முதல்வர் ஸ்டாலின் திருக்குறள் திரைப்படத்தை பார்க்க வேண்டும்! -தொல்.திருமாவளவன் வேண்டுகோள்

ஏ ஜே பாலகிருஷ்ணன் இயக்கிய ‘திருக்குறள்’ திரைப்படத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பார்த்து, படக்குழுவினரைப் பாராட்டினார். தமிழக முதல்வர் ஸ்டாலின் படத்தை பார்க்க வேண்டுமென கோரிக்கையும் வைத்துள்ளார்.

படம் பற்றி அவர் பேசியபோது,

”தமிழ் சமூகத்தில் போற்றப்பட வேண்டிய ஒரு படைப்பாக இன்றைக்கு வெளிவந்திருக்கிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ் சமூகம் எவ்வாறு வாழ்ந்தது என்பதை இன்றைய தலைமுறைக்கு எடுத்துக் காட்டக்கூடிய வகையில் ஐயன் திருவள்ளுவனின் படைப்பான உலக பொதுமறையாய் போற்றப்படும் திருக்குறளை கருப்பொருளாக கொண்டு படைக்கப்பட்டிருக்கிற ஒரு மகத்தான காவியம் தான் திருக்குறள்.

சமூக நோக்கு மட்டுமே இந்த திரைப்படத்தின் முதன்மையான கருப்பொருளாக இருக்கிறது. தமிழ்ச் சமூகம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எப்படி பண்பட்ட சமூகமாக வாழ்ந்திருக்கிறது அறம் தழைத்திருந்தது வீரம் எவ்வாறு செறிவாக இருந்தது, குடும்ப வாழ்க்கை, இல்லற வாழ்க்கை, என்பது எவ்வளவு இனிமையாக இருந்தது, என்பதை எல்லாம் இரண்டே கால் மணி நேரம் திரைப்படமாக ஏஜே பாலகிருஷ்ணன் அவர்கள் படைத்து நமக்கு அருளி இருக்கிறார். இன்றைக்கும் ஐயன் திருவள்ளுவன் நமக்கு தேவைப்படுகிறார் திருக்குறள் நமக்கு தேவைப்படுகிறது. இந்த சமூகம் வழிதவறி போய்விடக்கூடாது. அறம் தழைத்த ஒரு சமூகமாகவே இது தன்னை நெறிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற பொறுப்புணர்வோடு எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் திருக்குறள். இதற்கு திருவள்ளுவர் என்று கூட பெயர் வைக்காமல் திருக்குறள் என்று பெயரிட்டுருப்பதிலேயே இயக்குனர் ஏஜே பாலகிருஷ்ணன் அவர்களின் பார்வை எவ்வளவு பொறுப்புள்ளதாக இருக்கிறது என்பதை உணர முடிகிறது.

செம்பூர் ஜெயராஜ் அவர்களின் எழுத்து, ஐயன் திருவள்ளுவனின் தமிழ் இயல்பாக பேச முடியும் என்பதற்கான ஒரு அடையாளமாக இந்த திரைப்படத்தில் சாட்சியமாக இருக்கிறது. ஒவ்வொரு பாத்திரமும் தங்கள் நடிப்பு திறனை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். கேமராமேன் எட்வின் அவர்களும் மிக அழகாக திரைப்பட காட்சிகளை நமக்கு படமாக்கி தந்திருக்கிறார். பாடல்களும் இசைஞானி இளையராஜா அவர்களின் இசையில் உயிர்ப்போடு இருக்கிறது.

இந்த திரைப்படத்திற்கான உயிர்ப்பை இசையின் மூலம் அவர் தந்திருக்கிறார். ஒவ்வொரு தமிழ் குடிமகனும் பார்க்க வேண்டிய திரைப்படம் இந்த காலத்திற்கு பொருத்தமான குரல்களை தேர்வு செய்து அதை கருப்பொருளாக்கி இந்த படத்தை தமிழ் சமூகத்திற்கு தந்திருக்கிறார்கள். எனவே இந்த திரைப்படத்தை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் பார்க்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். அவரே இந்த திரைப்படத்தை பார்ப்பதன் மூலம் ஐயன் திருவள்ளுவருக்கு அவர் செய்கிற சிறப்பாக அது அமையும். திருக்குறளுக்கு செய்கிற சிறப்பாக அமையும்.

முத்தமிழ அறிஞர் கலைஞர் அவர்கள் முதன்முதலாக ஆட்சி பீடத்தில் ஏறியபோது ஐயன் திருவள்ளுவனின் திருக்குறள் பேருந்து ஒவ்வொரு பேருந்திலும் இருக்க வேண்டும் என்று ஆணையிட்டார். வள்ளுவருக்கு கோட்டம் அமைத்தார். வானுயர சிலை குமரி முனையிலே முக்கடல் சங்கமிக்கும் இடத்திலே நிறுவினார். குரலோவியம் தீட்டினார். குரலுக்கு அவர் கொடுத்த முன்னுரிமை என்பது அளப்பெரியது. திரைப்படத்தின் கடைசி காட்சி குமரி முனையில் வானுயர நிமிர்ந்து நிற்கும் ஐயன் திருவள்ளுவனின் சிலைதான் நம் நெஞ்சில் அப்படியே ஆழமாக பதியக்கூடிய வகையில் திருக்குறளின் முக்கியத்துவம் இப்படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் பதிவாகி இருக்கிறது.

ஆணவ கொலை இன்றைக்கு அதிகம் பெருகி வருகிற சூழலில், காதலுக்கு எதிர்ப்பு கடுமையாக சமூக பரப்பில் பரவி வரும் சூழலில், காதல் எவ்வளவு புனிதமானது என்பதை திருவள்ளுவர் எடுத்துரைக்கும் காட்சி, ஐயன் திருவள்ளுவர் மன்னனுக்கு அறிவுரை சொல்லுகிற காட்சி, கல்லுண்ணாமையை வலியுறுத்தக்கூடிய காட்சி, தமிழர்களுக்கு இடையிலே பகை கொண்டு ஒருவருக்கொருவர் மோதி கொள்வது தமிழ் சமூகம் பாழ்பட்டு போகும் என்று ஐயன் திருவள்ளுவன் கவலைப்படுவது, அதற்காக முன்னின்று அரசர்களுக்கு அறிவுரை வழங்குவது போன்ற இந்த காட்சி அமைப்புகள் எல்லாம், நமக்கு பல புதிய தகவல்களை தருகிறது, வெறும் புலவனாக இருந்து பாடல் எழுதக்கூடிய ஒரு பேரறிவாளனாக மட்டும் ஐயன் திருவள்ளுவன் வாழவில்லை, சமூகத்தில் நிலவுகிற அவலங்களை போக்க வேண்டும், பகைமையை ஒழிக்க வேண்டும் அன்பை பரப்ப வேண்டும் காதலை போற்ற வேண்டும், என்கிற பொறுப்புணர்வோடு வாழ்ந்த ஒரு பேரறிவாளன் ஐயன் திருவள்ளுவன் என்பதை இந்த திரைப்படம் நமக்கு படிப்பிக்கிறது போதிக்கிறது.

உலக திரைப்பட வரலாற்றில திருக்குறளுக்கான ஒரு தனி படமாக இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த திருக்குறளை வைத்தே இன்னும் பல படங்களை எடுக்க முடியும். திரு ஏஜே பாலகிருஷ்ணன் அவர்கள் அடுத்து திருக்குறள் இரண்டு என்று கூட எடுக்க வேண்டும் என்பது என்னுடைய அவா. அதற்கு ஏஜே பாலகிருஷ்ணன் அவர்கள் முன்வருவார் என்று நான் நம்புகிறேன்.

அரசியல் களத்தில மக்களுக்கு பணியாற்றக்கூடிய ஒவ்வொருவரும் இப்படத்தை பார்க்க வேண்டும். முதல்வர் பார்த்தால் இன்னும் அது கூடுதலான செய்தியாக மக்களுக்கு போய் சேரும் என்பதனால் நான் முதல்வரை பார்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன் நன்றி” என்றார்.

படம் பற்றி:- பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரிலும், காந்தியின் வாழ்க்கை வரலாற்றை Welcome Back Gandhi என்ற பெயரிலும் திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம் தயாரிப்பில், திருக்குறளை மையமாக வைத்து ஏ ஜே பாலகிருஷ்ணன் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக படைப்பாக உருவாகி வெளியாகியுள்ளது ‘திருக்குறள்.’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here