புளியோதரை பட்ஜெட்டில் செய்த மட்டன் பிரியாணியாக பார்த்திபனின் ‘டீன்ஸ்.’
டீனேஜின் தொடக்கத்திலிருக்கும் 13 பேர், கிளாஸை கட்டடித்துவிட்டு ஜாலியாக வெளியில் கிளம்புகிறார்கள். அவர்கள் போக நினைத்தது ஒரு இடம், ஆனால் போய்ச் சேர்ந்தது ஆள் நடமாட்டமில்லாத, பேய் பிசாசுகள் திரிவதாக நம்பப்படுகிற வெட்ட வெளி. அந்த சூழ்நிலை அவர்களுக்குள் பயத்தையும் பதற்றத்தையும் தர, அடுத்தகட்டமாக ஒவ்வொருவராக காணாமல் போகிறார்கள். கதையில் விறுவிறுப்பு கூடுகிறது.
ஏன் காணாமல் போகிறார்கள்? காணாமல் போகிறவர்களுக்கு என்ன நடக்கிறது? என்பதையெல்லாம் கண்டுபிடிக்கிறார் வானியல் விஞ்ஞானியாக பார்த்திபன்.
இடைவேளை வரை பொட்டல் வெளி, காளி கோயில், அமானுஷ்யம் என போக்குகாட்டிவிட்டு அதன்பின் ஏலியன், விண்கலம் அதுஇதுவென அறிவியல் சங்கதிகளை அப்லோடு செய்திருக்கிறது பார்த்திபனின் ஸ்கிரீன்பிளே.
டீன்ஸ் 13 பேரும் மிரள்வது, அழுவது, ஓடுவது என தங்களால் இயன்றதைச் செய்திருக்கிறார்கள். அதில் ஒரு ஜோடி, அந்த நெருக்கடியான சூழலில் தங்கள் காதலைப் பரிமாறிக் கொள்ளும் காட்சியில் இருக்கிறது மெல்லிய உயிரோட்டம்.
விஞ்ஞானியாக வருகிற பார்த்திபன் நான்கைந்து கம்யூட்டர்களை வைத்துக்கொண்டு எளிமையான ஆய்வுக்கூடத்தில் அமர்ந்தபடி ஆராய்ச்சி என்ற பெயரில் ஏதேதோ செய்கிறார். புல்லட்டில் அங்குமிங்கும் பயணிக்கிறார். அதே புல்லட்டை ஆய்வுக் கூடமாக்கிக் கொண்டு வேற்றுக்கிரக விண்கலத்துடன் தொடர்பு கொள்கிறார். அதெல்லாம் சிறுபிள்ளைத்தனமாக இருந்தாலும், ஜாலி கேலி நக்கல் நையாண்டி என தனது வழக்கமான ஸ்டைலை தூக்கிப்போட்டு விட்டு வேறொரு பரிமாணத்தில் களமாடியிருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.
யோகிபாபு ஒன்றிரண்டு காட்சிகளில் வந்துபோகிறார். இன்னும் கொஞ்சம் சிரிப்பு மூட்டும்படி அவருக்கான காட்சிகளை அமைத்திருக்கலாம்.
பொட்டல் காடு, புல்வெளி, புதர் என கண்ணுக்கு சிக்கியவற்றையெல்லாம் வாரிச் சுருட்டி கேமராவுக்குள் அடைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கவாமிக் யூ.ஆரி.
காட்சிகளின் நீள அகலம் குறைவாக இருப்பதால் அதற்கேற்ற பின்னணி இசையைத் தந்திருக்கும் இமான், ‘பிப்லி பிப்லி’ பாடலில் எனர்ஜியை பெருமளவு ஏற்றியிருக்கிறார். அந்த பாடலுக்கு டீன்ஸோடு பிக்பாஸ் ஜோவிகா இணைந்து போட்டிருக்கும் ஆட்டத்தில் இளமைத்துடிப்பு அதிகம். ஸ்ருதிஹாசன் குரலில் ஹைவோல்டேஜ் மின்சாரம் இருப்பதை உணர்த்துகிறது ‘ஹே நைனிகா’ பாடல்.
ஏலியன், ஸ்பேஸ்ஷிப் என்றெல்லாம் உருவாக்கப்பட்ட கதையம்சம் ஓரளவு இன்ட்ரெஸ்டிங்தான். அதற்கான பிரமாண்டம் காட்சிகளில் இல்லாததால், சிறுவர்களை வைத்து உருவான டீன்ஸ், அவர்கள் விளையாடும் வீடியோ கேம் போலவே டெலிவரியாகியிருக்கிறது.
இருந்துவிட்டுப் போகட்டும்… தொடர்ந்து வித்தியாசமான படைப்புகளைத் தருகிற பார்த்திபன் இப்போதும் அதையே செய்திருப்பதற்காக வழக்கம்போல் நாமும் பாராட்டி விடலாம்.
இன்னொரு முக்கிய சேதி… உங்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ; உங்கள் வீட்டு டீன்ஸுக்கு கண்டிப்பாக பிடிக்கும் இந்த டீன்ஸ்!