீர்கள்; சாதிவெறியில் ஊறிப் போனவராகவும் இருக்கிறீர்கள்’ என்று சொல்லி சமுத்திரகனியிடம் காக்கி உடுப்பைக் கொடுக்க, விரைப்பாக சுற்றித் திரிந்து தனது பாத்திரத்துக்கு வீரியம் சேர்த்திருக்கிறார்!

அழகம் பெருமாளுக்கு அரசியல்வாதியாக சிறிய வேடம்; அரிவாள் மாதிரி பெரிய மீசை!

ஹீரோவின் மகளாக வருகிற யுவினா பார்த்தவி, அப்பா மீது அர்த்தமற்ற கோபம்காட்ட இறுக்கமான முகத்தோடு அட்டனன்ஸ் போட்டிருக்கிறார்!

சாந்தினி, துளசி, ‘அருவி’ மதன் என இன்னபிற கேரக்டர்களை சுமந்திருப்பவர்களின் நடிப்பில் குறையில்லை.

ஏனோதானோ காட்சிகளைக்கூட ஏறெடுத்துப் பார்க்க வைத்திருக்கிறது சாம் சி எஸ்ஸின் அதிரடியான பின்னணி இசை!

முருகன் மந்திரம் எழுதிய ‘அடியாத்தி’ பாடலுக்கு ஜீ வி பிரகாஷ் தந்திருக்கும் இசையில் அழகும் ஆர்ப்பரிப்பும் சரிவிகிதத்தில் கலந்திருக்க மிச்சமிருக்கிற பாடல்களில் இதம் கூடியிருக்கிறது!

கதையில் புதுமை தென்படவில்லை என்கிற ஏமாற்றத்துக்கு, திரைக்கதையிலிருக்கும் சின்னச் சின்ன விறுவிறுப்பு ஓரளவு ஆறுதல் தருகிறது.

சைரன், சரக்கு கம்மி சவுண்ட் அதிகம்!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here