சூரியனும் சூரியகாந்தியும் சினிமா விமர்சனம்

காலம் எத்தனைதான் மாறினாலும் சாதியை ஒழிக்க முடியாது; சாதி வெறியர்களை அழிக்க முடியாது. இந்த வேதனையான உண்மையை உரக்கச் சொல்லியிருக்கும் படம்.

சாதி வெறியில் ஊறிப்போனவர்கள் வாழ்கிற ஊர் அது. அங்கு செருப்பு தைப்பவரின் மகள் சூரியகாந்திக்கும், உயர்சாதி இளைஞன் சூரியனுக்கும் காதல்.

கதை இப்படி தொடங்கும்போதே, அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதை, கிளைமாக்ஸ் என்னவாக இருக்கும் என்பதை யூகித்துவிட முடியாதா என்ன? கிட்டத்தட்ட நாம் யூகித்தபடியேதான் எல்லாமும் நடக்கிறது… பாவப்பட்ட அந்த காதல் ஜோடியை, சாதி வெறியர்களிடமிருந்து காப்பாற்ற ஒரு அம்மாவும் அவரது இரண்டு பிள்ளைகளும் கதையில் இணையும்போது பரபரப்பு கூடுகிறது. அவர்கள் எப்படி இணைகிறார்கள் என்பது திரைக்கதையிலிருக்கிற சுவாரஸ்ய முடிச்சு… இயக்கம் ஏ.எல்.ராஜா

கதையின் நாயகி சூரியகாந்தியாக ரிதி உமையாள். ஒரு காட்சியில் ‘செருப்பு தைப்பவனுக்கு இப்படியொரு அழகான மகளா?’ என வில்லன் ஆச்சரியப்படுகிறான். பளீர் நிறத்தில், களையான முகவெட்டோடு வலம் வரும் அவரைப் பார்க்கும்போது நமக்கும் அந்த ஆச்சரியம் வரத்தான் செய்கிறது.

காதலனோடு உற்சாகமாக பொழுதைக் கழிப்பது, பாடல்களில் ஆடுவது என தமிழ் சினிமா ஹீரோயின்களுக்கான வழக்கமான வேலைகளை ஈடுபாட்டுடன் செய்திருக்கும் அந்த உமையாள், வில்லன் தன்னிடம் தவறாக நடக்க முயற்சிக்கும்போது ஆத்திரத்தின் உச்சத்துக்கு போன உணர்வை வசனங்களிலும் முகபாவங்களிலும் கம்பீரமாக கொண்டு வந்திருக்கிறார். தனது செழுமையாய் திரண்டு திமிரும் இளமையை முடிந்தபோதெல்லாம் தாராளமாய் காட்டுவது இள நெஞ்சங்களை மூச்சு வாங்க வைக்கும். இயக்குநருக்கு பிடித்தது நீல நிறமோ என்னவோ தெரியவில்லை. அம்மணி உடுத்தும் பிளவுஸ் அத்தனையும் நீலம்.

நாயகன் ஹரியின் தோற்றம் வாலிபத்தின் தொடக்கத்திலிருப்பது பள்ளி மாணவியை காதலிக்கிற கதாபாத்திரத்துக்கு பொருந்துகிறது. கீழ்சாதிப் பெண்ணை காதலிப்பவனுக்கு சாதி வெறியர்களால் என்னென்ன பிரச்னைகள் வருமோ அதையெல்லாம் குறையின்றி அனுபவிக்கும் ஹரி, காதலியோடு ஜாலியாகவும் நாட்களைக் கடத்துகிறார். சாதிக் கட்சித் தலைவரை எதிர்க்கும்போது தேவைக்கேற்ப கொதித்துக் கொந்தளித்திருக்கிறார்.

‘கருப்பு’ என்ற பெயரில் பிரதான கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிற ஏ.எல்.ராஜா தன் தம்பியுடன் சேர்ந்து கதாநாயகி உமையாள் காதலிக்கும் இளைஞனின் செல்போனை அபகரிக்கிறார். அந்த வகையில் தொடர்பு ஏற்பட்டு, தம்பியோடும் தன் அம்மாவோடும் இணைந்து கதாநாயகியை தற்கொலையிலிருந்து மீட்பது, சாதி வெறியர்களை வேட்டையாடுவது என தொடரும் காட்சிகள் அதிர்வலையை உருவாக்குகிறது. ஆரம்பக் காட்சிகளில் அண்ணனும் தம்பியுமாக சேர்ந்து போலீஸ் பூத்தையே விற்கிற, கமிஷனர் ஆபீஸையே லீசுக்கு விட்டாலும் விடுவார்கள் என்கிற எதிர்பார்ப்பை உருவாக்குகிற தில்லாலங்கடியாக ரசிக்க வைக்கிறார்கள். அவர்களின் அம்மாவாக வருகிறவர், நம்மால் எந்த உயிரும் பறிபோய் விடக்கூடாது என தவிப்பதாகட்டும், அநியாயத்தை எதிர்க்கச் சொல்லி தன் மகன்களைத் தூண்டிவிட்டு உறுதுணையாக நிற்பதாகட்டும் அதிரடியாக களமாடியிருக்கிறார்.

தங்கள் சாதிக்காரர்கள் கீழ் சாதியில் யாரையும் காதலித்தால் அவர்களை கொன்றழிக்கிற சாதி வெறியும் கொலை வெறியும் சரி விகிதத்தில் கலந்த அரசியல்வாதியாக ராஜசிம்மன். கீழ் சாதியானாலும் பெண் அழகாக இருந்தால் அவளை நண்பர்களுடன் சேர்ந்து சீரழிப்பது அவருக்கு பிடித்த விஷயம். அதை வீரியமாக செய்திருக்கிறார் அந்த முறுக்கு மீசைக் காரர்.

சாதி வெறித் தூண்டுதலுக்கு ஆளாகி தன் மகளை காவு கொடுத்து, அவளது அஸ்தியோடு சன்மானமாக பணத்தையும் பெற்றுக் கொள்ளும் பெரியவர் அழகு, கதையின் நிறைவில் வெறியோடு வெளிப்பட்டிருப்பது அனலடிக்கிற அந்த காட்சிக்கு அசுர பலம் தந்திருக்கிறது.

பிரதான பாத்திரத்தில் அப்புக் குட்டி. படம் இயக்குவதற்காக காதல், சாதி வெறி, ஆணவக் கொலை என பின்னிப் பிணைந்த சூரியனும் சூரியகாந்தியும் கதையை கையில் வைத்துக் கொண்டு, தயாரிப்பாளரை தேடிக் கண்டுபிடிப்பது, கதையைச் சொல்லி தயாரிப்பாளரைக் கவர்ந்தற்குள் காதலியை இழப்பது உட்பட பல்வேறு சிக்கல்களைச் சந்திப்பது என அவருக்கான காட்சிகளில் கனம் இருக்கிறது. அதற்கேற்றபடி தயாரிப்பாளரிடம் கதை சொல்வதில் துடிப்பு, சதிகாரர்கள் காலில் விழுந்து கெஞ்சுதல், தயாரிப்பாளர் கதையை ஓகே செய்த பின் புதிதாய் வந்து நிற்கும் பிரச்சனையை சமாளிக்க முடியாமல் மனம் நொறுங்கிக் கதறுதல் என கவனிக்க வைக்கிறார்.

ஒரேயொரு காட்சியில் வந்தாலும் போலிஸிடம் அடிவாங்கி அலப்பரை செய்கிற  சேஷுவின் பெர்ஃபாமென்ஸ் ரசிக்க வைக்கிறது.

தயாரிப்பாளராக வருகிற சந்தான பாரதி, செருப்பு தைப்பவராக வருகிற பெரியவர், கருப்பின் தம்பியாக வருகிற பளீர் நிற இளைஞர் என மற்றவர்கலின் நடிப்பில் குறையில்லை.

‘பஞ்சு மனசு’ பாடலும், ‘அடியே அடியே என்னப் பெத்த ஆத்தா’ பாடலும் இதமான ரவி பிரியனின் இதமான இசையில் கடந்து போகிறது.

கிராமத்துச் சூழல், தாழம்பூ பூக்கிற நிலப்பகுதி என கதைக்களத்தை மண்வாசனையை மாறாமல் அள்ளி வந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் திருவாரூர் ராஜா.

படத்தின் கதைக்களம் சலிபபு தருகிறதுதான். என்ன செய்வது… ஆணவக் கொலை சம்பவங்கள் நாட்டில் எங்குமே நடப்பதில்லை’ என்ற நிலை வரும்வரை சூரியனும் சூரியகாந்தியும் போன்ற படங்களுக்கு இயக்குநர்கள் முற்றுப் புள்ளி வைக்கப் போவதில்லை.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

முறுக்கு மீசையுடன் கெத்து காட்டியிருக்கும் ராஜசிம்மன்,

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here