சித்தார்த், திவ்யான்ஷா, யோகிபாபு நடிப்பில், கார்த்திக் ஜி க்ரிஷ் இயக்கத்தில் உருவாகி கடந்த வெள்ளியன்று வெளியாகி ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பு பெற்றுவரும் படம் ‘டக்கர்.’
படத்தை இயக்கிய கார்த்திக் ஜி க்ரிஷ்க்கு அவரது சொந்த ஊரான மயிலாடுதுறையில் பொதுமக்களும், ரசிகர்களும் இணைந்து மேளதாளம் முழங்க, பட்டாசு வெடித்து, நடனமாடி உற்சாக வரவேற்பு அளித்தனர். மயிலாடுதுறை விஜயா திரையரங்க வளாகத்தில் இயக்குநருக்கு பாராட்டு விழா நடத்தினர்.
விழாவில் வழக்கறிஞர்கள், அரசியல் பிரமுகர்கள், வணிகர்கள், மருத்துவர்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு இயக்குநருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர்.
அதை தொடர்ந்து இயக்குநர் டக்கர் படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து கண்டு களித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் கார்த்திக் ஜி க்ரிஷ், ‘‘டக்கர் இந்த கால தலைமுறைக்கு ஏற்ற படம். அதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பல்வேறு பகுதிகளில் குடும்பம் குடும்பமாக சென்று பார்த்து ரசிகர்கள் மிகப்பெரிய ஆதரவை இந்த படத்திற்கு வழங்கி இருக்கிறார்கள். குறிப்பாக எனது சொந்த ஊரான மயிலாடுதுறையில் ரசிகர்களும், பொதுமக்களும் எனக்கு உற்சாக வரவேற்பு அளித்து எனது திரையுலக பயணத்திற்கு பாராட்டு தெரிவித்து வாழ்த்தினார்கள். அவர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.