இந்த படத்தின் டிரெய்லர் வெளியானபோது திரையுலகினர் போன் செய்து திட்டினார்கள்! -‘ஹாட் ஸ்பாட்’ பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் கலையரசன் பேச்சு

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களைப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ஹாட் ஸ்பாட்.’

கலையரசன், ’96’ பட நட்சத்திரங்கள் ஆதித்யா பாஸ்கர், மற்றும் கௌரி கிஷன், சாண்டி மாஸ்டர், அம்மு அபிராமி, ஜனனி ஐயர், திட்டம் இரண்டு பட ஹீரோ சுபாஷ், சோபியா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் வரும் மார்ச் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை ‘சிக்ஸர் எண்டெர்டைன்மெண்ட்’ தினேஷ் கண்ணன் வெளியிடுகிறார். பட வெளியீட்டுக்கு முன்பாக படக்குழுவினர் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் பேசியபோது, ”இந்த படத்தை என் மீது நம்பிக்கை வைத்து என் நண்பர்கள் தயாரித்திருக்கிறார்கள். நிறைய நடிகர்கள் அருமையாக நடித்துள்ளனர். எல்லோருமே கதையை நம்பி மட்டுமே வந்துள்ளனர். யுவர்ஸ் ஷேம்ஃபுலி எனத் தொடர் எடுத்தேன். அது ஏற்படுத்திய எதிர்வினைகளை இந்த படமும் ஏற்படுத்தும் என நம்புகிறேன். தப்பான கருத்தைச் சொல்லிவிடக்கூடாது என்பதில் மிகக் கவனமுடன் வேலை பார்த்துள்ளோம். படம் உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும்” என்றார்.

நடிகை அம்மு அபிராமி பேசியபோது, ”என்னை இந்த பாத்திரத்திற்குத் தேர்ந்தெடுத்த விக்னேஷ் அவர்களுக்கு நன்றி. முதலில் கதை சொன்ன போது பயந்தேன், திட்டம் இரண்டு பார்த்த பிறகு தான் அவரின் கதை சொல்லும் முறை புரிந்தது. என்னோட கதாபாத்திரம் மிக நன்றாக வந்துள்ளது. மற்ற விஷயங்கள் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் விக்னேஷ் மீது நம்பிக்கை இருக்கிறது. படத்தைப்பார்த்தால் உங்களுக்குப் புரியும்” என்றார்.

நடிகர் கலையரசன் பேசியபோது, ”இந்தப்படத்தின் டிரெய்லர் வெளியானபோதே திரையுலகிலிருந்து, பலர் போன் செய்து திட்டினார்கள். ஆனால் முழுப்படமும் பார்த்தால் உங்களுக்கு இதன் அர்த்தம் புரியும். விக்னேஷ் கதை சொல்லும் விதம் மாறுபட்டு இருக்கலாம், ஆனால் அது சென்று சேரும் இடம் சரியாக இருக்கும். என் கதை மட்டும் தான் எனக்கு தெரியும். ஆனால் விக்னேஷ் பிரதர் மீது நம்பிக்கை இருக்கிறது. யுவர்ஸ் ஷேம்ஃபுலி எனத் தொடர் எடுத்தார். அதுவும் இந்த மாதிரி, அலைகளை ஏற்படுத்தியது ஆனால் அது முடியும் போது மிக அழகாக நம்மைச் சிந்திக்கும்படி செய்யும். அதே போல் இந்தப்படமும் இருக்கும், படம் பாருங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்” என்றார்.

நடிகர் ஆதித்யா பாஸ்கர் பேசியபோது, ”இந்த படத்தின் கதை மிக போல்டான கதை. படத்தில் உங்கள் முகம் சுளிக்கும்படி எதுவும் இருக்காது. இந்த படத்தில் நடிக்க என்னை தேர்ந்தெடுத்த இயக்குநருக்கு நன்றி. கலையரசனின் ரசிகன் நான் அவருடன் நடித்தது மகிழ்ச்சி” என்றார்.

நிகழ்வில் தயாரிப்பாளர் கே ஜே பாலமணி மார்பன், சிக்ஸர் என்டர்டெயின்மெண்ட் தினேஷ் கண்ணன், ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய், எடிட்டர் முத்தையா, இசையமைப்பாளர் வான், கலை இயக்குநர் சிவ சங்கரன், நடிகை சோபியா, நடிகர் சுபாஷ் உள்ளிட்டோரும் பேசினார்கள்.

படக்குழு: படத்தை ‘கே ஜே பி டாக்கீஸ்’, ‘வாரியார் பிலிம்ஸ்’ பட நிறுவனங்கள் சார்பில் கே.ஜே.பாலமணி மார்பன் மற்றும் சுரேஷ்குமார் இணைந்து தயாரித்துள்ளனர். சதீஷ் ரகுநாதன், வான் இருவரும் இசையமைத்துள்ளார்கள். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்ய, முத்தையன் எடிட்டிங் பணியைக் கவனித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here