ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் அந்த இனத்தின் பாரம்பரியத்தை அசைக்க வேண்டும்; கம்பீரமான அடையாளங்களைச் சிதைக்க வேண்டும்; அவர்களின் மொழியை அழிக்க வேண்டும்; மொழியை அழிப்பதன் முதல் பணியாக அந்த மக்கள் பொக்கிஷமாக கருதுகிற இலக்கியங்களை எரித்துச் சாம்பலாக்க வேண்டும்.
இனத்தை அழிக்க தீர்மானித்துக் களமிறங்கும் கொடியவர்கள் இப்படி பல சதித் திட்டங்களை மனிதாபிமானமின்றி அரங்கேற்றுவார்கள். அதற்கான வரலாறுகள் ஏராளம் உண்டு.
இன விடுதலைக்காகவும் உரிமைக்காகவும் போராடிய இலங்கைத் தமிழர்களை அழித்தொழித்த வேதனைச் சம்பவங்களை திரும்பிப் பார்த்தால்,
தமிழ் இனத்தின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாக விளங்கிய இலங்கை யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்த ‘பொதுசன நூலகம்’ சிங்களர்களால் திட்டமிட்டு எரிக்கப்பட்ட வரலாறு மனதை ரணமாக்கும்.
அந்த ரணத்தின் ஒரு துளிக்கு திரைவடிவம் கொடுத்து தீப்பந்தமாக்கியிருக்கிறார் இயக்குநர் ராஜ் சிவராஜ்.
சீனியர் சிட்டிசன் சிவம். அவர் வீட்டில் நான்கு இளைஞர்கள் தங்கியிருக்கிறார்கள். அவர் வீட்டைக் குறிவைத்து சிலர் கற்களை வீசி தாக்குகிறார்கள். அங்கு நிற்கும் இரு சக்கர வாகனத்தை தீயிட்டுக் கொளுத்துகிறார்கள். சிவம், தனக்கு எது நடந்தாலும் பரவாயில்லை என்று சொல்லி, அந்த இளைஞர்களை வீட்டை விட்டு வெளியேறச் சொல்கிறார். மறுநாள் சிவம் சவமாகிக் கிடக்கிறார்.
அவருக்கு என்ன நடந்தது? அவர் வீட்டின் மீதான தாக்குதலுக்கும் வாகன எரிப்புக்கும் என்ன காரணம்? அவர் யார்? அவரது பின்னணி என்ன?
இப்படியான பல கேள்விகளுக்கு பதில் தருகிறது ராஜ் சிவராஜ், பூவன் மதீஷன், அருண் யோகதாசன் கூட்டணி அமைத்திருக்கும் திரைக்கதை.
சிவமாக தமிழருவி சிவகுமாரன். நூலகராக வருகிற அவர் கலவரச் சூழலில் சிக்கிய நூலகத்திலிருந்து இலக்கியங்களைக் கட்டிக் காப்பாற்ற வேண்டுமென்ற உறுதியோடு செயல்படுவது, எரிக்கப்பட்ட ஏராளமான புத்தகங்களில் மிச்சமாக கிடைத்தவற்றைச் சேகரித்து ஆவணமாக்க முயற்சிப்பது என தன் பங்களிப்பை அலட்டிக்கொள்ளாத உடல்மொழியில் தந்திருக்கிறார்.
அவருடன் தங்கியிருந்து அவரது கஷ்ட நஷ்டங்களில் கை கொடுக்கிற நான்கு பேரில் புகழ் என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிற கில்மன், சிவம் கட்டிக் காப்பாற்றி உலகத்துக்கு அர்ப்பணிக்க நினைக்கும் பொக்கிஷத்தைத் தேடி பயணிப்பதும் அதனால் ரத்தம் சிந்தும் விளைவுகளைச் சந்திப்பதுமாக கவனம் ஈர்க்கிறார்.
சிவத்தின் வாலிபப் பருவ கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிற ஆகாஷ் தியாகலிங்கம் காதல் உணர்வு, காதல் தோல்வி, கல்யாண வாழ்க்கை, குழந்தை பிறப்பு என அந்த வயதுக்கேயுரிய இளமைத் துடிப்பை பொருத்தமாக பிரதிபலித்திருக்கிறார்.
சிவத்தின் இல்லத்தில் தங்கியிருக்கும் மற்ற இளைஞர்கள் கதையின் தேவைக்கேற்ப களமாடியிருக்கின்றனர். சிவத்தின் நண்பராக வருகிறவரிடமிருந்து எட்டிப் பார்க்கும் மெல்லிய வில்லத்தனம் கதையோட்டத்தின் நிறைவுக்கு சுறுசுறுப்பூட்டுகிறது.
சிவம் எடுத்துக்கொள்ளும் முயற்சிக்கு பக்கபலமாக நிற்பவரிலிருந்து இன்னபிற பாத்திரங்களைச் சுமந்திருப்பவர்கள் அத்தனை பேரும் கேரக்டர்களின் தன்மையுணர்ந்து நடித்திருக்க, நடித்திருக்கும் அத்தனைப் பேரும் இலங்கைத் தமிழர்களாக இருப்பதால் இலங்கை வட்டாரத் தமிழை இயல்பாகப் பேசுகிறார்கள். அந்த வசன உச்சரிப்பு இனிமை கூட்டுகிறது.
பின்னணி இசை, ஒளிப்பதிவு எல்லாவற்றிலும் எளிமையான தரம் இருக்கிறது. இந்த படைப்புக்கு போதுமானதாகவும் இருக்கிறது.
இலங்கைத் தமிழர்கள் பற்றிய படம் என்றாலே அந்த மண்ணில் தமிழர்களுக்கு நடந்த உடல் ரீதியிலான கொடுமைகளை மையப்படுத்திய படைப்புகளாகவே பார்த்துப் பழகிய நமக்கு,
அந்த மண்ணில் நம் இலக்கியப் பொக்கிஷங்களுக்கு ஏற்பட்ட ஆபத்தும், அவற்றைப் பாதுகாக்க ஒருவர் பட்ட கஷ்டங்களும் என படு வித்தியாசமான கதைக்களத்தில் அமைந்த இந்த படமும் எதிர்காலத்தில் ஒரு விதத்தில் பொக்கிஷமாகவே கருதப்படும்.
தீப்பந்தம் _ கசக்கும் உண்மைகள் மீது பாய்ச்சப்பட்டிருக்கும் வெளிச்சம்!
-சு.கணேஷ்குமார்