‘சொப்பன சுந்தரி’ சினிமா விமர்சனம்

சின்னச் சின்ன காமெடி எபிசோடுகளுடன் சீரியஸான கதைக்களத்தில் ‘சொப்பன சுந்தரி.’

நகைக் கடையொன்றின்அதிர்ஷ்டப் போட்டியில் கலந்துகொண்டு 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள காரை பரிசாகப் பெறுகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

அந்த காரை வரதட்சணையாக கொடுத்து, தன் அக்காவின் கல்யாணத்தை முடிக்கலாம் என்று நினைக்கிறார். காதலித்து கல்யாணம் செய்து கொண்டு வீட்டை விட்டு விலகியிருக்கும் ஐஸ்வர்யாவின் அண்ணன் திடீரென வந்து அந்த காருக்கு உரிமை கொண்டாட சண்டை சச்சரவுகள் பெரிதாக பஞ்சாயத்து போலீஸ் ஸ்டேஷன் வரை போகிறது.

காமப்பசி அதிகமுள்ள அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர், இந்த விவகாரத்தில் நான் உனக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்றால் என் ஆசைக்கு உடன்’படு’ என்கிறார்.

ஒருபக்கம் அண்ணன், இன்னொரு பக்கம் அயோக்கிய இன்ஸ்பெக்டர். இரு தரப்பிலும் வசமாக மாட்டிக் கொள்ளும் ஐஸ்வர்யா அந்த சூழ்நிலையை எப்படி சமாளிக்கிறார் என்பது திரைக்கதையோட்டம்… கார் யாருக்கு சொந்தமானது என்பது கிளைமாக்ஸ். இயக்கம் எஸ்.ஜி. சார்லஸ்

மிகமிக எளிய குடும்பம், நோய்வாய்ப்பட்டு படுக்கையிலேயே நாட்களை கழிக்கிற அப்பா, எல்லாவற்றுக்கும் வாய் கிழிய பேசுகிற அம்மா, வாய் பேவே முடியாத அக்கா, பொறுப்பற்ற அண்ணன், தன்னையும் தன் குடும்பத்தையும் எதிரியாக கருதும் அண்ணி என்ற வட்டத்துக்குள் வசிக்கிற பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ். ஏற்றுள்ள கதாபாத்திரத்துக்கு அவரது தோற்றம் மிகச்சரியாக பொருந்திப்போக, இயல்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்.

அம்மாவாக தீபா சங்கர், அண்ணனாக கருணாகரன், அக்காவாக லெஷ்மிபிரியா, இன்ஸ்பெக்டராக சுனில்… இன்னும் சாரா, மைம் கோபி என மற்ற பாத்திரங்களில் வருகிறவர்களின் நடிப்புப் பங்களிப்பு கச்சிதம்.

ஐஸ்வர்யாவை ‘அந்த’ விஷயத்துக்காக இன்ஸ்பெக்டர் அணுகும்போது அதற்கு பச்சைக்கொடி காட்டுவதில் இருக்கும் சாதுர்யமும் சாமர்த்தியமும் சற்றே ரசிக்க வைக்கிறது.

கதாநாயகி தன் அம்மா, அக்கா துணையுடன் காரை மீட்க காய் நகர்த்தும் காட்சிகளில் ஆங்காங்கே சுவாரஸ்யமிருப்பது பலம். அப்படியான சுவாரஸ்யம் மட்டுமே ரசிகர்களுக்கு போதும் என இயக்குநர் நினைத்திருப்பது பலவீனம்.

சொப்பன சுந்தரி – திரைக்கதைக்காக இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் குவித்திருக்கும் வசூலை வாரி.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here