வாழ்த்து, இரங்கல், சம்பள விவரம், ஹெல்த் டிப்ஸ்… மனம்திறந்த நடிகர் சூரி! தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தில் களைகட்டிய சுதந்திர தின விழா!

மூத்த பத்திரிகையாளர் ‘தினமலர்’ விதா தலைவராக இருந்து வழிநடத்தும் தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. நடிகர் சூரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தியபின், சங்கத்தின் உறுப்பினர்களிடையே பேசிய சூரி, ”அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள். இந்த நாளில் என்னை விழாவிற்கு அழைத்ததில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.

நாம் இந்த நிமிடம் இந்த நொடி கொண்டாடிக் கொண்டிருக்கும் சுதந்திரம் சாதாரணமாக கிடைத்தது அல்ல. இதற்கு பின்னால் பலரது உழைப்பும் தியாகமும் அடங்கி இருக்கிறது. எப்படி ஊரில் எல்லையில் இருக்கும் எல்லைச்சாமி நம்மை பாதுகாக்கிறதோ அதைப்போல நாட்டின் எல்லையில் இன்றளவும் நம்மை பாதுகாக்க உயிரைக் கொடுத்து போராடிக் கொண்டிருக்கின்றனர் ராணுவ வீரர்கள். சமீபத்தில் கூட மதுரையைச் சேர்ந்த லட்சுமணன் நாட்டுக்காக தன்னுயிர் இழந்துள்ளார். அவருடையது சாதாரண தியாகம் அல்ல. அவரது குடும்பத்தாருக்கும் அவரது அப்பா அம்மாவிற்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்” என்றவர் தொடர்ந்து பேசினார். அதிலிருந்து…

விருமன் சக்ஸஸ்!

சிறப்பு விருந்தினருக்கு சங்கத்தின் சார்பில் தலைவர் கவிதா வழங்கிய நினைவுப் பரிசு!

எனக்கும் என் குடும்பத்தாருக்கும் விருமன் படத்திற்கு டிக்கெட் கேட்டேன். இல்லை; ஹவுஸ்ஃபுல் என பதில் வந்தது. அந்தளவிற்கு அமோக வெற்றி கிடைத்திருக்கிறது. நானும் அதில் நடித்திருக்கிறேன் என்பதில் பெருமையாக இருக்கிறது.

ஹீரோவானபோது…

காமெடி நடிகனாக இருந்து இப்போது இந்த நிலைவரை வந்து இருக்கிறேன் எனில் அதற்கு என்னுடன் பயணித்த அத்தனை இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் தான் காரணம். முதன்முதலில் விடுதலை படத்தின் கதையை என்னிடம் வெற்றிமாறன் சார் சொல்லும்பொழுது இந்த கேரக்டரில் நிறைய சீன்கள் உள்ளன எப்படி இன்னும் இந்த கேரக்டரை வாங்கிவிடலாம் அல்லது அந்த கேரக்டர் நன்றாக இருக்கிறது என ஒவ்வொரு கேரக்டராக என் மனதுக்குள் யோசித்துக் கொண்டிருக்கையில் வெற்றிமாறன் சார் ‘நீங்க தான் மெயின் லீட் ‘ என்றார். அவர் கண் முன்பு என்னால் காட்டிக் கொள்ள முடியவில்லை. என்னை வெளியே விட்டிருந்தால் வானத்தில் பறந்திருப்பேன். சாதாரண காமெடியனாக இருந்தவனுக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய பாக்கியம்.

வாங்கும் சம்பளம் என்ன?

நான் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை அத்தனை இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் என்னை நம்பி எனக்காக கொடுத்த வாய்ப்பு. மேலும் காமெடியனாக இருந்து சொல்ல வேண்டிய கருத்துக்கள் விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன. என்னதான் நான் மெயின் கேரக்டரில் நடித்தாலும் அதையும் நான் ஹீரோவாக பார்க்கவில்லை; படத்தின் கேரக்டராக மட்டுமே பார்க்கிறேன். காமெடியன் சூரி என்பதே எனது அடையாளம் அதை எக்காலத்திலும் விடமாட்டேன். அதேபோல் நான் எத்தனை வளர்ந்தாலும் சம்பளம் பொறுத்தவரை தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து என்ன நியமித்தார்களோ என்ன கொடுக்கிறார்களோ அதைக் கொண்டுதான் என்னுடைய வாழ்க்கை பயணம் சென்று கொண்டிருக்கிறது. அவர்கள் கொடுக்கும் சம்பளம் அளவிற்கு என்னை நான் எப்படி தயார் செய்து கொள்ள முடியும்; அதற்கு தகுதியானவனாக எப்படி மாற்றிக் கொள்ள முடியும் என்பதை மட்டுமே யோசிப்பேன்.

பிடித்த ஹீரோயின்கள்!

கீர்த்தி சுரேஷ் கொஞ்சம் அதிகமாக பிடிக்கும் . மற்ற ஹீரோயின்களையும் பிடிக்கும். தற்போது விருமன் பட நாயகி அதிதி. அவரது பெயரை சரியாக உச்சரிக்கவே பலவிதமாக பயிற்சி எடுத்துக் கொண்டேன். ஒரு கூட்டத்திற்குள் நுழைந்தால் இருக்கும் அத்தனை பேரின் பெயர்களையும் மிகச் சரியாக மனதில் ஏற்றி விடும் அளவிற்கு திறமையானவர் . கேரக்டரை உள்வாங்கி நடிப்பதில் திறமைசாலி. நிச்சயம் அதிதி சங்கருக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது. மிகப்பெரிய நடிகையாகும் அத்தனை வாய்ப்புகளும் உள்ளன.

ஹெல்த் டிப்ஸ்!

எந்தத் துறையானாலும் சரி முதலில் தன்னை தயார் செய்து கொள். உன் உடலை உன் ஆரோக்கியத்தை நீ முதலில் விரும்பு. உன்னை நேசி. நான் கடைப்பிடிப்பது இதைத்தான். ஒரு நாளில் 30 நிமிடங்கள் உடற்பயிற்சிக்கு ஒதுக்குங்கள். 30 சதவீதம் உடற்பயிற்சி எனில் 70 சதவீதம் நாம் உண்ணும் உணவுதான். எதை சாப்பிட்டாலும் அளவாக சரியான நேரத்தில் சாப்பிட கற்றுக் கொள்ளுங்கள். மிக்ஸி போல மேல மேல அரைக்காதீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here