‘நாதியத்த எங்களை சாதியத்தவங்களா ஆக்கிப்புடுங்கய்யா…’ ‘தமிழ்க்குடிமகன்’ படத்தின் அதிரவைக்கும் டிரெய்லர் வெளியீடு!

இயக்குநர் சேரன் கதைநாயகனாக நடிக்க, ‘பெட்டிக்கடை’, ‘பகிரி’ ஆகிய படங்களை இயக்கிய இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ள படம் ‘தமிழ்க்குடிமகன்.’

படத்தில் முக்கிய வேடங்களில் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர், லால், வேல ராமமூர்த்தி, துருவா, ‘மிக மிக அவசரம்’ ஸ்ரீபிரியங்கா, தீப்ஷிகா, அருள்தாஸ், ரவிமரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘விக்ரம் வேதா’ சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் திரையுலக‌ப் பிரபலங்கள் முன்னிலையில் ஆகஸ்ட் 14; 2023 அன்று நடந்தது.

நிகழ்வில் படத்தின் இயக்குந‌ர் இசக்கி கார்வண்ணன் ‘‘சாதி சார்ந்த வாழ்க்கை எப்படி இருக்கும் என்று இந்த படத்தில் காட்டுகிறோம். நான் சந்தித்த அனுபவங்களை படமாக எடுத்திருக்கிறேன். பிறக்கும் போது அனைத்து குழந்தைகளும் சமமே. வளர்ந்த பிறகு தான் சாதி என்ற ஏற்றத்தாழ்வு வருகிறது. சாதியம், குலத்தொழில் பற்றி பேசியிருக்கிறோம்” என்றார்.

படத்தின் நாயகன் சேரன், ‘‘புத்திசாலித்தனமான படம் இது. சாதிகளை ஒழிக்க வேண்டும் என்பது போன்ற‌ நிறைய நல்ல விஷயங்களை சொல்லியிருக்கிறோம்” என்றார்.

பாடலாசிரியர் விவேகா, ‘‘அனைவரது வாழ்க்கையிலும் தாலாட்டு முதல் ஒப்பாரி வரை இசை கூடவே வரும். இந்த படத்தில் ஒப்பாரி பாடல் ஒன்றை நான் எழுதியுள்ளேன். சாம் சி.எஸ். உணர்ச்சிப்பூர்வமாக இசையமைத்துள்ளார்” என்றார்.

நடிகர் சரத்குமார், ‘‘அன்புச் சகோதரர் சேரன் நடித்த ‘தமிழ்க்குடிமகன்’ அனைவரும் பார்க்க வேண்டிய படம். உண்மை நிலையை எடுத்து கூறும் படம். குலத்தொழில் பற்றி பேசியிருக்கிறார்கள். அந்த முறையை உடைக்கின்ற படமாக இந்த படம் இருக்கப் போகிறது. படம் வெற்றியடை வாழ்த்துகிறேன்” என்றார்.

நடிகர் பொன்வண்ணன், ‘‘எனக்கு இசக்கி கார்வண்ண‌னை பல வருடங்களாக தெரியும். சினிமாவைப் பற்றி பேசுவோம். ஒரு நாள் தொலைபேசி மூலம் என்னை தொடர்புகொண்டு ‘ஒரு கதை இருக்கு வாங்க சொல்லணும்’ என்று கூறி இக்கதையை கூறினார். அதன் பிறகு இந்த திரைப்படத்தில் நடிக்க சேரன், லால் என சரியான நடிகர்களை தேர்ந்தெடுத்தார். இயக்குந‌ருக்கு மிக முக்கியமானது கதைக்கான நடிகர்களை தேர்ந்தெடுப்பது தான். அதற்கடுத்து இசையமைப்பாளர் முக்கியம். இந்த படத்தில் பாடல்கள் மிகக் குறைவு, ஆனால் பின்னணி இசை மிக முக்கியம் என்று சொல்லலாம்.

கதையில முதல் ஃபிரேமில் இருந்து கடைசி ஃபிரேம் வரை நம்மை எதைப் பற்றியும் யோசிக்கவிடாமல் வைப்ப‌து மிகவும் அவசியம். அது இந்த படத்தில் முழுமையாக நிறைவேறியுள்ளது என்று நினைக்கிறேன். ஒரு பார்வையாளனாக, ஒரு ரசிகனாக இந்த திரைப்படத்தை ரசித்து பார்த்தேன்” என்றார்.நாயகி தீப்ஷிகா, எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி, இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., நடிகர் துருவா, எழுத்தாளர் மு. ராமசாமி, நடிகர் ரவிமரியா, நடிகர் அருள்தாஸ், இயக்குந‌ர் மாரிசெல்வராஜ் உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here