‘தூக்குதுரை’ சினிமா விமர்சனம்

காமெடி பேய்ப்பட வரிசையில் இன்னுமொரு படைப்பு.

மன்னர் பரம்பரை வழிவந்த இனியாவின் குடும்பத்திடம் பழங்கால தங்க கிரீடம் இருக்கிறது. திருவிழாவின்போது கிரீடம் வெளியில் எடுக்கப்படுவதும் மக்கள் தரிசித்தபின் பெட்டிக்குள் வைத்து பூட்டப்படுவதும் வழக்கம். அந்த கிரீடத்தை ஒரு கும்பல் குறிவைத்து திருடுகிறது. அப்போதுதான் கிரீடம் போலியானது என்பதும், 20 வருடங்கள் முன்பே ஒரிஜினல் கிரீடம் காணாமல் போன விவரமும் ஊர் மக்களுக்கு தெரியவருகிறது.

தங்க கிரீடம் காணாமல் போனது எப்படி, அது இப்போது எங்கிருக்கிறது என்பதெல்லாம் ஃபிளாஷ்பேக்…

ஒருவழியாக கிரீடம் ஊரிலுள்ள பாழடைந்த பெருங்கிணற்றில், பேயொன்றின் கட்டுப்பாட்டில் இருப்பது தெரியவர அதை மீட்டெடுக்க ஊரே கூடுகிறது.

இப்படி பயணிக்கும் கதையில் கிரீடத்துக்கும் அந்த பேய்க்கும் என்ன தொடர்பு என்பதும், கிரீடத்தை மீட்டெடுக்க முடிந்ததா என்பதும் மிச்ச சொச்ச கதை. இயக்கம் டென்னிஸ் மஞ்சுநாத்

இனியா ராஜ பரம்பரை வாரிசு என்பதற்கே செழுமையாய் இருக்கிறார்; புன்னகையில் வெளிச்சம் சிந்துகிறார். காதலனுடன் ஓட்டம், அவனைப் பறிகொடுத்து மாமனோடு வாழ்க்கை என அவரது நாட்கள் தறிகெட்டு ஓடினாலும் பல வருடம் கழித்து ஊருக்குத் திரும்பி, பழைய கம்பீரத்தோடு மக்களோடு சேர்ந்து கிரீடத்தை மீட்க களமிறங்குகிறார். துடிப்பான நடிப்பால் ஏற்ற பாத்திரத்துக்கு உயிரூட்டுகிறார்.

திருவிழாவில் திரை கட்டி சினிமா போட்டு எளிமையான பிழைத்துக் கொண்டிருக்கிற யோகிபாபு தன் தகுதிக்கு மீறி இனியாவை காதலித்து, பரிதாப முடிவைச் சந்தித்து. பேயாக வலம் வந்து ஊர் மக்களின் நிம்மதியைக் கெடுக்கிறார். சீரியஸான பாத்திரத்திலும் லேசாக சிரிப்பூட்டுகிறார்.

மகேஷ், பாலசரவணன், சென்றாயன் கூட்டணி கிரீடத்தை அபகரிக்க எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் கொஞ்சமாய் கலகலப்பூட்ட, அவர்களுடன் மொட்டை ராஜேந்திரனும் இணைந்துகொள்ள காமெடி கலாட்டாவின் சதவிகிதம் அதிகரிக்கிறது.

மாரிமுத்து, நமோ நாராயணன் என நன்றாக நடிப்பவர்கள் படத்திலிருக்கிறார்கள்.

கே.எஸ்.மனோஜின் இசை, ரவிவர்மாவின் ஒளிப்பதிவு திகில் திரில்லர் காட்சிகளின் பரபரப்புக்குத் தேவையான ஆதரவை அளவாய் தந்திருக்க, எடிட்டரின் கத்தரியும் கச்சிதமாய் உழைத்திருக்கிறது.

திரைக்கதையின் சுவாரஸ்யத்துக்காக இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் ‘தூக்குதுரை’யை தூக்கி வைத்துக் கொண்டாடியிருக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here