சொர்க்கவாசல் சினிமா விமர்சனம்

சிறைச்சாலை என்பது மனிதர்கள் தாங்கள் செய்த குற்றங்களுக்கு தண்டனை அனுபவித்து, மனம் திருந்துவதற்கான இடம் என்ற ஒரு எண்ணம் இருந்தால் அதை தூக்கி குப்பையில் வீசுங்கள் என சொல்லாமல் சொல்லும் ‘சொர்க்கவாசல்.’

அப்பாவி இளைஞன் ஒருவன் தான் செய்யாத கொலைக்கு சிறை தண்டனை அனுபவிக்கும் நிலைக்கு தள்ளப்பட, சிறை வாழ்க்கை அவனை கொலைகாரனாக்குகிறது; பின்னர் அவனை சிறைக்கே தாதாவாக்குகிறது. அது ஏன், எப்படி என்பதெல்லாம்தான் திரைக்கதை…

இதுவரை கிண்டல் கேலி நக்கல் நையாண்டி என கலகலப்பு பார்ட்டியாகவே பார்த்துப் பழகிய ஆர் ஜே பாலாஜி, காட்சிக்கு காட்சி ரத்தம் தெறிக்கும் இந்த படத்தில் ஹீரோ. சிறைக்குள் நுழையும்போது அப்பாவியாக இருந்து, யாரோ செய்த கொலைக்கு நான் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும் என கொதித்துக் கொந்தளிக்கும் காட்சிகளில் அதற்கேற்ற ஆத்திர ஆவேசத்தை வீரியத்துடன் வெளிப்படுத்தும்போது அவரது நடிப்புக்கு பாஸ்மார்க் போட்டுவிட முடிகிறது.

ஒட்டுமொத்த சிறையையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து தனி சாம்ராஜ்யம் செய்யும் அதிரடியான பாத்திரத்தில் கெத்து காட்டியிருக்கிறார் செல்வராகவன். சந்தர்ப்பம் பார்த்து காரியம் சாதித்துக்கொள்ளும் கனமான வேடத்திற்கு பொருத்தமான நடிப்பால் உயிரூட்டியிருக்கிறார் கருணாஸ்.

சிறை ரவுடிக் கும்பலின் கண்ட்ரோலில் இருப்பதை பொறுத்துக்கொள்ளாத சிறைத்துறை உயரதிகாரியாக சுற்றிவருகிற ஷராஃப்யுதீனின் நடிப்பில் குறையில்லை.

சிறைக் கைதிகளின் உரிமைக்காக போராடுகிற ஆளுமையாக சீலன் என்ற இலங்கைத் தமிழர் காதாபாத்திரத்தை ஏற்றிருக்கிற எழுத்தாளர் ஷோபாசக்தி நடிப்பாலும் வசன உச்சரிப்பாலும் தனித்து தெரிகிறார்.

சிறைச்சாலை சமையல்கூடத்தின் தலைவராக இயக்குநர் பாலாஜி சக்திவேல், ஆர் ஜே பாலாஜியின் காதலியாக சானியா ஐயப்பன்… இன்னும் மௌரிஷ், சாமுவேல் ராபின்சன், இசையமைப்பாளர் அனிருத்தின் தந்தை ரவி ராகவேந்தர் என நடிகர் நடிகைகளில் லிஸ்ட் பெரிது. அனைவரும் அவரவர் பங்களிப்பை சரியாக செய்திருக்க, பின்னணி இசையில் காட்சிகளின் பரபரப்புக்கேற்ப தீயாய் வேலை செய்திருக்கிறார் கிறிஸ்டோ சேவியர்.

விசாரணை கமிஷன் நீதிபதியாக வரும் நட்டி நட்ராஜின் நடிப்பில் குறிப்பிட்டு சொல்லும் அம்சங்கள் ஏதுமில்லை.

எடிட்டர் செல்வா ஆர்.கே. முன்னும் பின்னுமாக நான் லீனியரில் நகரும் திரைக்கதையை குழப்பமில்லாமல் கத்தரித்துக் கோர்த்திருக்க,

பெரும்பாலான காட்சிகள் சிறைக்குள்ளேயே சிறைப்பட்டிருந்தாலும் கேமராவை  வெவ்வேறு கோணங்களில் செலுத்தி சலிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் பிரின்ஸ் ஆண்டர்சன்.

சிறையையும், சிறை வளாகத்தையும் நிஜத்தின் பிரதிபலிப்பாக உருவாக்கிய கலை இயக்குநருக்கு ஸ்பெஷல் பாராட்டு.

1999-ல் சென்னை மத்தியச் சிறையில் நடந்த கலவரத்தை மையப்படுத்தி, திரைக்கதையில் காரசார சினிமா மசாலாவை தூக்கலாக தூவியிருக்கிற சித்தார்த் விஸ்வநாத், இந்த படம் மூலம் மாஸ் ஹீரோக்களை வைத்து கமர்ஷியல் படங்களை இயக்கும் தகுதி தனக்கிருப்பதை நிரூபித்திருக்கிறார்.

சொர்க்கவாசல் – நரகத்தின் நகல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here