ஸ்டார் சினிமா விமர்சனம்

‘லட்சிய வெறிக்கு தடைகளைத் தகர்க்கும் சக்தியுண்டு’ என்பதை கொஞ்சம் நீட்டிமுழக்கி எடுத்துச் சொல்லியிருக்கும் ‘ஸ்டார்.’

இளைஞன் கலைக்கு கலைத்துறையில் நடிகனாக புகழ்பெற வேண்டுமென்பது சிறுவயதிலேயே தொற்றிக் கொண்ட ஆசை; விருப்பம்; கனவு; லட்சியம் எல்லாமே… அந்த லட்சியத்தை அடைவதற்கான முயற்சியில் பல தடைகளைத் தாண்டி முதல் படிக்கட்டில் ஏறும்போது, தவறிவிழுந்து எழுந்து நடக்கவே முடியாதபடி முடங்கிப் போகிறான். இப்படி நகரும் கதையில் முடங்கிப்போன அவனால், தன் லட்சியக் கனவை அடைய முடிந்ததா இல்லையா என்பதுதானே கிளைமாக்ஸாக இருக்க முடியும்? ஆம்.. அதில் எந்த மாற்றமுமில்லை. இயக்கம் இளன்

கவின் பள்ளி மாணவன், கல்லூரி மாணவன், சொதப்பலான நடிகர், பின்னர் வேறு விதமான பரிமாணத்தில் வெளிப்படுபவர் என வெவ்வேறு காலகட்டத்தில் அதற்கேற்ற நடிப்புப் பங்களிப்பை கச்சிதமாக கடத்தியிருக்கிறார். கவினுக்கு இளவட்ட ரசிகர்கள் அதிகம். அவர்களின் கைத்தட்டலில் தியேட்டர் அதிர்கிறது.

கவினின் காதலியாக வருகிற பிரீத்தி முகுந்தனின் இளமைச் செழிப்பும், சில்மிசங்களும் கவனம் ஈர்க்கிறது. கவினை தேடி மும்பைக்குப் போய், ‘எனக்கு வேறு யாரும் கிடைக்கலைடா’ என்பதுபோல் கிறக்கத்துடன் கட்டிப் பிடித்து காதல் மொழி பேசுவது ரசிக்க வைக்கிறது. இன்னொரு கதாநாயகியான அதிதி போகன்கர் கதையுடன் கை கோர்த்துப் பயணித்திருக்கிறார்.

கவினின் அப்பாவாக வருகிற லால் தனக்கான இயல்பான நடிப்பைத் தாண்டியிருக்கிறார். அம்மாவாக வருகிற கீதா கைலாசம் மகனுடனான பாசப்பிணைப்புக் காட்சிகளில் தேவைக்கதிகமாய் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார்.

தன் சொந்த அப்பாவான ‘ராஜா ராணி’ பாண்டியனுக்கு குறிப்பிட்டுச் சொல்லும்படியான பாத்திரத்தை இயக்குநர் இளன் தூக்கிக் கொடுக்க, அதை அவர் பொறுப்புடன் சுமந்திருப்பதை குறிப்பிட்டுப் பாராட்ட வேண்டும்.

நிவேதிதா, தீப்ஸ், மாறன், காதல் சுகுமார் என இன்னபிற நடிகர், நடிகைகளின் நடிப்பு திருப்தி தர, யுவன் சங்கர் ராஜாவின் இசையில் அவரே பாடியிருக்கும் பாடல்கள் ரசிகர்களை உற்சாகத்தில் மிதக்க செய்திருக்கிறது. ஒளிப்பதிவு நேர்த்தி.

படத்தின் கடைசி கால் மணி நேரத்தில் அரங்கேறும் ஆச்சரியங்கள் படத்தின் பலம்.

ஸ்டார், இன்றைய தலைமுறையின் மனதைக் கவர்வதில் செய்திருக்கிறது ஸ்கோர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here