சுவாரஸ்யமான கார்டு விளையாட்டு விபரீதமாகி உயிர்களை காவு வாங்குகிற கதை.
நண்பர்கள் சிலர் ஜாலியாக டேரோட் கார்டுகளை வைத்து விளையாடுகிறார்கள். விளையாட்டு விபரீதமாகிறது. அவர்கள் தேர்ந்தெடுக்கும் கார்டுகளில் இருக்கிற பேயின் உருவம் நிஜத்தில் தோன்றி அவர்களை பயமுறுத்திக் கொல்கிறது. இறந்தவர்கள் போக மிச்சமிருப்பவர்கள் அந்த பயங்கரமான சூழலிலிருந்து உயிர் பிழைக்க சில வழிகள் இருப்பதை தாமதமாக புரிந்துகொள்கிறார்கள். அப்படி அவர்கள் புரிந்து கொண்டது என்ன? புரிந்து கொண்டதை பயன்படுத்தி அவர்களால் உயிர் பிழைக்க முடிந்ததா இல்லையா என்பதே மீதி கதை… எழுத்து & இயக்கம் Spenser Cohen and Anna Halberg
1992 ஆம் ஆண்டு நிக்கோலஸ் ஆடம் எழுதிய ‘ஹாரர்ஸ்கோப்’ எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.
உற்சாகமாக கார்டு விளையாடுபவர்கள் பேய்களால் தாக்கப்படுவது, கொல்லப்படுவது என நீளும் ஆரம்ப காட்சிகள் பயத்தை தூண்டிவிட, பேய்களிடமிருந்து அவர்கள் தப்பிக்கப் போராடும் காட்சிகள் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் கடந்தோடுகின்றன. லிஃப்டில் மாட்டிக் கொண்ட ஒருவர் படும் பாடு அவர் தப்பிப்பாரா இல்லையா என்ற தவிப்பு தொற்றிக் கொள்கிறது. அவருக்கு என்னவானது என்பது கிளைமாக்ஸில் தெரியவருகிறது.
ஒவ்வொரு பேயும் ஒவ்வொரு விதமாக இருப்பது, ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக கொல்வது என தொடரும் காட்சிகளுக்கு ஜோசப் பிஸ்ராவின் பின்னணி இசை வேகம் தந்திருக்க, Harriet Slater, Adain Bradley, Avantika, Wolfgang Novogratz, Humberly González, Larsen Thompson and Jacob Batalon என நடிகர்கள், நடிகைகளின் பொருத்தமான நடிப்பும் லி ஸ்மோல்கினின் ஒளிப்பதிவும் கதைக்களத்தை பலப்படுத்தியிருக்கிறது.
Avantika தமிழ், தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த நடிகை என்பது முக்கிய செய்தி. நடிகை பூமிகாவையும் துஷாரா விஜயனையும் சேர்த்துச் செய்ததை போலிருக்கும் அவரது அழகு அசத்துகிறது.
Tarot திகில் பட விரும்பிகளுக்கான விஷுவல் விருந்து.