‘தண்டட்டி’ எனப்படும் கனமான ஆபரணத்தை காதுகளில் சுமந்து திரிகிற தேனி மாவட்ட மக்களின் வாழ்வியலை மையப்படுத்திய மண்மணம் மாறாத படைப்பு; போனஸாக காமெடி கலகலப்பு
அந்த வயது முதிர்ந்த பெண்மணி இறந்துபோகிறார். அவரது காதுகளில் தொங்கும் சில லட்ச ரூபாய் மதிப்புமிக்க ‘தண்டட்டி’யை அவருடைய மகனும் மகள்களும் தங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்; திட்டமிடுகிறார்கள். உறவினர்கள், ஊர்க்காரர்கள், அக்கம் பக்கத்தினர் என ஏராளமானோர் கூடியிருக்கும் சுழலில் அந்த தண்டட்டி காணாது போகிறது.
வேறு ஒரு காரணத்துக்காக அந்த இடத்திற்கு வந்திருக்கும் காவல்துறை அதிகாரிக்கு, தண்டட்டியை திருடியது யார் என கண்டுபிடிக்கும் பொறுப்பு தொற்றிக் கொள்கிறது. விசாரணையை தொடங்குகிறார். கதைக்களம் சூடுபிடிக்கிறது… சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லாமல் நகர்கிறது… தண்டட்டி யாரால் களவாடப்பட்டது என்பது கிளைமாக்ஸ். இயக்கம் ராம் சங்கையா
கதையின் நாயகியாக ரோகிணி. தண்டட்டி அணிந்த வயதான பெண்மணி கதாபாத்திரத்தில் தளர்ந்த நடை, தழுதழுத்த குரலில் வசன உச்சரிப்பு என கச்சிதமாய் பொருந்தியிருக்கிறார்.
காவல்துறை பணியில் உணர்ச்சிவசப்பட்டு, குற்றவாளிகளை தன் அதிகார எல்லைதாண்டி தண்டித்து துறை ரீதியான கண்டனங்களை சம்பாதிப்பவராக அறிமுகமாகும் முதல் காட்சியிலேயே கலகலப்பூட்டி கவனம் ஈர்க்கிறார் பசுபதி. மக்களின் அடாவடி அராஜகத்தை தாக்குப்பிடிக்க முடியாதென்பதால் போலீஸ் நுழைய பயப்படுகிற கிடாரிப்பட்டிக்குச் சென்று, தாறுமாறான மனநிலை கொண்ட மக்களிடம் சிக்கி அவதிப்படும்போது அந்த கலகலப்பை தக்க வைக்கிறார். கிளைமாக்ஸின் வெளிப்படுத்தியிருக்கும் தேர்ந்த நடிப்பு நெகிழ்ச்சி.
ரோகிணியின் மகனாக வருகிற விவேக் பிரசன்னாவின் குடிபோதை சலம்பல் ரசிக்க வைக்கிறது. தன்னை சீண்டுபவர்களை சாபமிடும் ஆசாமிக்கு அவர் தருகிற தண்டனையைத்தான் ஜீரணிக்க இயலவில்லை.
ரோகிணியின் மகள்களாக வருகிற தீபா சங்கர், பூவிதா, ஜானகி, செம்மலர் அன்னம் உள்ளிட்டோரின் நடிப்பும் கதையோட்டத்தின் தேவையை சரியாய் பூர்த்தி செய்திருக்கிறது.
பேரனாக வருகிற ‘மண்டேலா’ முகேஷின் பாத்திரத்தின் தன்மையுணர்ந்த நடிப்பு தனித்து தெரிகிறது.
தற்கொலை செய்துகொள்ளும் நோக்கத்தில் விஷம் குடித்தவர் பிழைத்துக் கொள்ள வேறு இருவர் பலியாவது, தண்டட்டி அணிந்த கிழவிகளின் ஒப்பாரியிலிருக்கும் கிண்டல் கேலி, விஷமப் பேச்சை வெள்ளந்தித் தனத்துடன் டெலிவரி செய்யும் ‘கோளாறு’ பாட்டி, சாவு வீட்டில் உணவு உபசரிப்பை எதிர்பார்த்து கலாட்டா செய்யும் முரட்டு மீசை ஆசாமி, தன்னிடம் வாலாட்டுபவர்களை சாபமிடும் வாலிபன் என கதைக்களத்தை சிரித்துக் கடக்க ஏராளமான விஷயங்கள் படத்தில் உண்டு.
கீழத் தெரு, மேலத்தெரு, சாதிப் பிரிவினை, காதலர்களை அடித்துத் துவைத்து துவம்சம் செய்வது என கதையின் போக்கில் கரடுமுரடான கண்ணீர் அத்தியாயங்களும் அணிவகுக்கின்றன. அந்த காட்சியை அம்மு அபிராமியின் எளிமையான நடிப்பு அர்த்தமுள்ளதாக்குகிறது.
மகேஷ் முத்துசுவாமியின் ஒளிப்பதிவையும், கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் உணர்வுபூர்வமான பின்னணி இசையையும் குறிப்பிட்டுப் பாராட்டலாம்!
தண்டட்டி – அதன் எடையைப் போலவே கனம்