படம் பார்ப்பவர்களுக்கு இடைவேளை வரை ஹீரோ யார், வில்லன் யார் என்ற குழப்பம் உருவாகும்; பின்னர் தெளிவு கிடைக்கும். அப்படியொரு வித்தியாசமான திரைக்கதையில் அமைந்துள்ள ‘தரைப்படை.’
டேவிட், மாறன், செல்வம். அந்த மூன்று பேரின் நோக்கமும் ஒன்றாக இருக்கிறது. அது ஒரு பெட்டியிலிருக்கிற 1000 கோடி மதிப்புள்ள தங்கத்தையும் வைரத்தையும் கைப்பற்றுவது. அதற்காக மூன்று பேரும் தங்களை கையிலுள்ள துப்பாக்கியை ஈவிரக்கமின்றி பயன்படுத்துகிறார்கள். ஒவ்வொருவரும் எத்தனை பேரை கொன்றார்கள் என கணக்கெடுத்தால் அரை நாள் கடந்துவிடும். அத்தனை உயிரிழப்புகள்…
இப்படி நகரும் கதை, கடைசியில் யார் கையில் தங்கமும் வைரமும் சிக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாகிறது.
அந்த நபர் யார்? அந்த தங்கமும் வைரமும் யாருடையது? அதை அடைய ஆசைப்படும் மூன்று பேரின் பின்னணி என்ன? என்பதையெல்லாம் காண்பித்து நிறைவுக்கு வருகிறது திரைக்கதை.
டேவிட்டாக பிரஜன், மாறனாக லொள்ளுசபா ஜீவா, செல்வமாக விஜய் விஷ்வா. தங்கத்தை அபகரிக்கும் போட்டியில் நீயா நானா போட்டி நடத்தியிருக்கிறது அவர்களின் நடிப்பு. மூன்று பேருமே, மாஸ் ஹீரோக்கள் கேங்ஸ்டர்களாக நடிக்கும்போது எப்படியான பங்களிப்பை தருவார்களோ அதற்கு சமமாக இறங்கியடித்திருக்கிறார்கள். ஜீவாவின் ரஜினி ஸ்டைல் ஃபெர்மாமென்ஸ் தனியாய் தெரிகிறது.
ஹீரோயின் விஷயத்தில் இயக்குநர் குறைவைகக்கவில்லை. ஆர்த்தி ஷாலினி, சாய் தன்யா, மோகன சித்தி என ஆளுக்கொரு ஜோடியை கோர்த்துவிட அவர்கள் தங்கள் காதலர்களுடன் அப்படியும் இப்படியும் வலம் வருகிறார்கள்; பாடல் காட்சிகளில் உடம்பைக் கவ்விப் பிடிக்கும் கலர்ஃபுல் உடையில் உற்சாக ஆட்டம் போடுகிறார்கள்.
மற்ற நடிகர்கள் தங்கள் வேலையை கதைக்கேற்றபடி செய்திருக்க,
‘மண்ணிலுள்ள பெண்ணில்’, ‘காதலை கடந்துபோகலாம் மறந்துபோகுமா?’ பாடல்களை மனோஜ்குமார் பாபு இசையில் ரசிக்க முடிகிறது. ‘மண்ணிலுள்ள பெண்ணில்’ பாடல் படமாக்கப்பட்ட இடம் கண்களுக்கு விருந்து.
படத்தின் முதுகெலும்பாக இருக்கிற சண்டைக் காட்சிகளை வடிவமைத்திருப்பவர் ‘மிரட்டல்’ செல்வா.
ஒருவர் மக்களை ஏமாற்றி சேமித்த பணத்தை தங்கமாகவும் வைரமாகவும் மாற்றி பதுக்கி வைப்பதும், அதை மூன்று பேர் கைப்பற்றத் துடிப்பதுமாக கதைக்களத்தை உருவாக்கி பரபரப்பான கிரைம் திரில்லர் அனுபவத்தை தருகிற இயக்குநர் ராம் பிரபா,
எத்தனைதான் ஏமாந்தாலும், சிட் பண்டுகள் பெரும்பாலும் சீட்டிங் பண்டுகள்தான் என தெரிந்தாலும், அதிக வட்டி என ஆசை காட்டினால் முண்டியடித்து முதலீடு செய்யும் மக்களின் பேராசையை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்.