தலைக்கு வந்தது தலைமுறைக்கே உதவுது! -இப்படி ஒற்றை வாக்கியத்தில் சொல்லிவிட முடிகிற கதை.
நான்கு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சிலபல சம்பவங்களின் தொகுப்பாக ‘தலைக்கவசமும் 4 நண்பர்களும்.’
சென்னையின் குறிப்பிட்ட ஒரு குப்பத்தில் வசிக்கும் இளைஞர்கள் நான்கு பேர் அவரவர் திறமைக்கேற்ற வெவ்வேறு வேலைகளில் ஈடுபடுகிறார்கள். அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் குப்பத்து மக்களுக்கு உதவவும் முயற்சிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவர்களிடம் தலைக்கவசம் அதாவது ஹெல்மெட் ஒன்று வந்து சேர்கிறது. அதன் மூலம் பெரியளவிலான சிக்கல்களை சந்திக்கும் சூழ்நிலை உருவாகிறது. அந்த சூழ்நிலையை அவர்கள் சமாளித்து மீண்டபின், அதே ஹெல்மெட் அந்த குப்பத்தை கோபுரமாக்குகிற வாய்ப்பையும் உருவாக்கித் தருகிறது!
இப்படியொரு சுவாரஸ்யமான கதைக்களத்தை உருவாக்கி… அந்த ஹெல்மெட் அவர்களிடம் எப்படி வருகிறது? அது என்ன மாதிரியான சிக்கல்களை உருவாக்குகிறது? அதிலிருந்து அவர்கள் எப்படி மீள்கிறார்கள்? குப்பம் கோபுரமாவது எப்படி? என்ற கேள்விகளுக்கு சற்றே பரபரப்பான திரைக்கதை மூலம் பதில் சொல்கிறார் இயக்குநர் வி.எம். ரத்னவேல். (சுந்தர்.சி.யின் சிஷ்யர் இவர்.) கதையோட்டத்தின் இடையில் கண்ணியம் துளியும் மீறாத முக்கோண காதலும் பயணிக்கிறது.
குப்பத்துவாசியானாலும் நன்கு படித்தவன், ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணியாளன் என ஸ்மார்ட் லுக்கில் வலம் வருகிறார் கதைநாயகன் ஆனந்த் நாக். முதலாளியின் பெண் தன்னை விரும்ப, தனக்கு இன்னொரு பெண் மீது காதல் வர அந்த சூழ்நிலை நெருக்கடியை முகபாவங்களால் உணர்த்துவது, தன் கையில் சிக்கிய ஹெல்மெட் மூலம் குப்பத்து மக்களுக்கு நன்மை செய்ய வாய்ப்பு கிடைக்கும் என்பதை உணர்ந்து சந்தர்ப்பத்தை சாதுர்யமாக பயன்படுத்துவது என அலட்டலற்ற நடிப்பால் கவர்கிறார். நண்பர்களோடு உற்சாக ஆட்டமும், காதலியோடு டூயட்டும் உண்டு.
பளபளக்கும் தேகமும் படபடக்கும் விழிகளுமாய் ஸ்வேதா டாரதி. தன் நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞன் மீது காதல் வசப்படுவது, அவன் கொண்டு வந்த எளிமையான தயிர் சாதத்தை தேவாமிர்தம் என்று சொல்லி சாப்பிடுவது, காதல் கைகூடாது என்பதை உணர்ந்து தெளிவான முடிவெடுப்பது என அவருக்கு கொடுக்கப்பட்ட அளவான காட்சிகளில் அழகான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.
காதலாகி கசிந்துருகும் வழக்கமான வேடத்தில் ரேணுகா பதுளா. நாயகனுக்கு நிகரான உயரம், உடைகளில் வசீகரம், பாடலில் பூமிக்கு நோகாத நடனம் என அவரது பங்களிப்பு கச்சிதம்.
நண்பர்களாக வருகிற புதுமுகங்கள் ராஜேஷ், ஶ்ரீஜித், விக்கிபீமா மூவரின் நடிப்பும் நேர்த்தி.
அரசியல்வாதியாக ஓஏகே.சுந்தர், வில்லனாக இயக்குநர் ரத்னவேல் மற்ற பாத்திரங்களில் தளபதி தினேஷ், கே.எஸ்.ஜி. வெங்கடேஷ், மீசை ராஜேந்திரன், மணிமாறன், செந்தீ அவரவர் பங்களிப்புக்கு தேவையானதை சரியாகச் செய்திருக்கிறார்கள்.
அருண்பாரதியின் செழுமையான வரிகளில், ராஜ்பிரதாப் இசையில் பாடல்கள் மனதில் பதியமறுத்தாலும் போகிறபோக்கில் ரசிக்க வைக்கிறது.
ஒளிப்பதிவில் சீனு ஆதித்யாவும், படத்தொகுப்பில் சேதுரமணனும் நிறைவான உழைப்பை தந்திருக்கிறார்கள்.
காதல் டிராக்கில் ஆழமில்லாதது, சுலபத்தில் யூகிக்க முடிகிற காட்சிகள் படத்தின் பலவீனம். என்றாலும்,
குப்பத்துவாசிகள் என்றால் பொறுக்கிகளாக, ரவுடிகளாக காட்டுகிற வழக்கத்தை மாற்றி நல்லவர்களாக, உழைத்துப் பிழைப்பவர்களாக, சமூக சேவை ஆர்வலர்களாக காட்டியிருப்பது தனித்துவம்!