இந்த படத்தில் நடித்த தமிழ் நடிகர்களின் நடிப்பைப் பார்த்து அமெரிக்காவிலுள்ள நடிகர்கள் வியந்தார்கள்! -‘தி வெர்டிக்ட்’ பட விழாவில் இயக்குநர் கிருஷ்ணா சங்கர்

வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், சுஹாசினி, வித்யுலேகா, பிரகாஷ் மோகன் தாஸ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்க, கொலை சார்ந்த புலனாய்வுக் கதையில் உருவாகியுள்ள படம் ‘தி வெர்டிக்ட்.’

அறிமுக இயக்குநர் கிருஷ்ணா சங்கர் இயக்கியுள்ள இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் இன்று நடந்தது.

நிகழ்வில் பேசிய படத்தின் இயக்குநர் கிருஷ்ணா சங்கர், “இந்தப் படத்தில் நடித்த தமிழ் நடிகர்களின் நடிப்பை பார்த்து அமெரிக்காவில் உள்ள நடிகர்கள் வியந்தார்கள். இங்கு உள்ள நம் நடிகர்கள் ஒவ்வொருவரும் 10 ஹாலிவுட் நடிகர்களுக்குச் சமமானவர்கள் .இதை நான் சொல்லவில்லை அங்குள்ளவர்களே சொன்னார்கள்.இதை நான் நேரில் பார்த்துப் புரிந்து கொண்டேன். ஒரு நீதிமன்றக் காட்சியில் வரலட்சுமி நடித்ததைப் பார்த்து அங்கு ஜூரிகளாக இருந்த மூன்று பேர் கண் கலங்கினார்கள். நீங்கள் கண் கலங்கக் கூடாது நீங்கள் ஜூரிகள் என்ற போது இந்த பெண்ணின் நடிப்பைப் பார்த்து அசந்து விட்டோம் என்றார்கள்.

இங்கிருந்து வந்த அனுபவமுள்ள நட்சத்திரங்கள் கொடுத்த ஒத்துழைப்பால் தான் 23 நாட்களில் இந்தப் படத்தை முடிக்க முடிந்தது. எனது உதவி இயக்குநர்கள் திரைப்படத்தைப் பற்றிய திருத்தமான தெளிவான அறிவோடு இருந்தார்கள். அதனால் தான் இந்தப் படத்தை இவ்வளவு குறைவான நாட்களில் எடுக்க முடிந்தது. அவர்களிடமும் நான் கற்றுக் கொண்டேன்.

என் உதவி இயக்குநர்கள் இந்த படத்திற்காக கொடுத்த உழைப்பு சாதாரணமல்ல.
18 மணி நேரம் படப்பிடிப்பு என்றால் மூன்று மணி நேரம் அதற்கு பின்பும் வேலை பார்த்தோம் .அந்த அளவிற்கு எனக்கு அவர்கள் பக்கபலமாக இருந்தார்கள்.
இந்தப் படம் நிச்சயம் உங்களைக் கவரும்” என்றார்.

நடிகை சுஹாசினி, “நான் அடிக்கடி நிறைய படங்களில் வந்தால் சலித்து விடும். எனவே தேர்ந்தெடுத்து செய்கிறேன். இந்த படத்தை நடிகை லட்சுமி ஓகே செய்த கதை என்கிற அடிப்படையில் ஒப்புக்கொண்டு நடித்தேன்” என்றார்.

நடிகை வரலட்சுமி, “முதலில் என்னை ஹாலிவுட் திரை உலகத்திற்கு அழைத்துச் சென்ற இயக்குநருக்கு நன்றி. நான் இது போன்ற ஆங்கிலம் பேசியதில்லை .நான் ஆங்கிலம் பேசினால் வேகமாக இருக்கும், யாருக்கும் புரியாது. என்னை இதில் மிதமான வேகத்தில் பேச வைத்தார்கள். இந்தப் படப்பிடிப்பில் நடித்த போது எங்களுக்குள் ஆரோக்கியமான போட்டி இருந்தது. அங்குள்ள ஆனா என்ற அமெரிக்க நடிகையுடன் நான் நடித்தேன். நீதிமன்றத்தில் வழக்காடும் காட்சியில் அவருடன் நடிப்பது சவாலாக இருந்தது போட்டி போட்டு நடித்தேன்.

படத்தின் நாயகனும் தயாரிப்பாளருமான பிரகாஷ் மோகன்தாஸ் “இது எங்கள் முதல் இந்திய சினிமா முயற்சி. இதற்கு முன்பு அங்கே ஹாலிவுட்டில் செய்திருக்கிறோம் .இவ்வளவு பெரிய நட்சத்திரங்கள் நடிக்க வைப்பது எங்களுக்கு வியப்பாகவும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. இந்த வாய்ப்பைச் சாத்தியப்படுத்தியதற்கு கோபி சார் அவர்களுக்கு மிகவும் நன்றி. படப்பிடிப்பில் நாங்கள் அவர்களின் நடிப்பைப் பார்த்துப் பார்த்துக் கற்றுக் கொண்டே இருந்தோம். ஒருவரும் இரண்டாவது டேக் வாங்காமல் நடித்துக் கொடுத்து அசத்தினார்கள். ஒரு திரைப்படத்திற்கு கதை தான் அரசன் என்பார்கள் அது இந்த படத்தைப் பார்த்தால் புரியும் அனைவருக்கும் நன்றி” என்றார்.

எப்போதும் எதுவாக இருந்தாலும் எனக்கு எஸ் எம் எஸ் அனுப்பும் சுஹாசினி ஆன்ட்டி அவர்களின் அன்பு பெரியது. அவருடன் நடித்தது வித்தியாசமான அனுபவம். இங்கு வந்திருக்கும் பார்த்திபன் சார் எழுத்துக்கு நான் ரசிகை . படம் வெற்றி பெற அனைவரும் ஆதரவு தர வேண்டும்” என்றார்.

நடிகர் இயக்குநர் யூகி சேது பேசும்போது, “இந்த படத்தைப் பார்க்க தயாரிப்பாளர் அழைத்த போது எப்படி இருக்குமோ என்று பயந்து கொண்டு சென்றேன். ஏதாவது சொல்லி நட்பு முறிந்து விடுமோ என்ற பயம் எனக்கு இருந்தது. ஆனால் படத்தைப் பார்த்தபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவ்வளவு நேர்த்தியாக இஸ்திரி போட்டது மாதிரி அழகாக எடுத்திருக்கிறார்கள். பொதுவாக நீதிமன்றக் காட்சிகள் பார்ப்பதற்குப் பிடிக்காது .இதில் பார்க்கும் படி எடுத்திருந்தார்கள். இந்தப் படத்தில் முகங்களைச் சரியான படி பயன்படுத்தியிருந்தார்கள். ஒரு படம் எடுக்கும் போது எது தேவையில்லை என்பதை முதலில் தெரிந்து கொண்டு அவற்றை விலக்க வேண்டும். அப்படி தேவையானதை மட்டும் எடுப்பது சிரமம். அப்படி இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள் .’வின்டர் லைட் ‘என்ற படத்தில் முகங்களைச் சரியாக பயன்படுத்தியிருப்பார்கள். அப்படி முகங்களை இதில் சரியான படி பயன்படுத்திருக்கிறார்கள்.

எஸ்கிமோ மக்களுக்குத் தான் வெள்ளை நிறத்தின் 17 ஷேட்ஸ்களைத் தெரியும் என்பார்கள். அப்படி இருட்டின் பல ஷேட்ஸ் தெரிந்தவர்கள் பி சி ஸ்ரீராம் சார். அவரிடம் இருந்து வந்தவர் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார். இருட்டை எப்படிப் பார்க்க முடியும் என்பதை இந்தப் படத்தில் காட்டி உள்ளார்கள்.

சத்தியஜித்ரே என் ஒரு குறும்படத்துக்கு இசையமைத்துள்ளார். அவர் பேசிய ஆங்கிலத்தைப் பார்க்கும்போது அது எந்த நாட்டு ஆங்கிலம் என்று புரியாதபடி இருக்கும். அப்படி இதில் ஜாக்கிரதையாக வரலட்சுமி ஆங்கிலம் பேசி உள்ளார்.

பார்த்திபன்’ கவிதை பாட நேரமில்லை ‘என்கிற என் படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் நான்கு பேரில் ஒருவராக நடிக்க முடியாது என்று விலகிவிட்டார் .தன் பாதையில் தனியே பயணம் செய்ய ஆரம்பித்து விட்டார்.இங்கே வந்திருக்கும் சுஹாசினியின் நடிப்பின் நுணுக்கங்கள் சாதாரணமானதல்ல.படம் நன்றாக வந்திருக்கிறது” என்றார்.

இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் “இந்த படத்தின் காட்சிகளைப் பார்த்த போது ஒன்று தோன்றியது. ‘ஹேராம்’ என்கிற தமிழ்ப்படம் வெளிவந்த போது கமல் சாரிடம் “இந்தப் படத்தின் தமிழ் உரிமையை எனக்குக் கொடுக்க முடியுமா ?”என்று
ராதிகா கேட்டாராம். இந்தப் படக் காட்சிகளைப் பார்க்கும் போது
அப்படித்தான் தோன்றியது. ஏனென்றால் அந்த அளவுக்கு வெறும் ஆங்கிலமாக இருந்தது. சில ஐந்தாறு வார்த்தைகள் தான் தமிழில் இருந்தது .

‘வெர்டிக்ட்’ என்ற தலைப்பில் படத்தைத் தேடிய போது ஒரு ஆங்கிலப் படம் 1982ல் வந்ததைப் பார்த்தேன். இரண்டும் ஒரே மாதிரி தான் இருந்தது. கதையைச் சொல்லவில்லை. திரைப்பட உருவாக்கத்தில் அவ்வளவு தரமாக இரண்டும் ஒன்று போல் இருந்தது. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.

படத்தின் தயாரிப்பாளர், நடிகர் சித்ரா லெட்சுமணன் உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here