‘பொன்னியின் செல்வன்’ இரண்டு பாகங்களுக்கு பிறகு நடிகை த்ரிஷா நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் ‘தி ரோட்.’ த்ரிஷாவின் திரையுலகப் பயணத்தில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த படத்தின் புதிய மேக்கிங் டீஸர் முதல் முறையாக இணையதளத்தில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் அருண் வசீகரன் இயக்கும் இந்த படத்தில் த்ரிஷாவுடன், ‘சார்ப்பட்டா’ புகழ் டான்சிங் ரோஸ் ‘சபீர்’, சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், எம்.எஸ். பாஸ்கர், வேலராமமூர்த்தி, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படம் குறித்து இயக்குநரிடம் கேட்டபோது, ”இந்த படம் மதுரையில் நடந்த சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. படக்குழுவினர் அனைவரும் மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள மலைகள், காடுகள் என மிக கடுமையான இடங்களுக்கு சென்று படப்பிடிப்பு நடத்தினோம்” என்றார்.
படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த தீபாவளியன்று வெளியாகி த்ரிஷாவின் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
படம் வரும் ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முன்னதாக இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவை திரைப் பிரபலங்கள் முன்னிலையில் மிக பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
படத்திற்கு சாம்.சிஎஸ். இசையமைத்துள்ளார். கேஜி வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.