தப்புத் தண்டா, அடிதடி, வெட்டுக் குத்து, ரத்தச் சகதி என எல்லாவற்றிலும் புகுந்து புறப்பட்டு, ஒருகட்டத்தில் அதையெல்லாம் விட்டு விலகியிருக்கும் ‘ரைட்’டை, மீண்டும் தூண்டிவிட்டு ரத்தவாடை காட்டி ‘ராங்’கான ரூட்டுக்குள் இழுத்துவிடுகிறது காலச்சூழல்.
சிட்டியை எனக்கு இதுவரை, உனக்கு அதுவரை என எல்லை பிரித்து தாதாயிஸத்தால் கட்டியாள்கிற, மனிதத்தன்மையை மொத்தமாக தூக்கிப்போட்டுவிட்ட சிலருக்கு ரைட் பொது எதிரியாகிறான். அவர்கள் அவனை போட்டுத்தள்ள விதவிதமாக வியூகம் வகுக்கிறார்கள்.
ரைட் அதையெல்லாம் எப்படி சமாளிக்கிறான், அவர்களுக்கு எப்படி சமாதி கட்டுகிறான் என்பதே கதைக்களம்… இயக்கம் துரை வி இஸட்
ஆக்ஷன் காட்சிகளில் மாஸ் ஹீரோக்களுக்கு சமமான கெத்து காட்டியிருக்கிறார் ‘ரைட்’டாக வருகிற சுந்தர் சி. அதையெல்லாம் ரசிக்கும்படி செய்திருப்பதை பாராட்டாமல் விடமுடியாது. எதிரிகளை கொன்று குவிப்பதில் அவர் கையாளும் வழிமுறைகள் குரூரத்தின் உச்சம்!
படம் முழுக்க வன்முறை கொடிகட்டிப் பறந்தாலும் காட்சிகள் பரபரப்பாக விறுவிறுப்பாக நகர்வதை மறுப்பதற்கில்லை. அந்த பரபரப்பிலும் விறுவிறுப்பிலும் ஜிப்ரானின் பின்னணி இசைக்கும் பெரியளவில் பங்கிருக்கிறது.
நாயகி பாலக் லால்வானி கவர்ச்சியும் தனக்கு நடிக்க வரும் என்பதையும் காட்டியிருக்கிறார். இன்னொரு நாயகியாக வருகிற ஐராவின் அழகும் ஈர்க்கிறது.
‘பாகுபலி’ பிரபாகர், தம்பி ராமையா, விஜய் சத்யா என ஏகப்பட்ட நடிகர்கள்… அவர்களில் ஒருவரும் நடிப்புப் பங்களிப்பில் குறைவைக்கவில்லை.
தலைநகரம் முதல் பாகம் பார்க்காதவர்களுக்கு இந்த 2-ம் பாகத்தின் கதையைப் புரிந்துகொள்வது சிரமமாக இருக்குமோ என யோசிக்கவே தேவையில்லை. உங்களுக்கு தீப்பிடித்தது போன்று வேகமெடுக்கும் திரைக்கதையோடு கூடிய வன்முறைப் படங்கள் பிடிக்குமென்றால் தலைநகரத்துக்கு டிக்கெட் போட தாராளமாக பர்ஸ் திறக்கலாம்.