‘டக்கர்’ படம் ’குஷி’ மாதிரி காதலர்களுக்குள் வரும் பிரச்சினை சம்பந்தப்பட்ட படமா? -பத்திரிகையாளர் சந்திப்பில் விளக்கம் கொடுத்த நடிகர் சித்தார்த்

சித்தார்த் நடித்து, வரும் ஜூன் 9-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ள படம் ‘டக்கர்.’

படவெளியீட்டையொட்டி படத்தின் நாயகன் சித்தார்த், இயக்குநர் கார்த்திக் ஜி கிரிஷ், இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா மூவரும் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

சித்தார்த் பேசும்போது, “இயக்குநர் கார்த்திக் இந்த படத்திற்காக என்னை சந்தித்தபோது, சில விஷயங்கள் எனக்கு ஹைலைட்டாக தோன்றியது. எந்த இடத்திலும் நிற்காத ஸ்பீடான ஒரு படம் இது. ’டக்கர்’ என இந்த படத்தின் தலைப்பின் அர்த்தம் பார்டர் தாண்ட தாண்ட மாறிக் கொண்டே இருக்கும். வட இந்தியாவில் ‘டக்கர்’ என்றால் போட்டி, சில ஊர்களில் ஸ்மார்ட்டாக இருப்பதை ‘டக்கர்’ என சொல்வார்கள். மோதல், சூப்பர் என பல அர்த்தம் உண்டு. நாங்கள் அந்த வார்த்தையை பயன்படுத்தியதன் காரணம் மோதல். ஒரு பொண்ணுக்கும் ஹீரோவுக்குமான க்ளாஷ்தான் அது.

சமீபகாலத்தில், சினிமாவில் வந்த கதாநாயகிகள் கதாபாத்திர வடிவமைப்பில் இது வித்தியாசமாக எனக்கு பட்டது. ’குஷி’ போல காதலர்களுக்குள் வரும் பிரச்சினையா என்று கேட்டால் இல்லை. பணக்காரன் ஆக வேண்டும். ஆனால், அது முடியவில்லை எனும்போது இளைஞர்களுக்கு வரும் கோவம்தான் கதாநாயகனுக்கும். ’உங்களை இதுவரை சாஃப்ட்டாகதான் பார்த்திருப்பார்கள். இதில் ரக்கட்டாக பார்த்தால் வித்தியாசமாக இருக்கும்’ என இயக்குநர் சொன்னார். அவர் கொடுத்த நம்பிக்கையில்தான் இந்தப் படத்தை எடுத்தோம்.

ஆக்‌ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறேன் என என்னை நானே பாராட்டும் அளவுக்கு நன்றாக செய்திருக்கிறேன். இது முழுக்க முழுக்க கமர்ஷியல் படம்தான். ஜூன் 9 அன்று இந்தப் படம் ஹிட் என்று சொல்லும் அளவுக்கு இதன் மீது நம்பிக்கை உள்ளது. எந்த அளவுக்கு நம்பிக்கை என்றால், கார்த்தியுடன் அடுத்தடுத்து படங்கள் நடிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறேன். தமிழ் சினிமாவில் அவர் முக்கியமான கமர்ஷியல் இயக்குநராக இருப்பார்.

‘அந்தரங்க உறவு வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம், கல்யாணம் எல்லாம் வேண்டாம்’ என கதாநாயகி டிரெய்லரில் பேசும் வசனம் அனைவரையும் மிரட்டி போட்டுவிட்டது. யூடியூப் கமெண்டிலேயே இதுதொடர்பாக நிறைய விவாதங்கள். இந்த கதாநாயகி கதாநாயகனை சந்திக்கும்போது என்ன நடந்தது என்பதும் ‘டக்கர்’ரில் இருக்கும்.

யோகிபாபு, கதாநாயகி திவ்யான்ஷா, சீனியர் ஹீரோ அபிமன்யு, முனீஷ்காந்த், விக்னேஷ்காந்த என அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

நிவாஸ் கே பிரசன்னாவுக்கு இந்தப் படம் மியூசிக்கலாக முக்கியமானதாக இருக்கும். ’டக்கர்’ திரைப்படம் திரையரங்குகளுக்காக எடுக்கப்பட்ட கமர்ஷியல் படம். நண்பர்களோடு, குடும்பத்தோடு நீங்கள் ஜாலியாக பார்க்கலாம். நிச்சயம் உங்களை ‘டக்கர்’ ஏமாற்றாது. இந்த சம்மரில் வெளியாகும் படங்களில் ‘டக்கர்’ நிச்சயம் தனி இடத்தைப் பிடிக்கும்.

வரும் ஆகஸ்ட் மாதம் வந்தால் ‘பாய்ஸ்’ படம் வெளியாகி 20 வருடங்கள் ஆகிறது. இந்த 20 வருடத்தில் நிறைய நான் கற்றுக் கொண்டிருக்கிறேன். அடுத்த இரண்டு வருடங்களுக்கு நல்ல படங்களில் கமிட் ஆகியுள்ளேன்” என்றார்.

நிகழ்வில் படத்தின் இயக்குநர் கார்த்திக் ஜி கிரிஷ் பேசும்போது, “இது என்னுடைய இரண்டாவது படம். ஒரு கதை யோசிக்கும்போதே யாராவது மனதில் வருவார்கள். இந்த கதையில் லவ், ஆக்‌ஷன் என இளம் தலைமுறையினருக்கான கன்டெண்ட் உள்ளது. இது அனைத்தும் சித்தார்த்திடம் உள்ளதால் அவரை தேர்ந்தெடுத்தேன். அவருக்கும் இந்த கன்டெண்ட் பிடித்திருந்தது.

திவ்யான்ஷா கதாநாயகியாக நடித்துள்ளார். மிகவும் தைரியமாக இந்த தலைமுறை வெளியே சொல்லத் தயங்கும் பல விஷயங்களை வெளிப்படையாக பேசுகிறபடி அவருடைய கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ளோம். யோகிபாபு அப்பா மகன் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். அபிமன்யு, முனீஷ்காந்த் என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னாவின் இசை படத்திற்கு ப்ளஸ். படத்தில் அவரது பாடல்கள் பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

தொழில்நுட்பக் குழுவும் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள். முன்பே அறிவித்த இந்த படம், ஏன் இவ்வளவு தாமதமாக வெளியாகிறது என்று பலரும் கேட்டார்கள். இடையில் ஓடிடிக்கு கொடுத்து விடலாம் என்று கூட சிலர் சொன்னார்கள். ஆனால், இது தியேட்டருக்கான படம் என்பதால் திரையரங்குகளுக்கு மட்டும்தான் கொடுக்க வேண்டும் என்று இருந்தோம்.

தயாரிப்பாளர் சுதன் என்னுடைய நண்பர். சுதன், சித்தார்த் என எங்கள் மூவருக்கும் இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. படத்தைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்” என்றார்.

இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here