‘அரண்மனை’ போல் இதுவும் எனக்கு தொடர் படங்களாக அமையும்! -‘தலைநகரம் 2′ பட விழாவில் சுந்தர் சி உற்சாகம்

சுந்தர் சி, பாலக் லல்வாணி நடிப்பில், வி இஸட் துரை இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் ‘தலைநகரம் 2.’

ரைட் ஐ தியேட்டர்ஸ் (Right Eye Theatres) எஸ்.எம். பிரபாகரன் தயாரித்துள்ள இந்த படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் உற்சாகமாக நடந்தது. படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் இயக்குநர் துரை, ‘‘நான் யாரிடமும் துணை இயக்குநராகப் பணி புரியவில்லை. என்னை இயக்குநராக அறிமுகப்படுத்தியவர் சக்கரவர்த்தி சார். சுந்தர் சி சார் தான் எனக்கு ஆசிரியர். பல விஷயங்கள் அவரிடம் கற்றுக் கொண்டேன். அவருடன் பணியாற்றியது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய படத்தில் கதையைக் கேட்காமலேயே நடிக்க ஒப்புக் கொண்டார். நாங்கள் நீண்ட காலமாகப் பார்த்துக் கொள்ளவில்லை எனினும் எங்கள் பந்தம் மாறவே இல்லை. படம் நன்றாக வந்துள்ளது. அனைவரும் படத்திற்கு ஆதரவு தர வேண்டும்” என்றார்.

நடிகர் சுந்தர் சி, ‘‘ஆஸ்கர் ரவிச்சந்திரன் சாரிடம்தான் தலைநகரம் டைட்டில் இருந்தது. அவர் பெருந்தன்மையாகத் தந்தார். தலைநகரம் 2-ம் பாகத்தை நாம் எடுக்கலாம் என்று யார் சொன்னாலும் கேட்டிருக்க மாட்டேன். ஆனால், துரை சார் கேட்ட போது எனக்கு எந்த யோசனையும் இல்லை. உடனே ஓகே சொல்லி விட்டேன். அவரின் இருட்டு படம் மிக அருமையான திரைக்கதை. அந்த படத்தை அவர் எடுத்த விதம் எனக்கு மிகவும் பிடித்தது. இருட்டு வெற்றி தான் தலைநகரம் படத்திற்கு ஓகே சொல்ல வைத்தது. இன்னும் நான் படமே பார்க்கவில்லை. அவர் மீதான நம்பிக்கைதான் காரணம். சினிமாவை காதலிக்கும் இயக்குநர் அவர். ஒவ்வொரு ஃபிரேமையும் செதுக்கியிருக்கிறார். அரண்மனை போல் இந்தப்படமும் எனக்குத் தொடர் படங்களாக அமையும் என நம்புகிறேன்” என்றார்.

தயாரிப்பாளர் எஸ் எம் பிரபாகரன், ‘‘எங்கப்பாவுக்குப் பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைக்க வெண்டுமென்று ஒரு ஆசை உண்டு. அவர் ஆசைப்படி எங்களை ஆளாக்கினார். எனக்கு சினிமா மீது நிறைய காதல். நடிப்பு நமக்கு செட்டாகுது, நாம் ஒரு படம் தயாரிக்கலாம் என்று நினைத்தேன். துரை அண்ணா எனக்கு நீண்ட கால நண்பர். துரை அண்ணனிடம் பேசினேன். ஆனால் முதலில் நம் நட்பு கெட்டுவிடும் என மறுத்தார். என்னுடைய ஆர்வத்தைப் பார்த்து ஒப்புக்கொண்டார். யாரை கதாநாயகனாக்கலாம் என்று கேட்ட போது சுந்தர் சி அண்ணாவைச் சொன்னார். உடனே நம் படம் கண்டிப்பாக ஹிட்டாகுமென சொன்னேன். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். பல தடங்கல்களைத் தாண்டி இந்தப்படத்தை உங்கள் பார்வைக்குக் கொண்டுவருகிறோம். தொடர்ந்து நாங்கள் இணைந்து நல்ல படைப்புகள் தருவோம், எங்களை ஆதரிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

நிகழ்வில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குநர் சுப்பிரமணிய சிவா, இயக்குநர் சசி, நடிகர்கள் பரத், பிரேம், வம்சி, வெற்றி, ஜெஸ்ஸி ஜோஷ், பதிப்பாளர் ராம்ஜி, தயாரிப்பாளர் கதிரேசன், ஒளிப்பதிவாளர் கிச்சா, பாடலாசிரியர் மோகன்ராஜா, இயக்குநர் பேரரசு, நடிகை ஐரா உள்ளிட்டோரும் பேசினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here